OUR CLIENTS
மிக உயர்ந்த தலைவர் இந்திராகாந்தி, பிரதமர் மோடி சர்வாதிகாரி!
மிக உயர்ந்த தலைவர் இந்திராகாந்தி, பிரதமர் மோடி சர்வாதிகாரி! Posted on 28-Jun-2018 மிக உயர்ந்த தலைவர் இந்திராகாந்தி, பிரதமர் மோடி சர்வாதிகாரி!

புதுடெல்லி, ஜுன் 28-

பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார் என்று இந்திரா காந்தி குறித்த மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 1975&ம் ஆண்டு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மீதும், இந்திராகாந்தி குடும்பத்தினர் மீதும் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு தெரிவித் திருந்தார். அதேபோல் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரை போன்றவர் இந்திராகாந்தி என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கருத்து தெரிவித் திருந்தார். பிரதமர் மோடி மற்றும் அருண் ஜெட்லியின் கருத்துக்களுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மிக உயர்ந்த தலைவர். நெருக்கடி நிலை குறித்து அவரே வருத்தம் தெரிவித்துள்ளார். சர்வாதிகாரிகள் தேர்தல் நடத்துவது இல்லை. இந்திரா காந்தி நெருக்கடி நிலையை வாபஸ் பெற்று நேர்மையான முறையில் தேர்தல் நடத்தினார். அதில் தோல்வியை தழுவினாலும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ்.-பாரதிய ஜனதா பள்ளியில் படித்த அருண்ஜெட்லி சர்வாதிகாரி ஹிட்லரையும், அவரது கொள்கைகளையும் போற்றுபவர். கடந்த 1980&ம் ஆண்டு மக்கள் மீண்டும் இந்திரா காந்திக்கு பெரும்பான்மை ஆதரவு அளித்தனர். மக்கள் மனதில் இன்னும் இந்திரா காந்தி ஹீரோவாக உள்ளார். பிரதமர் மோடி தற்போது சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். அவரது ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக் குறியாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜீவாலா கூறியதாவது:-முகலாய மன்னர் அவுரங்க சீப்பையை விட மோசமான சர்வாதிகாரியாக மோடி ஆட்சி நடத்துகிறார். அவர் தற்போது 43 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை குறித்து நாட்டுக்கு பாடம் நடத்துகிறார். இன்றைய அவுரங்க சீப்பான மோடி நாட்டின் ஜனநாயகத்தை அடிமைப்படுத்தி வைத்துள்ளார். தனது சொந்தக் கட்சியான பா.ஜனதாவிலும் அவர் இதைத் தான் செய்துள்ளார்.

தனது தோல்விகளையும், மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தெரிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மூடி மறைப்பதற்காக காங்கிரஸ் மீது அவர் குற்றம் சாட்டுகிறார். இதற்காக வரலாற்றுடன் அவர் விளையாடுகிறார். ஆனால் தாமும் விரைவில் வரலாறு ஆகப் போகிறோம் என்பதை அவர் மறந்துவிட்டார். ஜனநாயகம் பற்றி தனக்கு காங்கிரஸ் பாடம் சொல்லிக் கொடுக்க தேவையில்லை என்று மோடி தெரிவித்துள்ளார். அவுரங்கசீப் யாரிடம் இருந்தும் ஒரு போதும் பாடம் கற்றதில்லை. சர்வாதிகாரிகள் யாரிடம் பாடங்களை கற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு வரலாறுதான் தக்க பாடங்களை கற்பிக்கும். மோடிக்கும் இதே நிலைதான் ஏற்படும்.

மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லையென்றால் நிதி ஒதுக்கப்பட மாட்டாது என்று மாநிலங்களை பிரதமர் மோடி மிரட்டுகிறார். நாட்டில் கடந்த 49 மாதங்களாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளது. கடந்த 49 மாதங்களில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்பது தெரிந்து விட்டது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் திருப்பி கொண்டு வரப்படவில்லை. மோடி ஆட்சியில் ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது.

நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு பதிலாக அதில் இடையூறுகளை ஏற்படுத்தும் பணியில் மத்திய நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. 43 ஆண்டுகளுக்கு முன்பு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதற்கு ஜனதா கட்சியே காரணம். அந்த கட்சி வசதி படைத்தவர் களுக்கும், ஜமீன்தாரர் களுக்கும் ஆதரவாக செயல்பட்டது. எனவே ஏழைகள், தலித்துகள் ஆகியோரின் நலன்களை பாதுகாக்கவே அப்போது நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. மோடியின் அரசு பெரு முதலாளிகளை பாதுகாக்கிறது.

1975-ம் ஆண்டில் இந்திரா காந்தி அரசு வறுமைக்கு எதிரான போரை நடத்தியது. வங்கிகளை நலிவடைந்த மக்களும் பயன்படுத்தும் உரிமையை பெற்றுத் தந்தது. ஆனால் மோடியின் ஆட்சியில் எதிர்க்கட்சியினர் ஒடுக்கப்படுகின்றன. தங்களை எதிர்ப்போருக்கு கொலை, பாலியல் பலாத்கார மிரட்டல் விடுப்போரை மோடி பின்பற்றுகிறார். எதிர்க் கட்சியினரை ஒடுக்குவதற்காக நாட்டில் ஒருவித அச்சமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Label