OUR CLIENTS
டெல்லியில் இன்று முதலாவது காவிரி ஆணைய கூட்டம்!
டெல்லியில் இன்று முதலாவது காவிரி ஆணைய கூட்டம்! Posted on 02-Jul-2018 டெல்லியில் இன்று முதலாவது  காவிரி ஆணைய கூட்டம்!

புதுடெல்லி, ஜூலை 2-

காவிரி ஆணையத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இதில் தமிழக பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.  

உச்ச நீதிமன்றம் உத்தரவுப் படி தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுவை மாநிலங்கள் காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
காவிரி ஆணையத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. கூட்டத்துக்கு மத்திய நீர்வள கமி‌ஷன் தலைவர் எஸ். மசூத் உசைன் தலைமை தாங்குகிறார். காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமிக்கப் பட்டுள்ள மத்திய நீர்வள கமி‌ஷன் முதன்மை பொறியாளர் நவீன்குமார் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகளான நீர் வளத்துறை பொறியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் தமிழகத்தின் பிரதி நிதிகளாக பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல முதன்மை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ளனர். இதே போல் கேரளா, புதுவை மாநில பிரதிநிதிகளும் டெல்லி சென்றுள்ளனர்.

கர்நாடகம் முதலில் காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதிகளை நியமிக்காமல் காலம் கடத்தியது. இதைத் தொடர்ந்து மத்திய அரசே அதிரடியாக கர்நாடகத்தின் பிரதிநிதிகளை நியமித்தது. இதனால் கர்நாடகம் பணிந்தது. இன்று நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்துக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் பெங்களூரில் கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி ஆணையத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக அறிவித்து இருப்பதால் கர்நாடகத்தின் அறிவிப்பு எடுபடாது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

இன்றைய  கூட்டத்தில் இதுவரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை அளவு, அணைகளின் நீர்மட்டம், திறக்கப்பட்ட நீரின் அளவு போன்றவை கணக்கிடப்பட்டு ஆய்வு செய்யப்படும். மேலும் ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட வேண்டிய நீரின் அளவு, கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நீரின் அளவு போன்றவை பற்றி முடிவு எடுக்கப்படும். தமிழகத்துக்கான ஜூலை மாத நீரின் அளவை 10 நாட்கள் இடைவெளியில் 3 தவணைகளில் திறக்க உத்தரவிடப்படும் என்று தெரிகிறது. மேலும் கேரளா, புதுவைக்கு தண்ணீர் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

Label