OUR CLIENTS
விதிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பேருந்துகள்!
விதிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பேருந்துகள்! Posted on 19-Jun-2018 விதிமுறைகளை பின்பற்றாத  ஆம்னி பேருந்துகள்!

சென்னை, ஜூன் 19-

சென்னை மாநகரில் ஆம்னி பேருந்துகள் விதிமுறைகளை மீறி செயல்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பணிகளுக்காக லட்சக்கணக்கானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ரயில் பயணத்துக்கு அடுத்தபடியாக அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர்.

அரசு விரைவுப் பேருந்துகளுக்கு இணையாக மாநிலம் முழுவதிலும் இருந்து சென்னைக்கு 800 தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகை மற்றும் விழாக்காலங்கள், விடுமுறை நாள்களில் இந்த பேருந்துகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து விடுகின்றன. சென்னை கோயம்பேட்டில் செயல்படும் தனியார் ஆம்னி பேருந்து நிலையம், கடந்த சில ஆண்டுகளாக பணிமனையாகச் செயல்படுகிறது. சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்துகளில், சுமார் 70 சதவீதம் காவல் துறையினரின் எச்சரிக்கையை மீறி நகருக்குள் செல்கின்றன. இவை மதுரவாயல் புறவழிச்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடைய வேண்டும் என்பது விதிமுறை. இந்த பேருந்துகள், இரவு 10 முதல் காலை 6 மணி வரை மட்டுமே மாநகருக்குள் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த விதிமுறையை பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் பின்பற்றுவதில்லை.
மாநகருக்குள் வலம் வரும் ஆம்னி பேருந்துகள்: மாநகருக்குள் இந்த பேருந்துகள் புரசைவாக்கம், பாரிமுனை, மண்ணடி, மின்ட், ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தியாகராயநகர், வடபழனி, கே.கே.நகர், அசோக்நகர், கிண்டி, அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், போரூர், அம்பத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் நிறுத்தப்படுகின்றன.

மாலையில் இந்த பேருந்துகள்அங்கிருந்து புறப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து 100 அடி சாலை, கிண்டி, மீனம்பாக்கம், தாம்பரம் வழியாகப் பெருங்களத்தூர் செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கோயம்பேட்டில் தனியார் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதன் நோக்கம் சிதைந்துவிட்டது.

நெரிசலில் சிக்கித் தவிக்கும் அசோக்பில்லர்: கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் அரும்பாக்கம், வடபழனி, அசோக்பில்லர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட 6 இடங்களில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இந்த 6 பேருந்து நிறுத்தங்களும் ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதியற்ற நிறுத்தங்களாகும்.

குறிப்பாக, அசோக்பில்லர் பகுதி தனியார் ஆம்னி பேருந்து முனையமாகவே செயல்படுகிறது. இங்கு ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து சாலையை மறித்தபடி நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இங்கு ஆம்னி பேருந்துகளில் சரக்குகளை ஏற்றுவது, பயணிகளை ஏற்றுவது போன்ற காரணங்களாக நீண்டநேரம் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது.

மேலும், இங்குள்ள இரு மாநகரப் பேருந்து நிறுத்தங்களை மறித்தபடி ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மாநகரப் பேருந்துகள் அங்கு நிற்காமலேயே சென்றுவிடுகின்றன. இதனால் அங்கு மாநகரப் பேருந்துகளுக்காக பல மணி நேரம் பயணிகள் காத்து நிற்க வேண்டியதாகிறது.

ஏற்கெனவே ஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் மாநகரப் பேருந்து நிறுத்தம் அருகே ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றுவதற்கு நிறுத்தியதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு சில மாதங்களுக்கு முன்பு காவல்துறை அங்கு ஆம்னி பேருந்துகள் நிற்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

அனுமதியற்ற ஆம்னி பேருந்து நிறுத்தங்கள்: புரசைவாக்கம், பாரிமுனை, மண்ணடி, மின்ட், ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தியாகராயநகர், வடபழனி, கே.கே.நகர், கிண்டி, அடையாறு, போரூர், அம்பத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி, திருவான்மியூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளிலும் அனுமதியின்றி ஆம்னி பேருந்து நிறுத்தங்கள் செயல்படுகின்றன. இவற்றில் சில ஆம்னி பேருந்துகள் புறப்படும் இடங்களாகவே மாறியுள்ளன. காலை, மாலை நேரங்களில் அனுமதியற்ற பேருந்து நிறுத்தங்களில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படுவதால், அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது.

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் அனைத்தும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக இயக்கப்படும் நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகள் மட்டும் நகருக்குள் இயக்கப்படுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு இழப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், விதிமுறைகளை மீறி செயல்படும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கையை எடுத்தால்தான் பொதுமக்களை பாதிப்பில் இருந்தும், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்படும் இழப்பில் இருந்து மீளவும் முடியும் என்கின்றனர் மாநகரவாசிகள்.
சென்னையில் அனுமதியின்றி சாலைகளில் பயணிகளை ஏற்ற நிறுத்தப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதமாக ரூ. 200 மட்டுமே வசூலிக்கப்படுவதாக காவல்துறையினர் கூறுகின்றனர். சென்னை பெருநகரக் காவல்துறையின் கீழ் 129 போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த காவல் நிலையங்களில் நாள்தோறும் சுமார் 3 ஆயிரம் "நோ பார்க்கிங்' வழக்குகள் பதிவாகின்றன. இந்த வழக்குகளில் வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளுக்கு இத்தகைய அபராதம் விதிப்பது கண்துடைப்புக்காக பெயரளவில்தான் நடக்கிறது. அவை நகருக்குள் நுழையும்போதே தடுப்பதற்கான நடவடிக்கையை போலீஸார் எடுப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நாட்டிலேயே முதன்முறையாக சென்னை கோயம்பேட்டில் தான் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு தனி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள், தங்களின் வாடிக்கையாளர்களை கவர, கோயம்பேடு 100 அடி சாலையில் தனித்தனியாக பேருந்து நிலையங்களை அமைத்துள்ளன. பண பலமிக்க ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய பேருந்து நிலையங்களை வைத்துள்ளன. ஆனால் இந்த பேருந்து நிலையங்கள், அரசு வகுத்துள்ள பேருந்து நிலையத்துக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையோ, பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையோ கொண்டிருக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இதனால் இந்தப் பேருந்து நிலையங்கள் பாதுகாப்பு இல்லாதவை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏதேனும், இவற்றில் பெரிய விபத்துகள் நடைபெறுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், இந்த பேருந்து நிலையங்களை முழு கட்டமைப்பு கொண்டவையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Label