OUR CLIENTS
உருது தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மூடல் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கும் அபாயம்!
உருது தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மூடல் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கும் அபாயம்! Posted on 22-Jun-2018 உருது தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மூடல் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கும் அபாயம்!

வேலூர், ஜூன் 22-

உருது (சரகம்) தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மூடப்பட்டதால் உருது மொழி கல்வி கற்கும் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருந்த உருது பள்ளிகளைக் கண்காணிப்பதற்காக ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் 1925&ஆம் ஆண்டு, உருது சரகம் என்றழைக்கப்பட்ட முகமதிய சரகம் தொடங்கப்பட்டது. மதத்தால், மொழியால் நலிந்த சிறுபான்மை மக்களின் பிள்ளைகளுடைய கல்வித் தரம் மேம்பாடு அடையச் செய்வதற்காக உருது பள்ளிகளைக் கண்காணிக்கும் நோக்கில் வேலூர், சேலம், கடலூர் ஆகிய 3 மண்டலங்களில் உருது சரகம் தொடங்கப்பட்டது.

வேலூர் உருது சரகம் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் உள்ளடக்கியதாகும். சேலம் உருது சரகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் இருந்தன. கடலூர் உருது சரகம் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். வேலூர் உருது சரகத்தின் கீழ் 148 உருது பள்ளிகள் இயங்கின. சேலம் சரகத்தில் 125 பள்ளிகளும், கடலூர் சரகத்தில் 80 பள்ளிகளும் இயங்கின. உருது சரகம் தொடங்கப்பட்ட காலத்தில் உருது சரகத்தின் பொறுப்பாளராக பள்ளிகளின் துணை ஆய்வாளர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பிறகு தொடக்கக் கல்வி அலுவலர் என்று மாற்றப்பட்டது.

தங்களுடைய சரகத்தில் இயங்கும் உருது பள்ளிகளுக்கு உருது உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆண்டுக்கு 6 முறை நேரில் சென்று பார்வையிட வேண்டும். குறைந்தது ஒரு முறையாவது ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. 
அதன்படி மாணவர்கள் கல்வித் தரத்தை அவ்வப்போது உருது உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து வந்தனர். ஆய்வின்போது மாணவர்களிடம் பாட சம்பந்தமாக கேள்வி எழுப்பி பதில் பெறுவார்கள். அதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எவ்வாறு கல்வி கற்பித்துள்ளார்கள் என்பதை உருது தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து வந்தனர். இதனால் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு சரிவர கல்வியை கற்பித்து வந்தனர். 

ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் எல்லைகள் பிரிக்கப்பட்டு புதிதாக கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் என்ற பணியிடம் மாற்றப்பட்டு வட்டாரக் கல்வி அலுவலர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே இருந்த உருது தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடமும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் உருது சரகமும் நீக்கப்பட்டது. அதோடு ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்த அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், நர்சரி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடமும் நீக்கப்பட்டுள்ளது.

இதுவரை உருது பள்ளிகளைக் கண்காணிக்கும் பணியை உருது தொடக்கக் கல்வி அலுவலர் செய்து வந்தார். ஆனால் தற்போது உருது பள்ளிகள் இயங்கும் பகுதியைச் சேர்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களே கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கு உருது மொழி தெரியுமா? என்பது கேள்விக்குரியாக உள்ளது. இதனால் பள்ளியில் முறையான ஆய்வை அவர்களால் மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எழுவதாக பெற்றோர் கூறுகின்றனர். மேலும், ஆசிரியர்களும் சரிவர கற்பிக்காமல் விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் உருது மாணவர்களின் கல்வித் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டு கல்வித் தரம் குறைந்தவிடும் என்று பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்பாக ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு ஆதிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் உருது பாடத்தில் மாநில அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று சிறப்பிடம் பிடித்து வந்தனர். ஆனால் உருது சரகம் நீக்கப்பட்ட பிறகு, மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து உருது மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பிடிக்காமல் போகக்கூட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கல்வி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் உருது உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் தொடர்ந்து செயல்பட தமிழக பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உருது வட்டாரக் கல்வி அலுவலகம் என்ற பெயரில் மீண்டும் உருது சரகத்தை செயல்படச் செய்ய வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Label