OUR CLIENTS
காட்பாடியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளரை புறக்கணிக்கும் சாதி அரசியல்!
காட்பாடியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளரை புறக்கணிக்கும் சாதி அரசியல்! Posted on 29-Jun-2018 காட்பாடியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளரை புறக்கணிக்கும் சாதி அரசியல்!

வேலூர், ஜூன் 29-

வேலூர் மாவட்டத்தில் அதிமுக கிழக்கு, மேற்கு என்று இரண்டு பகுதிகளாக பிரித்து செயல்படுகிறது. இது அமைச்சர் வீரமணியின் முட்டுக்கடையால் மத்திய மாவட்டம் அமைவதில் தொடர்ந்து இழுபறி இருந்து வருவதாக ரத்தத்தின் ரத்தங்கள் தரப்பில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.

திமுகவில் கூட 3 சட்டசபை தொகுதிகளை ஒன்றாக இணைத்து மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய புதுயுக்தியை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 3 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து செயல்படுத்தி வருகிறது.

ஆனால் அதிமுகவில் மத்திய மாவட்டம் உதயமாகாததால் ரத்தத்தின் ரத்தங்கள் விரக்தியில் தொடர்ந்து இருந்து வருகின்றனர். இதுதான் இப்படி என்றால் வேலூர் மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட எல்லைக்குள் வரும் காட்பாடி ஒன்றிய கழக செயலாளராக கோரந்தாங்கல் குமார் பொறுப்பு வகித்து வந்தார். அத்துடன் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்த பொறுப்புகளை துறந்து விட்டு டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்ததும் அவருடன் இணைந்து செயலாற்றி வருகிறார். இந்நிலையில் காட்பாடி ஒன்றிய கழக செயலாளர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு முன்னாள் காட்பாடி ஒன்றிய கழக செயலாளராக இருந்த கே.எஸ்.சுபாஷை மீண்டும் காட்பாடி ஒன்றிய கழக செயலாளராக நியமனம் செய்தனர். இதன் விளைவாக காட்பாடி ஒன்றியத்தில் தொய்வாக இருந்த பணிகள் மீண்டும் சுறுசுறுப்படைய ஆரம்பித்துள்ளது. கே.எஸ்.சுபாஷூம் தனக்கு கொடுத்த ஒன்றிய கழக செயலாளர் பதவியை பயனுள்ள வகையில் பணியாற்றி ரத்தத்தின் ரத்தங்களை அரவணைத்து மீண்டும் காட்பாடி ஒன்றியத்தில் அதிமுகவை எழுச்சியடையச் செய்துள்ளார். இதற்கு உதாரணம் அண்மையில் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் நடந்த அதிமுகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தையே கூறலாம். அதுமட்டுமன்றி இந்த பொதுக்ககூட்டம் திமுகவையே அதிர வைத்தது.

அத்துடன் காட்பாடி திருவலம் ரோட்டில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் வந்து சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை வரவேற்கும் விதமாக கே.எஸ்.சுபாஷ்,  டிஜிட்டல் பேனர்களை குவித்து வைத்து காட்பாடி நகரையே கலக்கினார். இது வெகுவாக அனைவரது கவனத்தையும் கவர்ந்திழுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் தொய்வடைந்து காணப்பட்ட ரத்தத்தின் ரத்தங்களை ஆங்காங்கே சந்தித்து குறைகளை கேட்டு பல குறைகளை அங்கேயே நிவர்த்தியும் செய்து வருகிறார். இப்படி அசுர சாதனை படைத்து வரும் கே.எஸ்.சுபாஷை காட்பாடியில் உள்ள அதிமுக பகுதி செயலாளர் ஜனார்த்தனம், முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு போன்ற முதலியார்கள் தாமரை இலையில் ஒட்டாத தண்ணீர் போல ஒதுங்கியே செயல்படுகின்றனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பெயரளவில் மட்டுமே உறவாடுகின்றனர். உளப்பூர்வமாகவும், கட்சி ரீதியாகவும் அவருடன் அந்த பிரமுகர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை என்று ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியிலும், அதிமுக வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கே.எஸ்.சுபாஷை பொறுத்த வரையில் அதிமுக தலைமை கொடுத்த பொறுப்பை முறையாக பயன்படுத்தி அதிமுகவினரை அனுசரித்து வழிநடத்தி வருகிறார்.

