OUR CLIENTS
நடையாய் நடந்து ஓடாய் தேய்ந்தவருக்கு நீதி கிடைக்குமா?
நடையாய் நடந்து ஓடாய் தேய்ந்தவருக்கு நீதி கிடைக்குமா? Posted on 18-Jun-2018 நடையாய் நடந்து ஓடாய் தேய்ந்தவருக்கு நீதி கிடைக்குமா?

வேலூர், ஜூன் 18-

வேலூர் தாமோதரன் காலச்சக்கரம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது கூறியதாவது: நான் வேலூரில் கடந்த 1998&ல் சத்துவாச்சாரி சர்வே எண் 431/1பி&ல் நவாப் அலிகான் என்பவரிடம் 431/1பி 73 சென்ட் நிலத்தை கிரையம் பெற்றேன். இதற்கு முறைப்படி பட்டா பெறுவதற்காக கடந்த 2012ல் தாசில்தாரிடம் மனு கொடுத்தேன். அவரது உத்தரவின்படி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் சான்று பெற்றேன்.அதன்படி தாசில்தாரை மீண்டும் ஒரு மாதம் கழித்து தொடர்பு கொண்டு மனு அளித்தேன். தாசில்தார் சர்வேயர், விஏஓ, வருவாய் ஆய்வாளர் ஆகியோரை அனுப்பி நிலத்தை அளக்குமாறு உத்தரவிட்டார். அவர்களும் குழுவாக நிலத்தை அளக்க வந்தனர். இந்நிலையில் வேலூர் மாநகராட்சி 2&வது மண்டல குழு தலைவராக இருந்த ஏபிஎல். சுந்தரம் தூண்டுதலின் பேரில் நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர் சசிகலா நில அளவை பணியை நிறுத்தி விட்டார். இது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் இல்லை. நவாப்புக்கு சொந்தமான இடம் என்று நான் விளக்கி கூறினேன். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். தேசிய நெடுஞ்சாலை துறை மீதும் வழக்கு தொடர்ந்தேன். தேசிய நெடுஞ்சாலைத்துறை அஃபிடவிட் போட்டது. இதற்கிடையே எனக்கு சாதகமாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை, நெடுஞ்சாலை துறைகளின் இடம் இல்லை என்று பட்டா வழங்க வேண்டும் என்று மனு செய்தேன். அப்போது தாசில்தாராக இருந்த வில்சன் ராஜசேகர் இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு மனு எழுதி அனுப்பினார். 6 வழிச்சாலை, 4 வழிச்சாலைக்கு நாங்கள் இந்த இடத்தில் நிலம் எடுக்கவில்லை என்று தெளிவாக எழுதி பதில் அனுப்பியது. அதேபோன்று வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகமும் இந்த இடத்தை தாங்கள் எடுக்கவில்லை என்று சான்று அளித்துள்ளது. சர்வீஸ் ரோடு, ஆற்காடு ரோடு, கீரீன் சர்க்கிள் ரோடு இணையும் ரோடு போன்றவற்றை காண்பித்து முறைப்படி மனு செய்து உத்தரவு பெற்றேன். இதுதொடர்பாக பட்டா தரவும் தாசில்தார் வில்சன் ராஜசேகர் ஏற்பாடு செய்து குழுவோடு 10 பேருடன் வந்து இடத்தை அளந்தார். இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றமும் 8 வாரங்களில் பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்து இருந்தது.

இதனால் மீண்டும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர் மற்றும் தாசில்தார் அடங்கிய குழுவினருடன் வந்தனர். அவர்கள் என்னிடம் சில கேள்விகள் கேட்டனர். அதற்கு தகுந்த பதில் அளித்தேன். இன்னும் ஒரு வாரத்தில் பட்டா வழங்கி விடுவதாக தாசில்தார் வில்சன் ராஜசேகர் உறுதி கூறிச் சென்றார். அன்று மாலையே வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பொ.சங்கர் தாசில்தார் வில்சன் ராஜசேகரை மாவட்ட ஆட்சியரின் பொது மேலாளராக  பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். 428/2 சத்துவாச்சாரியில் உள்ள இடம்தான் அது என்று என்னை அலைகழித்தனர். பட்டா வழங்க வேண்டியதை நிராகரிப்பும் செய்தனர். இதையடுத்து நீதிமன்ற அவதிமப்பு வழக்கு தொடர்ந்தேன்.அதன்பிறகு மாவட்ட ஆட்சியராக இருந்த நந்தகோபால், சாந்தி ஆகியோர் பொய்யான வரைபடத்தை தயாரித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். சத்துவாச்சாரி சர்வே எண் 427ஐ மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சேர்த்து தவறாக காண்பித்துள்ளனர். ஆனால் வரைபடத்தை தென்றல் நகர் என்று மாற்றியமைத்து இருந்தனர். ஆனால் இன்று வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் சர்வே எண்:431ல் தான் உள்ளது. இதை தவறாகவே மாற்றியமைத்து உயர்நீதிமன்றத்தில் ஆவணமாக சமர்ப்பித்தனர். இதனால் எஃப்எம்பி ஸ்கெட்சை நான் சமர்ப்பித்தேன். அவர்கள் பொய் வரைபடத்தை தாக்கல் செய்துள்ளதாக நிரூபித்தேன்.

