OUR CLIENTS
ஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை ! ஆளுநர் மாளிகை எச்சரிக்கை
ஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை ! ஆளுநர் மாளிகை எச்சரிக்கை Posted on 25-Jun-2018 ஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை ! ஆளுநர் மாளிகை எச்சரிக்கை

சென்னை, ஜூன் 25-

தமிழக ஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என ஆளுநர் மாளிகை நேற்று விளக்கமளித்துள்ளது

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெள்ளிக்கிழமையன்று (22.6.2018) நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தூய்மைப் பணி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஆளுநர், பரமத்தி சாலை வழியாக அண்ணாநகருக்கு காரில் சென்றார். அப்போது ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகே கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஆளுநர் சென்ற கார் மீது கறுப்புக்கொடி, பலூன்களை வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கைது செய்தனர்.

தி.மு.க.வை சேர்ந்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சைதாப்பேட்டையிலிருந்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் கறுப்பு கொடி ஏந்தி, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி   பேரணியாக சென்றனர். அவர்கள் ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். அப்போது, ஆளுநர் ஆய்வு மாநில சுயாட்சிக்கு எதிராக இருக்கிறது என மு.க. ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில், குறிப்பிடப்பட்டிருப்பதாவது,   அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல ஆளுநருக்கு உரிமை உள்ளது  அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், பல்வேறு மாவட்டங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்கவும் ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு.  மாநில அரசியலைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் ஆளுநருக்கு உள்ளது.  தமிழக அரசின் எந்த துறையின் செயல்பாட்டையும் இதுவரை ஆளுநர் விமர்சித்தது இல்லை.  மேலும் ஆளுநரின் நடவடிக்கையை விமர்சிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆளுநர்களின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.  மக்களின் நலனுக்காக ஆளுநரின் இது போன்ற ஆய்வுகள் தொடரும்  என ஆளுநர் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label