OUR CLIENTS
வாகனங்கள் வாங்கும்போதே பதிவு சான்று பெற ஏற்பாடு!
வாகனங்கள் வாங்கும்போதே பதிவு சான்று பெற ஏற்பாடு! Posted on 18-Jun-2018 வாகனங்கள் வாங்கும்போதே பதிவு சான்று பெற ஏற்பாடு!

சென்னை, ஜூன் 18-

 வாகனம் வாங்கும் இடத்திலேயே அதற்குரிய பதிவுச்சான்று பெறும் புதிய திட்டம் தமிழகத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாகனப்பதிவு, லைசென்ஸ் பெறுவது, தகுதிச்சான்று விண்ணப்பிப்பது மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளில் உள்ள சிரமங்களை போக்க, போக்குவரத்து துறையில் மத்திய அரசு பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. தற்போதுள்ள நடைமுறைப்படி, ஆய்விற்காக வாகனத்தை ஆர்டிஓ அலுவலகத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதேபோல், வாகனம் வாங்கியதற்கான ஆவணம் மற்றும் அடையாளச் சான்றுடன் பதிவுக்காக விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு பின்புதான் பதிவுச்சான்று வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையால், சான்றிதழ் பெற நீண்ட நாள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதை சரிசெய்ய மத்திய அரசு தற்போது புதிய இணையதள சர்வரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விண்ணப்பித்த அன்றே பதிவுச்சான்று மற்றும் நம்பர் பெற முடியும். இருப்பினும் வாகனப்பதிவை இதைவிட எளிதாக்கும் வகையில், வாகனம் வாங்கும் இடங்களிலேயே பதிவுச்சான்று பெறும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.முதல்கட்டமாக டெல்லி மற்றும் ஆந்திராவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, பைக், கார் ஆகிய போக்குவரத்து அல்லாத வாகனங்கள் மட்டும், வாகனம் வாங்கும் ஷோரூம் அலுவலகங்களிலேயே பதிவு செய்து கொடுக்கப்படுகிறது. இந்த நடைமுறையால், வாகனங்களை ஆர்டிஓ அலுவலகத்துக்கு எடுத்து செல்ல வேண்டாம். அதற்கு மாறாக, சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட ஆர்டிஓ அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர், அந்த ஷோரூம் சென்று வாகனத்தை ஆய்வு செய்வார். பின்னர் அவர் அனுமதியுடன் ஆன்லைன் மூலம் ஆர்டிஓவிற்கு ஆவணம் அனுப்பி வைக்கப்படும். அவர் கையெழுத்திட்டதும், வாகனம் வாங்கிய இடத்திலேயே மக்கள் பதிவுச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.இதனால் ஆர்டிஓக்களுக்கு பணிச்சுமை குறையும். அதேபோல் வாகனங்கள் ஆர்டிஓ அலுவலகத்துக்கு கொண்டு செல்வது தவிர்க்கப்படுவதால், சென்னை போன்ற நகர் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியும் குறையும். ஆனால், போக்குவரத்து துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி என்று கூறி, இத்திட்டத்துக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் அத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது ஆர்டிஓ அலுவலகங்களில் அதிக பணிச்சுமை உள்ளது. இதனால் பொதுமக்கள் அரசு சேவைக்காக ஆர்டிஓ அலுவலகங்களில் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர். எனவேதான் மத்திய அரசு இந்த புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. ஆந்திரா, டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் வாகனம் வாங்கும் இடத்திலேயே பதிவுச்சான்று பெறும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தனியார் வாகன உற்பத்தி உரிமையாளர்கள், ஷோரூம் டீலர்கள் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்டது. ஓரிரு மாதங்களில், முதல்கட்டமாக போக்குவரத்து அல்லாத வாகனங்கள், வண்டி வாங்குமிடத்திலேயே பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Label