OUR CLIENTS
அரசுப் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் பெயரில் கட்டாய நன்கொடை வசூல்?
அரசுப் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் பெயரில் கட்டாய நன்கொடை வசூல்? Posted on 19-Jun-2018 அரசுப் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகம்  பெயரில் கட்டாய நன்கொடை வசூல்?

வேலூர், ஜூன் 19-

அரசுப் பள்ளிகளில் பெற்றோர்&ஆசிரியர் கழகம் என்ற பெயரில் அரசியல் பிரமுகர்கள் கட்டாய நன்கொடை வசூல் செய்துவருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடப்பு கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணமும், தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமல்லாது கூடுதல் கட்டணமும், நன்கொடையும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம், அதிக நன்கொடை வசூலித்தாலும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

இதுதொடர்பாக எவரும் புகார் தெரிவிப்பதில்லை. ஆனால், தற்போது அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளைப்போல பெற்றோர்&ஆசிரியர் கழகம் என்ற பெயரில் கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது.  பொதுவாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது பள்ளியில் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளின் கேள்வித் தாளுக்காக ரூ. 50, தேசிய கொடிக்கு ரூ. 10, பெற்றோர்&ஆசிரியர் கழகத்துக்கு ரூ. 50 என்ற கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதுமானது என்று கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது.

ஆனால், அந்தக் கட்டணத்தைக் காட்டிலும் அதிக கட்டணத்தை பெற்றோர்&ஆசிரியர் கழகம் என்ற பெயரில் ஆளும் கட்சியினர் பணத்தை வசூலித்துக் கொண்டு ஒரு பகுதியை பள்ளிக்கு கொடுத்துவிட்டு மீதி பணத்தை அவர்களே எடுத்துச் சென்றுவிடுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.  இதை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கண்டும் காணாமல் இருந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. 
சில பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னதாக மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு அவர்களை உடனடியாக பள்ளியில் சேர்க்காமல், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்துவிட்டு வருமாறு கூறி பெற்றோர்களை அனுப்பி வைக்கின்றனர். பெற்றோர்கள் அந்த முக்கிய பிரமுகரைச் சந்தித்து அவர் கேட்கும் பணத்தைக் கொடுத்த பிறகு அவர், பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கிறார். அதன் பின் சம்பந்தப்பட்ட மாணவர்கள் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

குறிப்பாக, ஆம்பூர் அருகே பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளில் இத்தகைய முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் இலவசமாக கல்வி கற்பதற்காகத்தான் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 
ஆனால் பெற்றோர்&ஆசிரியர் கழகம் என்ற பெயரில் கட்டாய நன்கொடை வசூலிப்பது, அதில் பெரும்பகுதி பணத்தை அந்த முக்கிய பிரமுகர்களே எடுத்துக்கொள்வதால், அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகளைப் போல அவர்கள் இயக்குவதாக பெற்றோர்கள் புலம்புகின்றனர்.

சில பள்ளிகளில் மட்டுமே அரசு நிர்ணயம் செய்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் கூடுதல் கட்டணமும், கட்டாய நன்கொடையும் வசூலிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. பள்ளியில் அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர் ஆகியோர் இல்லை. இதனால்தான் பெற்றோர்&ஆசிரியர் கழகம் சார்பாக பணியாளர்களை நியமிக்க நன்கொடை வசூலிக்கப்படுகிறது என்று கூறி தங்களுடைய செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். அவ்வாறு பெற்றோர்&ஆசிரியர் கழகம் சார்பாக பணியாளர்களை நியமிக்க முக்கிய பிரமுகர்களே பள்ளிக்கு நன்கொடை வழங்கலாம் என பெற்றோர்கள் கருதுகின்றனர். இதில் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே கூட நேரடியாக கூடுதல் கட்டணத்தை வசூல் செய்யக்கூடிய நிலமையும் உள்ளது. எனவே, கல்வித் துறை உயரதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து, தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Label