OUR CLIENTS
அமைச்சர்கள் ஆதரவில் வளரும் கோஷ்டிகள்!
அமைச்சர்கள் ஆதரவில் வளரும் கோஷ்டிகள்! Posted on 25-Jun-2018 அமைச்சர்கள் ஆதரவில் வளரும் கோஷ்டிகள்!

பெரம்பூர், ஜூன் 25-

அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் அதிகரித்து வருவதும் அதை அமைச்சர்களே ஊக்குவிப்பதும் தொண்டர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும் உறுதியான தலைமை இல்லாததால் கட்சி கட்டுப்பாடற்ற நிலையில் உள்ளது. கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என நினைப்பதால் ஒருமித்த முடிவு எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக புதிய நிர்வாகிகள் நியமனம் கிடப்பில் போடப்பட்ட கல்லாக உள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்கான கால நீட்டிப்பு தொடர்கிற நிலையில் அப்பணி மிகவும் மந்தமாக உள்ளது.

தலைமை நடவடிக்கை எடுக்காது என்ற தைரியத்தில் பதவியில் உள்ளவர்கள் தன்னிச்சையாக செயல்படத் தொடங்கி உள்ளனர். இதனால் கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது. இதை அமைச்சர்களும் ஊக்குவித்து வருகின்றனர். 
மதுரையில் அமைச்சர் உதயகுமார், எம்.எல்.ஏ.,க்கள் சரவணன், ராஜன் செல்லப்பா ஆகியோர் ஓரணியாக செயல்பட அமைச்சர் ராஜு தனி அணியாக செயல்பட்டு வருகிறார் .சமீபத்தில் எம்.எல்.ஏ., சரவணனுக்கு அவரது சமுதாய மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் அவர் சார்ந்துள்ள மாவட்டத்தின் செயலரான அமைச்சர் ராஜு பங்கேற்கவில்லை. அமைச்சர் உதயகுமார் பங்கேற்றார். 

இது தொடர்பாக, அமைச்சர் ராஜு கட்சி தலைமையில் முறையிட்டுள்ளார். எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோல தகவல் தொழில்நுட்ப அணியில் மாநில செயலர் ராமச்சந்திரன் தலைமையில் ஒரு அணியும், சசிகலாவால் மாநில செயலராக நியமிக்கப்பட்ட ராஜ்சத்யன் தலைமையில் தனி அணியும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் மாணவர்களுக்கு ‘சைபர் கிரைம்‘ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ராஜ்சத்யன் ஏற்பாடு செய்தார். அதற்கு ராமச்சந்திரனை அழைக்கவில்லை. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயகுமார், மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர். கோஷ்டிகளை ஒழிக்க வேண்டிய அமைச்சர்கள் ஒரு தரப்பினரை ஊக்கப்படுத்துவது மற்றொரு தரப்பினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர்கள் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்காமல் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் அரவணைப்பதால் புறக்கணிக்கப்படுவோர் வெளியேறும் சூழல் உருவாகி உள்ளது. இது தொண்டர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோஷ்டிகளை ஒழித்து அனைவரையும் அரவணைக்க தலைமை நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சியின் நிலைமை சிக்கலாகி விடும்.

Label