OUR CLIENTS
பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து தொகுதிக்கும் தனித்தனி பொறுப்பாளர்கள்!
பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து தொகுதிக்கும் தனித்தனி பொறுப்பாளர்கள்! Posted on 26-Jun-2018 பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து தொகுதிக்கும் தனித்தனி பொறுப்பாளர்கள்!

புதுடெல்லி, ஜுன் 26-

பாராளுமன்ற தேர்தலில் தீவிரமாக பணியாற்றுவதற்காக நாட்டில் உள்ள 534 எம்.பி. தொகுதிகளுக்கும் தனித்தனி பொறுப்பாளர்களை நியமிக்க பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தீவிரமாக பணியாற்றுவதற்காக நாட்டில் உள்ள 534 எம்.பி. தொகுதிகளுக்கும் தனித்தனி பொறுப்பாளர்களை நியமிக்க பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதமே உள்ளது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியை இப்போதே தொடங்கிவிட்டன.

ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விரிவான தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கட்சியின் தலைவர் அமித்ஷா தற்போது மாநில வாரியாக சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். கடந்த 10&ந்தேதி அவர் சத்தீஸ்காரில் சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
அதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக சென்று வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தை ஜூலை மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் தேர்தல் பணிகளை எப்படி முடுக்கி விடுவது என்று திட்டங்களை உருவாக்குகிறார். ஒவ்வொரு மாநிலத்தில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன. அங்கு எதிர்க்கட்சிகள் எந்த நிலையில் உள்ளது. அவர்களை எந்த முறையில் வெற்றி கொள்ளலாம் என்று கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த தேர்தலில் திட்டமிட்டு செய்த தேர்தல் பணிகளை விட இந்த தடவை தீவிரமாக பணிகளை செய்ய திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு அம்சமாக அனைத்து தொகுதிகளிலும் தனித்தனி தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதற்கு முன்பு இவ்வாறு பாரதிய ஜனதாவில் செய்தது இல்லை. இதேபோன்ற திட்டத்தை பகுஜன் சமாஜ் கட்சி ஏற்கனவே செய்து வருகிறது. அதை பின்பற்றி நாட்டில் உள்ள 534 தொகுதிகளுக்கும் இந்த தடவை பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

அந்த பாராளுமன்ற தொகுதியை சாராதவராக இந்த பொறுப்பாளர் இருப்பார். அவர் தான் தொகுதி தொடர்பான அனைத்து தேர்தல் பணிகளையும் கவனிப்பார். மேலும் 11 பேர் கொண்ட உறுப்பினர் குழு ஒன்றும் செயல்படும். இதில் சமூக ஊடகத்துறை பணிகளுக்காக 3 பேரும், பத்திரிகைகள் தகவல் பரிமாற்றத்திற்காக 3 பேரும், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை கவனிப்பதற்காக 3 பேரும், மத்திய மாநில திட்டங்கள் செயல்படுவதை கண்காணிப்பதற்காக 2 பேரும் இருப்பார்கள்.

மேலும் இவர்கள் 11 பேரும் தேர்தல் தொடர்பான அனைத்து ஆயத்த பணிகளையும் மேற்கொள்வார்கள். தனி பொறுப்பாளர் மற்றும் குழு அமைக்கப்படுவதால் ஒவ்வொரு தொகுதியிலும் தனி கவனம் செலுத்த முடியும் என்று கருதுகிறார்கள்.

மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கு என்ன பிரச்சினைகள் நிலவுகிறது. அரசியல் ரீதியாக அதை எப்படி சந்திப்பது, யாருடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எந்த அளவிற்கு சென்றடைந்துள்ளன போன்ற அனைத்து விவரங்களையும் சேகரித்து கட்சி மேலிடத்திற்கு மாநில கட்சி விரிவான அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அமித்ஷா மாநில சுற்றுப் பயணத்தின்போது இந்த அறிக்கையின் அடிப்படையிலும் ஆய்வு செய்யப்படும்.

Label