OUR CLIENTS
மகளிர் காங்கிரசில் களையெடுப்பு நக்மா ஆதரவாளர்கள் அதிருப்தி!
மகளிர் காங்கிரசில் களையெடுப்பு நக்மா ஆதரவாளர்கள் அதிருப்தி! Posted on 25-Jun-2018 மகளிர் காங்கிரசில் களையெடுப்பு  நக்மா ஆதரவாளர்கள் அதிருப்தி!

சென்னை, ஜூன் 25-

தமிழக மகளிர் காங்கிரசில் நடிகை நக்மா ஆதரவு நிர்வாகிகளை களையெடுத்து விட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க டில்லி மேலிடத்திற்கு மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி பரிந்துரை செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

அகில இந்திய மகளிர் காங்., பொதுச்செயலராக நடிகை நக்மாவை நியமித்ததும் அவருக்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. இதில் புதுச்சேரி மகளிர் காங்கிரசாரிடம் மட்டும் நக்மா இணக்கமாக இருந்தார். தமிழக மகளிர் காங்கிரசில் ஜான்சிராணி, விஜயதாரணி, குஷ்பு, நக்மா, யசோதா, ஹசீனா சையது, ஆலிஸ் மனோகரி என ஏழெட்டு கோஷ்டிகள் செயல்பட்டு வருகின்றன.நிர்வாகிகள் நியமனம் விவகாரத்தில் ஜான்சிராணிக்கும், நக்மாவுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஜான்சிராணிக்கு எதிராக டில்லியில் நக்மா காய் நகர்த்தி வந்தார்.இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதையடுத்து நக்மா தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். புதிய பொறுப்பாளராக கேரளாவைச் சேர்ந்த பாத்திமா ரோஷ்னா நியமிக்கப்பட்டார். நக்மா பதவி பறிக்கப்பட்டதால் ஜான்சிராணி கை ஓங்கியுள்ளது. இதையடுத்து நக்மா ஆதரவு நிர்வாகிகளை நீக்கி விட்டு தன்னுடைய ஆதரவாளர்களை பதவிகளில் நியமித்தார். 

ஆனால் அதற்கு இன்னும் மேலிடம் ஒப்புதல் அளிக்கவில்லை. வயதான பெண்களையும், சரியாக செயல்படாதவர்களையும் மாற்றி விட்டு, புதுமுகங்களை நியமித்துள்ளதாக, பாத்திமா ரோஷ்னாவிடம், ஜான்சிராணி கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சென்னை சத்திய மூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதற்கு தான் நியமித்த நிர்வாகிகளையும் ஜான்சி ராணி அழைத்திருந்தார். அதை பார்த்ததும் நக்மா ஆதரவு நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், ‘ஜான்சிராணி தலைமையில் மகளிர் காங்கிரஸ் சிறப்பாக பணியாற்றி வருகிறது. இந்தக் கூட்டம் தான் சண்டை சச்சரவு இல்லாமல் நடந்துள்ளது’ என்றார்.

பாத்திமா ரோஷ்னா பேசுகையில், ‘மகளிர் காங்கிரசார் ஒழுங்காக கட்சி பணிகளில் ஈடுபடவில்லை என்றால் அவர்களின் பதவிகள் பறிக்கப்படும். கட்சியிலிருந்து நீக்கப்படுவர். அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்‘ என எச்சரிக்கை விடுத்தார்.இதற்கிடையில் அக்கூட்டத்தில் திருஷ்டி ஏற்பட்டது போல் திடீரென சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது பதவி பறிக்கப்படவுள்ள நக்மா ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் சிலர் பாத்திமா ரோஷ்னாவிடம் ‘எங்களை ஏன் மாற்றுகிறீர்கள்’ என கண்ணீர் மல்க கேட்டுள்ளனர்.அதற்கு பாத்திமா ரோஷ்னா ‘உங்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்படும்‘ என ஆறுதல் கூறினார். ஆனால் அதிருப்தியாளர்கள் ‘எங்களுக்கு பழைய பதவி தான் தர வேண்டும்‘ என பிடிவாதம் பிடித்துள்ளனர். இந்நிலையில் குஜராத்தில் மூன்று நாட்கள் நடந்த, தலைமை பண்பு வளர்த்தல், மகளிர் திறன் மேம்பாடு பயிற்சி கருத்தரங்கத்தில் பங்கேற்க பாத்திமா ரோஷ்னா, ஜான்சிராணி சென்றுள்ளனர். அவர்கள் சென்னைக்கு திரும்பியதும், மகளிர் காங்கிரசில் களையெடுப்பு நடக்கும் என, தெரிகிறது.

Label