OUR CLIENTS
டாஸ்மாக் கடைகளில் அடாவடி வசூல்!
டாஸ்மாக் கடைகளில் அடாவடி வசூல்! Posted on 27-Jun-2018 டாஸ்மாக் கடைகளில் அடாவடி வசூல்!

நாகர்கோவில், ஜூன் 27-

 தமிழகத்தில் 3500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மது விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மது பாட்டிலில் குறிப்பிட்டிருக்கும் அதிக பட்ச சில்லறை விற்பனை விலையை விட ரூ. 5 முதல் ரூ.40 வரை அதிகம் கட்டாயப்படுத்தி வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு குவார்ட்டருக்கு ரூ.5 முதல் ரு.7ம், புல் பாட்டிலாக வாங்கினால் ரூ.20 முதல் 28 வரையிலும், சில வகை மதுபானங்களுக்கு ரூ.40 வரையிலும் வாங்குவதாக தெரிகிறது.பீர் பாட்டிலை பொறுத்தவரை ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை வாங்குவதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி உள்பட சில தென் மாவட்டங்களில் பீர் பாட்டில் டாஸ்மாக் கடைக்கு பதில், அந்த கடையில் உள்ள பாரில்தான் வாங்க முடிகிறதாம். முன்பு ஒரு சில கடைகளில் இதுபோன்ற வசூல் இருந்தது. தற்போது அனைத்து கடைகளிலுமே அதிகம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

தற்போது மாவட்ட மேலாளர், உதவி மேலாளர், மண்டல மேலாளர் என அவர்களின் பெயர்களை கூறி அனைத்து கடைகளிலும் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை ஏதாவது ஒரு மேற்பார்வையாளர் வசூல் செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

டாஸ்மாக் கடைகளில் ரூ.5 அதிகமாக விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம், ரூ.10 அதிகமாக விற்றால், ரூ.10 ஆயிரம் அபராதமும், பணியிட மாறுதலுமே நடவடிக்கை. தற்போது அதிகாரி ரூ.50 ஆயிரம் வரை வசூல்செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலசேகரம் பகுதியில் உள்ள கடையில், ரூ.500 மற்றும் 200 ரூபாய் தாள்கள் 2ம் கொடுத்துவிட்டு, ரூ.720 மதிப்பிலான ஃபுல் பாட்டில் மதுவை வாங்கிய சோதனை அதிகாரி பாக்கி தொகையை வாங்காமல் சென்று விட்டார். இதனால் கடையில் உள்ளவர்கள் ஜாக்பாட் என நினைக்க சிறிது நேரத்தில் வந்த கும்பல், கூடுதலாக ரூ.180 வாங்கியதற்கு ரூ. ஒரு லட்சம் மாமூல் தர  வேண்டும் எனக்கூற, விற்பனையாளர்கள் அதிர்ந்தனர். பின்னர் 50 ஆயிரம் தந்துள்ளனர்.இப்படி வேலியே பயிரை மேய்ந்த கதைகளும் இந்த மாவட்டத்தில் உலா வரத் தொடங்கியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் அத்துடன் கேரள மதுபாட்டில்கள் மறைத்து வைத்தும் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போன்று இவர்கள் திருந்துவதுதான் எப்போது?. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label