OUR CLIENTS
நோயாளிகள் ஓரிடமும், மருத்துவர்கள் வேறிடமும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்!
நோயாளிகள் ஓரிடமும், மருத்துவர்கள் வேறிடமும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்! Posted on 28-Jun-2018 நோயாளிகள் ஓரிடமும், மருத்துவர்கள் வேறிடமும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்!

விருதுநகர், ஜூன் 28-

 சாத்தூர் பகுதி ஏராளமான கிராம பகுதிகளை உள்ளடக்கியது. சாத்தூர் பிரதான சாலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில், அதிக இட வசதியுடன் புதிய அரசு மருத்துவமனை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கட்டபட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த புதிய மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட படுக்கை வசதி, வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, பிரேத பரிசோதனை அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இருப்பினும் சில வாரங்களுக்கு முன்பு வரை பிரதான சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த பச்சிளம் குழந்தைகள் பிரிவு, பிரசவ வார்டு தற்போது புதிய மருத்துவமனைக்கு மாற்றபட்டது. இதையடுத்து, புதிய மருத்துவமனையில் இருந்த உள்நோயாளிகள் பிரிவை பிரதான சாலையில் உள்ள பழைய மருத்துவமனைக்கு மாற்றிவிட்டனர். ஆனால் மருத்துவர்கள், வெளிநோயாளிகள் பிரிவு அனைத்தும் புதிய அரசு மருத்துவமனையிலேயே உள்ளனர். 

இதனால், உள்நோயாளிகள் அனைவரும் பிரதான சாலையில் உள்ள பழைய மருத்துவமனையிலிருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதிய மருத்துவமனைக்கு பேருந்து மற்றும் ஆட்டோகளில் சென்று சிகிச்சை பெற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், பழைய மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இருப்பினும் இந்த அறுவை சிகிச்சை பகுதி அருகே ஆபத்தான நிலையில் இருக்கும் பகுதியிலேயே உள்நோயாளிகள் பிரிவினரின் படுக்கை வசதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மருத்துவர் பற்றாக்குறை: சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு எலும்பு முறிவு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், பொதுநல மருத்துவர், மகப்பேறு மருத்துவர், பல் மருத்துவர் உள்ளிட்ட 19 மருத்துவர்கள் தேவை நிலை உள்ளது. ஆனால், தற்போது 7 மருத்துவர்கள் மட்டுமே இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். அதிலும் 2 மருத்துவர்கள் மாற்று பணிக்காக வெளியே செல்கின்றனர்.

இதனால் 5 மருத்துவர்கள் மட்டும் பணியாற்றி வரும் நிலையில், சாத்தூர் பகுதியில் நடைபெறும் விபத்துகளும், பட்டாசு தொழிற்சாலையில் நடைபெறும் விபத்துகளால் வரும் நேயாளிகள் சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படுகின்றனர். இதனால் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை அருகிலே மருத்துவக் கழிவுகள்: அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருத்துவக் கழிவுகளும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பைகள் அனைத்தும் மருத்துவமனை சுற்றுசுவர் அருகிலேயே கொட்டப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் இந்த பகுதியில் மாசு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனாலே மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மேலும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. துப்பரவு பணியாளர்கள் பற்றாகுறை: மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், மருத்துவமனையில் நடைபெறும் துப்புரவு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றமும் வீசத்தொடங்கியுள்ளது. நோயாளிகள் படுக்கைகளில் தங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, சாத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை நிர்வாகமும், பஞ்சாயத்து நிர்வாகமும் பொதுமக்கள் நலன் கருதி அரசு மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தலைமை மருத்துவர் அய்யனார்(பொறுப்பு) கூறுகையில், சாத்தூர் அரசு புதிய மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் உள்நோயாளிகள் பிரிவு பழைய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய அரசு மருத்துவமனையில் அதிகளவில் படுக்கை வசதி செய்ய இணை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label