அதிமுகவினக்கு முதல் மரியாதை தருவதில் கே.எஸ்.சுபாஷூக்கு நிகர் கே.எஸ்.சுபாஷ்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. நீண்ட இடைவெளிக்கு பின் தனது கையை விட்டுச் சென்ற பதவி மீண்டும் கிடைத்த உற்சாகத்தில் கே.எஸ்.சுபாஷ் பம்பரமாய் சுழன்று கழகப்பணியாற்றி வருகிறார். கே.எஸ்.சுபாஷ், கோரந்தாங்கல் குமார் போன்ற கடுமையான உழைப்பாளிகளால்தால் காட்பாடி ஒன்றியத்தில் பலம் பொருந்திய திமுகவை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் இரு வல்லவர்கள்.  திறமைக்கும்,உழைப்புக்கும் என்றும் மரியாதை இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதுபோன்ற திறமைசாலிகள் இல்லாமல் இருந்தால் காட்பாடி தொகுதியில் அதிமுக எப்போதோ இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும் என்பது மட்டும் நிதர்சன உண்மையாகும். கட்டி வா என்றால் வெட்டி வரும் திறமை மிகு ஆற்றல் மிகு ஒன்றிய செயலாளர்கள் ஆவார்கள் கோரந்தாங்கல் குமாரும், கே.எஸ்.சுபாஷூம். இதுபோன்ற ஆற்றல்மறவர்கள் அதிமுகவுக்கு கிடைத்தது பெரிய பாக்கியம்தான் என்றுதான் சொல்ல வேண்டும். ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பு வந்ததும் அதிமுகவினரை, அதாவது தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை யாராக இருந்தாலும் சரி எந்தநேரத்திலும் சந்தித்து அவர்களது குறைகளை உடனே களைந்து கழகப் பணியாற்றுகிறார் கே.எஸ்.சுபாஷ். காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் ஜனார்த்தனன், காட்பாடி ஒன்றிய செயலாளர்

கே.எஸ்.சுபாஷிடம் இருந்து பணம் கேட்டு பெற்று டிஜிட்டல் பேனர் வைக்கிறாரே தவிர அவரது சொந்த செலவில் எந்த பேனர்களும் வைப்பது இல்லை. கே.எஸ்.சுபாஷ் உண்மையிலேயே அதிமுக விசுவாசி ஆவார். அவர் சுழன்று சுழன்று கழகப் பணியாற்றி வருகிறார். ஆனால் சில கருப்பு ஆடுகள் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகனுடன் ரகசிய தொடர்பு வைத்து கொண்டு அதாவது அண்டர்கிரவுண்ட் பாலிடிக்ஸ் செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் மேடைகளில் மட்டும் டேய் துரைமுருகா என்று விளிப்பது யாரை ஏமாற்றும் செயல் என்று தெரியவில்லை. இரவு மேடையில் வாடா போடா என்று பேசிவிட்டு அதிகாலை 5 மணிக்கெல்லாம் துரைமுருகன் வீட்டுக்கு சென்று காலில் விழுந்து விடுகின்றனர். இப்படி அரசியல் நாடகம் நடத்தி வருகின்றனர் திரைமறைவில் என்றுதான் சொல்ல வேண்டும். இதுதான் தேர்தல் நேரத்தில் அதிமுக  வேட்பாளருக்கு ஒன்றுக்கு இரண்டு முறை வெளிப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதை அனைவரும் நன்கு அறிவர். புலியை பார்த்து பூனைஜ சூடு போட்டு கொண்ட கதைதான் இங்கு நடக்கிறது. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பதைப் போல உண்மை விசுவாசிகளை என்றும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கேற்ப கே.எஸ்.சுபாஷ் காட்பாடி ஒன்றியத்தில் மீண்டும் வலம் வர ஆரம்பித்து விட்டார் என்றே சொல்லலாம். முதலியார்கள் ராஜ்யம் செய்ய முடியாமல் தவியாய் தவிக்கின்றனர் என்றுதான் கூற வேண்டும். எங்கு சென்றாலும் தோல்வியை தவிர வேறெதையும் முன்னாள் மாவட்ட செயலாளர் கண்டதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர் தனது வளர்ச்சியை பற்றி திட்டம் தீட்டாமல் அடுத்தவர் வளர்ச்சியை வீழ்த்துவதில் குறியாக உள்ளார்.

கெடுவான் கேடு நினைப்பான் என்பது போன்று முன்னாள் மாவட்ட செயலாளரின் நடவடிக்கைகள் இருப்பதாக காட்பாடி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த இவர்  பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். அப்போதும் இவரது குசும்பு மட்டும் குறையவில்லை என்கின்றனர் ஒருசாரர். எது எப்படியோ தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். என்னதான் நடக்கிறது அதிமுக காட்பாடி தொகுதியில் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label