OUR CLIENTS
காஸ் விநியோகத்தில் தொடரும் குறைபாடுகள்!
காஸ் விநியோகத்தில் தொடரும் குறைபாடுகள்! Posted on 22-Jun-2018 காஸ் விநியோகத்தில் தொடரும் குறைபாடுகள்!

மதுரை, ஜூன் 22-

மதுரையில் காஸ் சிலிண்டர் விநியோகத்தில் தொடரும் குறைபாடுகளை அதிகாரிகள் சரி செய்வதுடன், விபத்து விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் காட்ட வேண்டும் என்று நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர்.

மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக சமையல் காஸ் மாறி இருக்கிறது. காஸ் சிலிண்டர் விநியோகத்தில் பல்வேறு குறைபாடுகள் தொடர்கதையாகி வருகிறது. வீட்டிற்கு சமையல் காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும்போது, பில் தொகையை விட ரூ.60 வரை அதிக பணம் வாங்குகின்றனர். கூடுதல் தொகை தர மறுத்தால், சிலிண்டரை வீட்டு வாசலிலேயே போட்டு விட்டு செல்கின்றனர். காஸ் கசிவு போன்ற காலத்தில், சிலிண்டர் டெலிவரி செய்பவர்களையே நிறுவனங்கள் சரி செய்வதற்கென அனுப்புகின்றன. அப்போது, அந்த பணியாளர் விரைந்து வந்து கசிவை சரி செய்யாமல் காலம் தாழ்த்துவதும் நடக்கிறது. இதனால் வேறு வழியின்றி சிலிண்டருக்கு கூடுதல் தொகை கொடுக்கின்றனர். 

வீட்டிற்கு கொண்டு வரப்படும் சிலிண்டர் சீலிடப்பட்டிருக்கிறதா என்பதை நாம் அவசியம் கவனிக்க வேண்டும். இதனை சிலிண்டர் கொண்டு வருபவர் நமக்கு காட்ட வேண்டும். மேலும், சிலிண்டர் எடை அளவு சரியாக இருக்கிறதா, கசிவு இருக்கிறதா என்பதையும் அவர் உறுதிப்படுத்த வேண்டும்.  அடுப்பின் ரெகுலேட்டருடன் சிலிண்டரை இணைத்து நன்றாக எரிவதை ஊழியர் நமக்கு காட்ட வேண்டியது கடமை. அந்த ஊழியர், சிலிண்டரில் உள்ள பின், ஓரிங் போன்றவற்றில் கசிவுகள், வாசர் சேதமடைந்திருப்பது போன்ற வற்றையும் சோதனை செய்து பார்த்த பிறகே, நமக்கு சிலிண்டரை கொடுத்து விட்டுப் போக வேண்டும். சிலிண்டர் அடிப்புறத்தில் துருப்பிடித்து, ஓட்டையாகி அதன் மூலமும் காஸ் கசிவு ஏற்பட்டு விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. அதனையும் ஊழியர் சோதித்துப் பார்த்து நம்மிடம் சிலிண்டரை வழங்க வேண்டும்.

நுகர்வோர் மைய நிர்வாகி பாலகுரு கூறும்போது, ‘‘வீட்டுக்கு சிலிண்டர் போட வருபவர் கட்டாயம் தன்னுடன் எடை இயந்திரம் ஒன்றை கொண்டு வர வேண்டும். அந்த இயந்திரம் மூலம் சிலிண்டரின் சரியான எடையை நிறுத்துக் காட்ட வேண்டும். ஆனால் எந்த காஸ் ஏஜென்ட்களும் தங்கள் ஊழியரிடம் எடை இயந்திரத்தைக் கொடுத்து அனுப்புவதில்லை. காரணம் பல சிலிண்டர்கள் குறைந்த எடை அளவிலேயே காஸ் நிரப்பப்படுகிறது. இதுபோலவே சிலிண்டரில் உள்ள பின், ஓரிங் உள்ளிட்ட சிலிண்டர் பாகங்களில் காஸ் கசிவைக் கண்டறிவதற்கான ‘காஸ் டிடெக்டர்’ கருவியையும் இந்த ஊழியர் தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. ஆனால் சிலிண்டர் கொண்டு வருபவரிடம் இக்கருவி இருப்பதில்லை’’ என்றார். 

மதுரையை சேர்ந்த காஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பொதுமக்களும் தங்கள் வீடு வரும் சிலிண்டரை சோதனை செய்து பெறுவதில்லை. சீல் உடைக்காமலேயே வாங்கி வைத்துக் கொள்கின்றனர். அடுப்பு ரெகுலேட்டரில் மாட்டும்போது கிழிந்த வாசர், சேதமடைந்த பாகங்களால் காஸ் கசிவு ஏற்பட்டு விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. நுகர்வோர் களான பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பதும் அவசியம். இதுதவிர, சிலிண்டர் கொண்டு வருபவரிடம் எக்காரணம் கொண்டும் பில் தொகையை விட கூடுதலாக வழங்க வேண்டாம். அப்படி கேட்டால், காஸ் நிறுவனத்திற்கோ, ஆயில் நிறுவன அதிகாரிக்கோ புகார் தெரிவிக்கலாம். வாகனத்தில் ஒரு லோடுக்கு 306 சிலிண்டர்கள் கொண்டு வரப்படுகின்றன. இவை மீண்டும் சோதனைக்கு பிறகே, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது’’ என்றார்.

ஒவ்வொரு காஸ் சிலிண்டர் கைப்பிடி பகுதியின் மூன்று இரும்புப் பட்டிகளில் ஒன்றில் உள்புறம் காலாவதி தேதி இருக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மராமத்து செய்ய இந்த தேதி எழுதப்படுகிறது. இதன்படி ஓராண்டை தலா 3 மாதங்கள் என நான்காக பிரித்து ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு குறியீடு தரப்படுகிறது. ஏ(ஜன. முதல் மார்ச் வரை), பி(ஏப். முதல் ஜூன் வரை), சி(ஜூலை முதல் செப்டம்பர் வரை), டி(அக். முதல் டிசம்பர் வரை) என பிரிக்கப்படுகிறது. இந்த ஆங்கில எழுத்துடன் கலாவதியாகும் ஆண்டின் கடைசி இரு இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு ‘சி18’ என்றால் இந்த சிலிண்டரின் காலாவதி தேதி ‘செப்டம்பர் மாதம் 2018ம் ஆண்டு’. இதுவே ‘ஏ17’ எனக் கொண்டால் ‘மார்ச் மாதம் 2017ம் ஆண்டு’ காலாவதியானது என்பதை அறியலாம். இப்படி ஏதும் காலாவதி இருப்பினும் மக்கள் தெரிவிக்கலாம். காஸ் விநியோக முறைகேடுகளைக் களைவதிலும், விபத்துகள் குறித்த விழிப்புணர்விலும் விழிப்புடன் இருப்பது முக்கியம்.

Label