OUR CLIENTS
ரசாயன கழிவுகள் தேங்கும் இடமாகும் நொய்யல் ஆறு!
ரசாயன கழிவுகள் தேங்கும் இடமாகும் நொய்யல் ஆறு! Posted on 02-Jul-2018 ரசாயன கழிவுகள் தேங்கும் இடமாகும் நொய்யல் ஆறு!

திருப்பூர், ஜூலை 2-

 சாயம், பிரிண்டிங், சுத்திகரிப்பு கழிவுகள் என, திருப்பூர் நிறுவனங்களின் ரசாயன கழிவுகளை தேக்கும் இடமாக மாறி வருகிறது நொய்யலாறு.

திருப்பூரின் பின்னலாடை தொழில் வளர்ச்சி, நொய்யலுக்கு சாபமாக மாறிவிட்டது. அனுமதி பெறாத முறைகேடு ஆலைகள் மட்டுமின்றி சில அனுமதி பெற்ற ஆலைகளும்கூட சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் நேரடியாக ஆற்றில் திறந்துவிடுகின்றன. மாநகராட்சி நிர்வாகமும் தன் பங்குக்கு சாக்கடை கழிவுநீரை குழாய் பதித்து நொய்யலாற்றில் ஆங்காங்கே கொண்டுவிடுகிறது. தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து ஆற்றோரம் காடுபோல் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தி தூர்வாரினர். இருப்பினும் பாலில் விழுந்த துளி விஷம் போல் அபாயகரமான ரசாயனங்கள் மிகுந்த சாயக்கழிவுநீரால் நொய்யலாறு அழிவை நோக்கி செல்கிறது .நீர், நிலம், காற்று மாசுசாயம், சாக்கடை கழிவுநீர் மட்டுமின்றி தொழிற்சாலை திடக்கழிவுகளும் ஆற்றோரங்களில் கொட்டப்படுகின்றன. சுத்திகரிப்பு மையங்கள் சில, சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பின் இறுதியில், ரசாயனம் மிக்க திடக்கழிவுகளை வெளியேற்றுகின்றன. இந்த கழிவுகளை மூட்டைகளில் கட்டி வாகனங்களில் எடுத்து வந்து நொய்யலாறு, ஜம்மனை, சங்கிலிப்பள்ளம் ஓடைகள் மற்றும் நல்லாறு உள்ளிட்ட நீர் நிலை கரையோரங்களில் வீசி செல்கின்றனர்.பிரிண்டிங் நிறுவனங்கள் ‘இங்க்‘ வைக்கப்பட்டிருக்கும் கேன்கள், பிளாஸ்டிக் கவர்களையும், சாய ஆலைகள், நிறமிகள், ரசாயனம் வாங்கிய கவர்கள், எம்ப்ராய்டரி கழிவுகளையும், நொய்யல் ஓரத்திலேயே கொட்டுகின்றன. மழைக்காலங்களில் திடக்கழிவுகள் கரைந்து திரவமாக மாறி நொய்யலாற்றிலும் நிலத்திலும் புகுந்து ஆற்றையும், மண்ணையும் பாழ்படுத்துகிறது. சில நேரங்களில் ரசாயன கழிவுகளில் சிலர் தீ வைப்பதால் காற்றையும் சேர்த்து மாசுபடுத்திவிடுகின்றனர்.

 ஆற்றோரத்தில் அபாயகரமான திடக்கழிவுகள் கொட்டப்படுவது குறித்து மாநகராட்சி நிர்வாகம் மாசு கட்டுப்பாடு வாரியம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் துளியும் கண்டுகொள்வதே இல்லை. இதனால் சாயம், பிரிண்டிங் நிறுவனங்கள், சுத்திகரிப்பு மையங்கள், ரசாயன கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டியாக நொய்யலாறு மற்றும் துணை ஓடைகளை பயன்படுத்தி வருகின்றன. சிறு தடயம் கூட தெரியாமல் இருப்பதற்காக சில சாய ஆலைகள் ‘செப்டிக்‘ டேங்க் லாரிகளில் சாயக்கழிவுநீரை கொண்டுவந்து இரவு, நள்ளிரவு நேரங்களில் நொய்யலாற்றில் விடும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன. இதுபோன்ற செயல்களால் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் சாயக்கழிவை வெளியேற்றிய நிறுவனங்களை கண்டறிய முடியாமல் திணறுகின்றனர்.அரசு இயந்திரம் முழுவீச்சில் செயல்பட்டு நொய்யலை காக்க வேண்டும். அதே நேரம் சாயம், சாக்கடை கழிவுநீர் கலப்பதையும் ஆற்றோரங்களில் ரசாயன திடக் கழிவுகள் கொட்டுவதையும் தடுப்பதே நொய்யலாறு மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்க நாம் செய்யும் மிகப்பெரிய சேவை. இனி வரும் காலங்களிலாவது இதை பின்பற்றுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label