OUR CLIENTS
கைபேசி மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் சேவை அறிமுகம்!
கைபேசி மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் சேவை அறிமுகம்! Posted on 27-Jun-2018 கைபேசி மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் சேவை அறிமுகம்!

புதுடெல்லி, ஜுன் 27-

பாஸ்போர்ட் பெற நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் கைபேசி மூலம் விண்ணப்பிக்கும் ’ பாஸ்போர்ட் சேவா ஆப்’ஐ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று அறிமுகப்படுத்தினார். 

வெளிநாடு செல்ல விரும்புவர்கள் தங்கள் மாநிலத்தில் பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகங்கள் இல்லாத நிலையில் அண்டை மாநிலங்களில் விண்ணப்பிக்கும் சூழல் இருந்து வந்தது. மேலும், ஒருசில மாநிலங்களின் சில மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகம் செயல்படுவதால், சில நூறு கிலோமீட்டர் பயணம் செய்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் சூழலும் நிலவி வருகிறது.

இந்நிலையில், ‘பாஸ்போர்ட் சேவா ஆப்’ஐ மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிமுகப் படுத்தினார். அப்போது பேசிய அவர், நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் இருக்கும் இடத்தில் இருந்தே கைபேசி மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆப்பில் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் போலீஸ் துறையின் சரிபார்ப்பு முடிந்த பின்னர் தபால் மூலம் அந்த முகவரிக்கு பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிட்டார்.

இந்த புதிய முறையின் மூலம் பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகள் மிக துரிதமாகவும், சுலபமாகவும் முடியும். அதே சமயம் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்கள் பற்றிய இறுதி முடிவு சிறுபான்மையினர் நலத்து றையிடமும் பாஸ்போர்ட் வழங்குவது வெளியுறவு அமைச்சகத்திடமும் தொடர்ந்து நீடிக்கும் என்றும் சுஷ்மா தெரிவித்தார்.
முதல் இரண்டு கட்டங்களில், 251 பாஸ்போர்ட் மையங்கள் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் 212 மையங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டத்தில் 38 கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் தற்போது இரண்டு மையங்கள் செயல்பட துவங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

விரைவில் அனைத்து லோக் சபா தொகுதிகளிலும் பாஸ்போர்ட் மையங்கள் அமைக்கப்படும். தற்போது நாட்டில் 260 பாஸ்போர்ட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாஸ்போர்ட் பெறுவதை எளிதாக்கும் நடைமுறை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

Label