OUR CLIENTS
என்னுடைய தலைமைப் பொறுப்பை யாராலும் பறிக்க முடியாது!
என்னுடைய தலைமைப் பொறுப்பை யாராலும் பறிக்க முடியாது! Posted on 03-Jul-2018 என்னுடைய தலைமைப் பொறுப்பை யாராலும் பறிக்க முடியாது!

தஞ்சாவூர், ஜுலை 3-

எனக்கு வழங்கப்பட்டிருக்கும் தலைமைப் பொறுப்பை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது என, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற மறைந்த அன்பில் தர்மலிங்கம் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், இந்த திருமணத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தி வைக்கும் சிறப்பான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. வரவேற்புரை ஆற்றிய உதயநிதி, அவருக்கு வழங்கப்பட்ட தலைமைப் பொறுப்பை நான் பறித்துக் கொண்டதாக ஒரு ஏக்கத்தோடு பெருமூச்சோடு தெரிவித்தார். எனக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடிய தலைமைப் பொறுப்பு யாராலும் தட்டிப் பறிக்க முடியாது. நான் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியத்திலே இருந்து அதற்காக அன்பில் குடும்பத்தை சார்ந்தவர்கள் நான் வர இயலாத காரணத்தால்தான் உதயநிதியின் பெயரை தலைமைப் பொறுப்பிலே இணைத்து நடத்துவதாக முடிவு செய்திருந்தார்கள். 

ஆனால், நான் மேற்கொள்ளவிருந்த அந்தப் பயணத்தை ஒத்திவைத்து விட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். அதனால் உதயநிதி தவறாக கருதிட வேண்டாம். முதல்வர் பழனிசாமி செயல்படாத தலைவருக்கு பெயர் செயல் தலைவர் என்று திருமண நிகழ்ச்சியொன்றில் என்னை விமர்சித்துப் பேசியிருக்கிறார். நான் கவலைப்படவில்லை. நான் செயல்படாத தலைவராக இருக்கலாம், ஆனால், எடுபுடி முதல்வராக இருக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். மதவாத சக்தியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கக்கூடிய பாஜகவுக்கு அடிபணிந்து ஆட்சி நடத்துகிறது தமிழக அரசு.

நீட் தேர்வு, சமஸ்கிருதம், இந்தி மொழி திணிப்பு என மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசுக்கு எடுபுடி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதிலே எல்லோருக்கும் ஒப்புதல் உண்டு அதில் கருத்து மாறுபாடு கிடையாது. சென்னை-சேலம் எட்டு வழிச்சாலையை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.ஆனால், அதே நேரத்தில் மக்களுடைய கருத்துகளைக் கேட்டு அதனால் எவ்வளவு ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள், எவ்வளவு ஏக்கர் பாதிக்கப்படுகிறது, என்னென்ன நிலைமைகள் வருகிறது என்பது பற்றி ஒரு கருத்தாய்வு கூட்டத்தையும், கலந்தாய்வு கூட்டத்தையும் நடத்தி மக்களுடைய கருத்துகளை கேட்டு அதற்குப் பிறகு அந்த திட்டத்தை நிறைவேற்றலாம்.

Label