OUR CLIENTS
மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவி!
மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவி! Posted on 25-Jun-2018 மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவி!

வேலூர், ஜூன் 25-

அமமுகவில் வேலூர் மத்திய மாவட்ட செயலாளராக மாற்றுகட்சியில் இருந்து வந்தவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டதால் ரத்தத்தின் ரத்தங்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

வேலூர் மாவட்ட அமமுகவில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் மட்டும் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தை திமுகவில் உள்ளது போன்று மத்திய மாவட்டம் என்று புதியதாக உருவாக்கப்பட்டது. ஆனால் தொகுதி பிரிப்பதில் திமுகவில் இருப்பது போன்று இல்லாமல் புதுவிதமாக மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வேலூர் மத்திய மாவட்டத்தில் அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம் தொகுதிகள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளன. வேலூர் தொகுதியை கிழக்கு மாவட்டத்தில் இணைத்துள்ளனர். இது நிர்வாக கோளாறு ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

அதாவது வேலூர் மாவட்டத்தில் அதிமுகவை பொறுத்தவரை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் செயல்படுகின்றன. இதில் கிழக்கு மாவட்டம் என்பது காட்பாடி, அரக்கோணம், கே.வி.குப்பம், ஆற்காடு, சோளிங்கர், ராணிப்பேட்டையும் ஆகும். மேற்கு மாவட்டம் என்பது வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை தொகுதிகள் உள்ளடக்கியவை. திமுகவில் மேற்கு, கிழக்கு, மத்திய மாவட்டம் என்று மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய மாவட்டம் என்பது வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம் தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. 

ஆனால் அமமுகவில் நடுவில் உள்ள வேலூர் தொகுதியை கிழக்கு மாவட்டத்தில் இணைத்திருப்பது பலரையும் எரிச்சலடையச் செய்துள்ளது. வேலூரில் இருந்து மாவட்ட செயலாளரை பார்க்க சோளிங்கருக்கு 
80 கி.மீ., தொலைவு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இது ஆரம்பத்திலேயே களையப்படுமா? மத்திய மாவட்டத்தில் வேலூர் இணைக்கப்படுமா? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் உள்ளது. மத்திய மாவட்டத்தில் வேலூரைச் சேர்க்காதது பலரையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக வேலூரில் முதலியார்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் சோளிங்கரைச் சேர்ந்த பார்த்திபன் வேலூரை தனது கிழக்கு மாவட்ட கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார். ஆனால் வேலூரில் உள்ள முதலியார்கள் யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமமுகவில் மத்திய மாவட்டத்தை பிரிக்கும் போது வேலூரை நீக்கியது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு வன்னியர் இனத்தைச் சேர்ந்தவரை நியமிக்க வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அணைக்கட்டு தொகுதியின் முன்னாள் பாமக எம்எல்ஏவாக இருந்த கலையரசுவுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பலர் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். இவர் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரை பாமகவினர் வேலூர் மாவட்டம், அணைக்கட்டுக்கு அழைத்து வந்து தேர்தலில் நிற்க வைத்து எம்எல்ஏ ஆக்கினர். ஆனால் அவர் அந்த கட்சியில் நிலையாக இல்லாமல் அதிமுகவுக்கு வந்தார். பின்னர் அதிலிருந்து டிடிவி தினகரன் ஆரம்பித்துள்ள அமமுகவில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் இணைந்தார். இந்நிலையில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கியுள்ளனர். 

நிலைமை இப்படி இருக்க எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்ததும் அவரது பின்னால் வந்த அதிமுகவைச் சேர்ந்த பலர் இன்று ஏமாற்றப்பட்டு விட்டனர். அமமுகவில் இணைந்த போது டிடிவி தினகரன் முதலில் என் பின்னால் வந்தவர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதை நம்பி டிடிவி தினகரன் கரத்தை அமமுகவில் இணைந்தவர்கள் வலுவாக்கினர். ஆனால் தினகரன் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. மாறாக செயல்படுகிறார். இதற்கிடையே  20 நாட்களுக்குள் கட்சியில் இணைந்தவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது பலரையும் எரிச்சலடையச் செய்துள்ளது. 

