OUR CLIENTS
காவிரி ஆணைய விவகாரத்தில் கர்நாடகத்துக்கு மத்திய அரசு அநீதி முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு
காவிரி ஆணைய விவகாரத்தில் கர்நாடகத்துக்கு மத்திய அரசு அநீதி முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு Posted on 25-Jun-2018 காவிரி ஆணைய விவகாரத்தில் கர்நாடகத்துக்கு மத்திய அரசு அநீதி முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு, ஜூன் 25-

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவை அமைத்ததில், கர்நாடக மாநிலத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று அந்த மாநில முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

 இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு தலைபட்சமாக செயல்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
 உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர், உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது. இந்தக் குழுவில் கர்நாடகத்தின் சார்பில் இடம்பெற வேண்டிய உறுப்பினர்களை மாநில அரசு இதுவரை பரிந்துரை செய்யாததைத் தொடர்ந்து, அந்த அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிடாமல் பதவியை மட்டும் குறிப்பிட்டு, உறுப்பினர்களாக அறிவித்துள்ளது. கர்நாடக நீர் வளத் துறைச் செயலாளரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினராகவும், கர்நாடக நீர் வளத் துறை தலைமைப் பொறியாளரை காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உறுப்பினராகவும் குறிப்பிட்டு மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூரில் செயல்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கர்நாடக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பெங்களூரில் செய்தியாளர்களிடம் முதல்வர் குமாரசாமி கூறியதாவது:
 காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசு சார்பில் உறுப்பினர்களைப் பரிந்துரைக்கவில்லை. ஆணையத்தின் விதிமுறைகளில் ஒரு சில விதிமுறைகள் கர்நாடகத்தின் நலனுக்கு எதிராக உள்ளதை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளோம். கர்நாடகத்தின் ஆட்சேபத்தைத் தீர்த்துவிட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்குமாறு கேட்டிருந்தோம். இவற்றை பொருட்படுத்தாமல், காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு தன்னிச்சையாக அமைத்துள்ளது. இதன்மூலம் கர்நாடகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது. கர்நாடகத்தின் சட்டப்பூர்வ உரிமையை மத்திய அரசு பறித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு பின்பற்றுவதை கர்நாடகம் எதிர்க்கவில்லை. சட்டத்தை மதிக்க வேண்டுமென்பதில் இருவேறு கருத்தில்லை. மாறாக, ஆணையத்தின் விதிமுறைகளில் காணப்படும் கர்நாடகத்தின் ஆட்சேபனைகள் குறித்து கவனம் செலுத்தக் கேட்டிருந்தோம். ஆணையம் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை.

 இந்த விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். இதுதொடர்பாக, விரைவில் மத்திய நீர் வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதுவேன். அடுத்த 15 நாள்களில் தன்னைச் சந்திக்க வாய்ப்புத் தருவதாக அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். அப்போது கர்நாடகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பேன். கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞர், நீரியல் அறிஞர்களின் ஆலோசனையைப் பெற்று அடுத்தகட்ட சட்டப் போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.
 இந்த விவகாரத்தில் எவ்வித சமரசத்தையும் கர்நாடகம் ஏற்றுக் கொள்ளாது. சட்ட விதிகளை கர்நாடகம் என்றைக்கும் மீறியதில்லை. கர்நாடக மக்கள் துன்பங்களை அனுபவித்த போதும் சட்டத்தை மீறவில்லை. கூட்டாட்சி தத்துவத்துக்கு எப்போதும் மதிப்பளித்து வருகிறோம். ஆனால், கர்நாடகத்தின் சகிப்புத்தன்மையை பலவீனமாகக் கருதிவிடக் கூடாது என்றார் அவர்.
 இதனிடையே, ஹுப்பள்ளியில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக நீர் வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார்," காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக கர்நாடகத்தின் கருத்தறியாமல் மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளது. கர்நாடக அரசு எழுப்பிய சந்தேகங்களைத் தீர்த்துவைக்காமல், ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது சரியல்ல' என்று தெரிவித்தார்.

Label