OUR CLIENTS
தார்ப்பாய் மூடாமல் செல்லும் மணல் லாரிகளால் பறக்கும் தூசு துகள்கள்!
தார்ப்பாய் மூடாமல் செல்லும் மணல் லாரிகளால் பறக்கும் தூசு துகள்கள்! Posted on 03-Jul-2018 தார்ப்பாய் மூடாமல் செல்லும் மணல் லாரிகளால் பறக்கும் தூசு துகள்கள்!

பூவிருந்தவல்லி, ஜூலை 3-

திருவள்ளூரில் விதி முறைகளை மீறி தார்ப்பாய் மூடாமல் செல்லும் மணல் லாரிகளில் இருந்து பறக்கும் தூசுகளால் விபத்து ஏற்படும் நிலையுள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 

திருவள்ளூர் நகரத்தில் ஆட்சியர் அலுவலகம் உள்பட அனைத்துத்துறை மாவட்ட தலைமை அலுவல கங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்றம், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், முப்பதுக்கும் மேற்பட்ட வங்கிகள், பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போதைய நிலையில் திருவள்ளூர்-
கடம்பத்தூர், பட்டரை பெரும்புதூர் ஆகிய பகுதி ஏரிகளில் சவ்வுடு மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சவ்வுடு மணல் ஏற்றிக் கொண்டு நகருக்குள் லாரிகள் அதிவேகமாக சென்று வருகின்றன. மேலும், இங்கிருந்து பல்வேறு செங்கல் சூளைகளுக்கு மணல் கொண்டு செல்லப்படுகிறது. இதனால், சென்னை& திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் 500 க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் சென்று வருகின்றன. 

தார்ப்பாய் மூடாமல்...: அதிலும், ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் 20 க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் ஏற்றிக் கொண்டு மேலே தார்ப்பாய் மூடாமல் செல்கின்றனர். இதனால் லாரியின் பின்னால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் மணல் தூசியால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் எதிர்பாராத விதமாக வாகனங்களில் செல்வோர் விபத்துக் குள்ளாகும் சூழ்நிலை யுள்ளது. ஏற்கெனவே நகருக்குள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கனரக வாகனங்கள் காலை எட்டு மணிமுதல் பகல் ஒரு மணிவரையிலும், மாலை நான்கு மணிமுதல் இரவு எட்டு மணிவரை வரக்கூடாது என்றும் போலீஸார் அறிவிப்பு பலகை வைத்து கண்காணித்தும் வருகின்றனர்.

விபத்து அபாயம் : மேலும், இதேபோல் தொடர்ந்து லாரிகள் வந்து செல்வதால் நகருக்குள் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகம் செல்வோர் தாமதமாக செல்ல வேண்டியுள்ளது. மேலும், சென்னை& திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து விபத்துகளும் நிகழ்கின்றன. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை வேகமாக மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். அதேபோல், திருப்பாச்சூர், பட்டரைபெரும்புதூர் ஆகிய பகுதிகளிலும் வாகன விபத்துகள் நடந்துள்ளன. இதுபோன்ற காரணங்களால் மாணவர்களும், பொதுமக்களும் ஒருவித அச்சத்துடனே நடமாட வேண்டியுள்ளது. அதனால் வேகமாகச் செல்லும் மணல் லாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். 

மணல் கடத்தல்: இப் பகுதியில் ஏரிகளில் சவ்வுடு மணல் எடுக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இதையும் மீறி சவ்வுடு மணல் என்ற போர்வையில் ஆற்று மணலையும் கடத்துகின்றனர். இதனால் லாரி வேகமாக செல்லும் போது மணல் தூசியும் பறப்பதால் அவை கண்களில் விழுந்து பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

மணல் லாரிகள் மீது நடவடிக்கை: இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அலுவலர் ஒருவர் கூறுகையில், ஏற்கெனவே நகருக்குள் வேகமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் படி ஆட்சியர் எ.சுந்தரவல்லி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் நகருக்குள் விதிமுறை மீறி வேகமாகச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டதில், மணல் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் மற்றும் அதி வேகமாக சென்ற 18 லாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, ரூ.19,600 அபராத மாகவும் வசூலிக்கப்பட்டு, 18 ஓட்டுநர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Label