வேலூர் மத்திய மாவட்ட செயலாளராக மாஜி எம்எல்ஏ கலையரசு நியமனம் செய்யப்பட்டதற்கு பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இப்படி மாற்றுகட்சியை சேர்ந்தவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டால் சொந்த கட்சிக்காரர்கள் நாங்கள் எங்கே செல்வது என்று பேச ஆரம்பித்துவிட்டனர். இதனால் அமமுகவில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இவரைப் போன்றே முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வேலூர் ஞானசேகரன் தமிழ்மாநில காங்கிரசில் இருந்து அதிமுகவில் இணைந்தார். பின்னர் அமமுகவில் இணைந்தார். இதில் அவருக்கு மாநில அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அமமுகவில் பொறுப்புக்காக காத்திருந்த ரத்தத்தின் ரத்தங்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். 

அதிமுகவில் ஏகபோகமாக இருந்தவர்கள் பலர் தங்களது பொறுப்புகளை துறந்து அமமுகவில் இணைந்தனர். ஆனால் அவர்களுக்கு பொறுப்புகள் வழங்காமல்,  நேற்று வந்தவர்களுக்கு  பொறுப்புகளை வழுங்கியதால் பலர் ஏமாற்றத்தில் விரக்தியடைந்துள்ளனர். இவர்களது நிலைமை இலவு காத்த கிளி போல ஆகிவிட்டது.

சோளிங்கர் என்.ஜி. பார்த்திபனால் பொறுப்புகள் கைமாற்றி வழங்கப்பட்டுள்ளது என்று ஒரபுறம் கடும் விமர்சனம் செய்யப்படுகிறது. பார்த்திபன் இப்படி பழிவாங்கி விட்டாரே என அமமுகவில் உள்ளவர்கள் பரபரப்பாக பேசிக்கொள்கின்றனர். அதேபோன்று அமமுக தலைமைக்கும் பல தொண்டர்கள் புகார் மனுக்களை மத்திய மாவட்ட செயலாளர் நியமனம் தொடர்பாக அனுப்பி வருகின்றனர். 
கலையரசு தற்போது வேலூரில் குடியிருக்கின்றார். இதனால் இவர் கிழக்கு பகுதிக்குதான் மாவட்ட செயலாளராக பதவி வகிக்க முடியும். மத்திய மாவட்டத்தில் இவர் (கலையரசு) வசிக்கவில்லை. இதனால் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பதே அமமுகவில் உள்ள நல விரும்பிகள் பலரும் எதிர்பார்க்கின்றனர். 

மாவட்ட செயலாளராக கலையரசுவை நியமித்தாலும் யாரும் அவரைச் சென்று பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கலையரசுவை மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கி விட்டு, மத்தியமாவட்டத்தை சேர்ந்தவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த பிரச்னை அமமுகவில் விசுவரூபம் எடுத்துள்ளது. இதனால் வேகமாக வளர்ந்த அமமுக அதே வேகத்தில் அதலபாதாளத்தில் விழும் அபாயம் ஏற்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்  நோக்கர்கள். 

இந்த நிலை தொடர்ந்து  நீடித்தால் எப்படி அமமுக வேகமாக வளர்ச்சிப் பாதையில் சென்றதோ அதே வேகத்தில் அழிவுப்பாதையை நோக்கி பயணிக்க தொடங்கிவிடும் என்று சொன்னால் அது மிகையாகாது. இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளால் அமமுகவில் இணைந்துள்ள ரத்தத்தின் ரத்தங்கள் மீண்டும் அமமுகவில் இருந்து விலகி மாற்றுக்கட்சிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அமமுக தொண்டர்களை காக்கப் போகிறதா? அல்லது இழக்கப் போகிறதா? என்ற கேள்வி ரத்தத்தின் ரத்தங்கள் இடையே எழுந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை அமமுக தலைமை வரும் முன் காக்கப் போகிறதா? அல்லது வந்த பின் பார்த்து கொள்ளப் போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label