OUR CLIENTS
அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்!
அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! Posted on 27-Jun-2018 அணை பாதுகாப்பு மசோதாவுக்கு  எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்!

சென்னை, ஜுன் 27-

அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஜூன் 26ந்தேதி செவ்வாயன்று தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஒரு மனதாக ஆதரவளித்தன.

அணை பாதுகாப்பு வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக கடந்த ஜூன் 13ந்தேதி தகவல் வெளியானது.  மத்திய அரசின் உத்தேச மசோதா தமிழகத்தின் நலன்களை கடுமையாகப் பாதிக்கும். எனவே மசோதாவை சட்டமாக்க வேண்டாம். அம்மசோதாவை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், வரைவு மசோதா மாநில அரசுகளுக்கு தரப்படவில்லை. மாநில அரசின் உரிமையில் தலையிடும் வகையில் அணை பாதுகாப்பு மசோதா உள்ளது. எனவே, அணை பாதுகாப்பு மசோதாவை மறு ஆய்வு செய்து,  மாநில அரசுகளின் கருத்தை கேட்டறிந்த பிறகே மசோதாவை சட்டமாக்க வேண்டும்.  ஒருமித்த கருத்து ஏற்படும் வரை அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
அணைகள் பாதுகாப்பு வரைவு மசோதாவின் அம்சங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ஆனாலும் , தமிழக அரசு எதிர்த்த அம்சங்கள் மத்திய அரசு இத்த மசோதாவில்  திருத்தப் பட்டதாகத்  தெரியவில்லை என்றும் தனது கடிதத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். தமிழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இன்றைய முதல்வர் பழனிசாமியும் முன்வைத்த கருத்துகளுக்கு மத்திய அரசு செவி சாய்த்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில், அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழக சட்டப் பேரவையில் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன் மொழிந்தார்.

இந்த தீர்மான விவரம்: ”அணை பாதுகாப்பு மசோதா குறித்து இறுதி முடிவு எடுக்கும் முன்னர் மாநிலங்களை மத்திய அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆலோசனையின் போது  ஒருமித்த கருத்தை எட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட  பின்னரே  அதன் அடிப்படையில் சட்டத்தை இயற்ற வேண்டும்” இவ்வாறு தமிழக சட்டப்பேரவையில தாக்கலான தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்தில்  அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. பேரவையில் முதல் அமைச்சர் பழனிசாமி கொண்டு வந்த தீர்மானத்தை எல்லா கட்சிகளும் ஆதரித்தன.  தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவு பெறப்பட்டது. இதனை அடுத்து அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அணைகள் பாதுகாப்பு  மசோதாவை நிறுத்த கோரி தமிழக சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. முதல்வரின் தீர்மானத்தை அனைத்துக் கட்சினரும் ஆதரித்ததை கடிதம் சுட்டிக்காட்டியது. தமிழக நலன்களை பாதுகாக்க அணைகள் பாதுகாப்பு  மசோதாவை உடனடியாக நிறுத்தும் படி முதல்வர்  எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது.  

Label