என்னுடையதுதான் உண்மையான வரைபடம் 431/1 பியில் உள்ளது என்று நிரூபிக்கவும் நான் தவறவில்லை. இந்த வரைபடத்தை முறைப்படி மாநகராட்சி அலுவலகத்தில் சீல் போட்டு கையொப்பத்துடன் வாங்கியுள்ளேன். அந்த ஒரிஜினல் நகல் வரைபடம் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து எடுத்தது என்னிடம் உள்ளது அவர்களுக்கு தெரியாது. இதில் சர்வே எண் 431/4ல் 14 ஏக்கர் 75 சென்ட். இதில் 13 ஏக்கர் 64 சென்ட் போக 1 ஏக்கர் 3 சென்ட் மீதம் உள்ளது.  இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நில எடுப்பில் எடுத்த ஆவணங்களின் நகலும் என்னிடம் உள்ளது. இந்நிலையில் கடந்த 1980ல் நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்தும் எஃப்எம்பி நகல் எடுத்துள்ளேன். ஆவண காப்பகத்தில் இருந்தும் நகல் பெற்றுள்ளேன். இது ராணுவ அலுவலகமாக இருந்த இடம். 1912 எஃப்எம்பி என்னிடம் உள்ளது. இந்த இடத்தில் ராணுவ அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், நவாப் தங்குவதற்கு நவாப் சிற்றுண்டி மற்றும் காபி அருந்த ராஜா ஷாப் என்று இடம் ஒதுக்கப்பட்டிருந்ததும் 431 சர்வே எண்ணில் எஃப்எம்பியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 1980ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கைப்பற்றிய அவார்டு காப்பி என்னிடம் உள்ளது. எஃபஎம்பி ஆதாரமும் உள்ளது. இந்த எஃப்எம்பியில் அப்போதைய மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் கையொப்பம் இட்டுள்ளனர். 

1980ல் இது தொடர்பாக அவார்ட் என்னிடம் உள்ளது. அதுதான் ஆதாரம். 1 ஏக்கர் 3 சென்ட்காலி இடம் நவாப் பெயரில் இன்று வரை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த இடம் புறம்போக்கு இடம் என கூறினார் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால். அது பட்டா நிலம் என்று நிரூபித்து விட்டேன். இதற்கு அப்போதைய சத்துவாச்சாரி கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் சான்று அளித்துள்ளார். பட்டாவுக்காக மனு செய்த போது இதை விசாரித்து விட்டு அப்போதைய வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், விஜயன் பட்டா கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்து கோட்டாட்சியருக்கு கோப்பு அனுப்பி விட்டனர்.  கோட்டாட்சியர் பட்டா வழங்கலாம் என்று அந்த கோப்பை மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பினார். மாவட்ட வருவாய் அலுவலர் பட்டாவை நிராகரித்தார். இதனால் தாசில்தார், ஆர்டிஓ, டிஆர்ஒ, கலெக்டர் ஆகியோர் மீது 4&வது முறையாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கு தொடர்ந்தால் பட்டா தருவதாக கூறினர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வெற்றி பெற்றும் பட்டா தராமல் இழுத்தடித்தனர். இதனால் அவர்கள் 4 பேர் மீதும் 4&வது முறையாக கடந்த 17.10.2013, 18.11.2013ல் அப்பீல் செய்த வகையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனபால் கடிதம் அனுப்பினார். அந்த கடித்ததில் அப்பீல் செய்து பட்டா வாங்கி கொள்ளுமாறு தெரிவித்தார். அந்த கடிதத்தையும், அப்பீலையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். இதன் அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே பட்டாவுக்கு விண்ணப்பித்திருந்தேன். இந்நிலையில் அப்பீல் இருப்பதாக கூறி அப்போதும் பட்டா தரவில்லை. இந்நிலையில் 5வது முறையாக வழக்கு தொடர்ந்துள்ளேன். அப்பீல் செய்திருந்தால் பட்டா வாங்கி கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு நிறைவு பெற்று தற்போதுள்ள மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையனிடம் கோப்புகள் வந்தன. இதுநாள் வரை மீண்டும் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்துகின்றார். இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். கடந்த 2015&ம் ஆண்டு முதல் வருமான வரியும் செலுத்துகிறேன். என் இடத்தில் உள்ள விளம்பர போர்டுக்காக 431/1 பியில் பேனர் வைத்த வகையில் 2014 முதல் வாடகையாக அந்த இடத்துக்கு மாதம்தோறும் ரூ.24 ஆயிரம் இன்று வரை தொடர்ந்து பெற்று வருகிறேன். பயன்பாடு, பராமரிப்பு என்னிடம் உள்ளது. சர்வே எண் 428 என்னுடையது இல்லை என்பதற்கு ஆதாரங்கள் நான் வைத்துள்ளேன். நடைமுறை எஃப்எம்பியும் உள்ளது. பொய் வரைபடத்தை முன்னாள் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் சமர்ப்பித்துள்ளார். எனக்கு பண வசதி இல்லாததால் என்னால் பட்டா வாங்க முடியவில்லை. இதனால் இழுபறியில் உள்ளது. கவனிக்காததால் இவ்வாறு அலைகழிக்கின்றனர். இதில் முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த மணிவண்ணனும் சதி செய்தார். ஆனால் தற்போதுள்ள மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் வழக்கை கிடப்பில் போட்டுள்ளார். சத்துவாச்சாரி இடம் 1912 முதல் சர்வே எண் 424 முதல் 437 வரை பட்டா மாற்றம் ஏதும் நிகழவில்லை என்றும், பசலி எண் 3&ல் கணக்கு பராமரிக்கப்படுகிறது என்று அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் சான்றிதழ் வழங்கியுள்ளார். ஆதலால் சர்வே எண் மாறாமல் உள்ளது வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளதும், சர்வே எண்கள் அப்படியே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆதலால் எனக்கு ஏதாவது பிரச்னை ஏற்படுமானால் அதற்கு மாவட்ட நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேட்டியின்போது தெரிவித்தார். நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும்போதுதான் இதன் உண்மை நிலை தெரியவரும்.

Label