OUR CLIENTS
ஆளுநர் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை-புதுச்சேரிக்கும் பொருந்தும்!
ஆளுநர் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை-புதுச்சேரிக்கும் பொருந்தும்! Posted on 26-Jun-2018 ஆளுநர் பணிகளை தடுப்பவர்களுக்கு  7 ஆண்டு சிறை-புதுச்சேரிக்கும் பொருந்தும்!

புதுச்சேரி, ஜுன் 26-

ஆளுநர் பணிகளை தடுத்தால் 7 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது என்பது புதுச்சேரிக்கும் பொருந்தும் என்றும் சட்டம் நாடு முழுமைக்கும் பொருந்தும் என்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், தேவைப்படும்போது வேறு சில தினங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆனால் ஆளும் கட்சியினர் ஆளுநருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி உத்தரவு போட அதிகாரம் இல்லை என்றும், அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிட்டு வேலை வாங்க வேண்டிய ஆளுநர் ஏன் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆளுநர் கிரண்பேடி தனது டுவிட்டர் மூலம் வெளியிட்ட பதிவு: கள ஆய்வு தான் சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களை ஆளுநருடன் இணைக்கிறது. உண்மை நிலையை பார்க்கவும், கேட்கவும், உணரவும் உதவுகிறது. ஆளுநர் மாளிகைக்கு வரும் புகார்கள் மீது நேரடியாகச் சென்று உண்மையை சரி பார்க்க முடிகிறது.

மூன்றாம் தரப்பினரை சார்ந்திருக்க வேண்டியதும் இல்லை. கடவுள் கொடுத்துள்ள உணர்வுகளை பயன்படுத்துகிறோம். தொடர் ஆய்வின்போது பிறப்பிக்கப் படும் கட்டளைகளும், கட்டுப்பாடுகளும் தொடர்ந்து பின்பற்றும் சூழல் ஏற்படும். புதிய கற்றல் இன்றி கள ஆய்வு இல்லை என்று அனுபவம் கூறுகிறது. மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று நினைக்க விரும்பும் ஒருவர் மக்களைச் சென்று பார்த்தால் தான் நற்பணிகளை செய்ய முடியும். மக்கள் நம்பிக்கையை சம்பாதிக்க சிறந்த வழி தன்னலமற்ற முறையில் கடமையை செய்வதுதான். கள ஆய்வு மேற்கொள்ளப் படுவதால் பிரச்னைகள் பெரியதாவதற்கு முன்பு தீர்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதை உணர முடிகிறது. கள ஆய்வும்கூட ஒருவகையில் மக்கள் சேவைதான். மக்கள் பிரச்னைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும், சேவை விரைவாக தேவைப்படும்போது நேர இழப்புகள் இன்றி செய்யவும் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கள ஆய்வு என்பது பொது சேவைக்கான முக்கிய நோக்கம் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளுநர் பணிகளை தடுத்தால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என ஆளுநர் மாளிகை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதே? இதே சட்டம் புதுச்சேரிக்கும் பொருந்துமா என ஆளுநர் கிரண்பேடியிடம் கேட்டபோது, நிச்சயமாக புதுச்சேரிக்கும் பொருந்தும். நாடு முழுவதும் ஒரே சட்டம் தான். சட்டத்தை யாரும் தவிர்க்க முடியாது என்று ஆளுநர் கிரண்பேடி கூறினார்.

Label