OUR CLIENTS
புண்ணியம் தரும் சங்கமேஸ்வரர் கோவில்
புண்ணியம் தரும் சங்கமேஸ்வரர் கோவில் Posted on 03-Jul-2018 புண்ணியம் தரும் சங்கமேஸ்வரர் கோவில்

‘திருநணா’ என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், பவானியில் உள்ள சிவன் கோவில் ஆகும். இந்த ஆலயத்தில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

ஆலயத்தின் உட்புறத் தோற்றம்
‘திருநணா’ என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், பவானியில் உள்ள சிவன் கோவில் ஆகும். சேலத்தில் இருந்து 56 கி.மீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் ‘சங்கமேஸ்வரர்’, அம்பிகை ‘வேதநாயகி’ ஆவர். காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி ஆகிய மூன்று நதிகளும் கூடும் இடமானதால் ‘கூடுதுறை’ என்றும் சொல்லப்படுகிறது. அம்மன், நதி, தலம் மூன்றிற்கும் பவானி என்றே பெயர். இத்தலம் வந்து நீராடி, இறைவனை தரிசிப்பவர்களுக்கு ‘யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது)’ என்ற அடிப் படையில் இத்தலத்திற்கு ‘திருநணா’ என்ற புராணப்பெயர் குறிப்பிடப்படுகிறது.

ராஜ கோபுரம்
மூன்று நதிகளும் கூடும் இடத்திற்கு வட கரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோவிலின் ராஜகோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும், 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சன்னிதிகள் மட்டுமல்லாமல் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் சவுந்திரவல்லி தாயார் ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்கட்டாக உள்ளது.
குபேரன் தரிசித்த தலம்
பூலோகத்தில் உள்ள புனிதத் தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரன், இந்தத் தலத்துக்கு வந்தபோது ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் தவம் செய்வதைக் கண்டான். மேலும், மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி உள்ளிட்ட உயிரினங்களும் சண்டையின்றி, ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்து ஆச்சரியமடைந்தான். அங்கு குபேரன் செய்த தவத்தில் மகிழ்ந்து, ஹரியும் சிவனும் அவனது விருப்பப்படி இந்தத் தலம் ‘தட்சிண அளகை’ என்று அழைக்கப்படும் என்றும் அருள் செய்தனர்.

சூரிய பூஜை
நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளதால் இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. கோபுரமே லிங்கமாக வழிபடப் படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாம் நாளன்று சூரிய ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது பட்டு, சூரிய பூஜை நடப்பது சிறப்பானது.
அம்பிகை சன்னிதி
அம்பிகை வேதநாயகி சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதற்கு வலப்பக்கம் சுப்பிரமணியர் சன்னிதி இருக்கிறது. சுப்பிரமணியர் சன்னிதியைக் கடந்து அமைந்துள்ள மூலவர் சங்கமேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்கிறார். இத்தலத்தில் வீற்றுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். அருகில் ஜுரஹரேஸ்வரர் உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது அடியார்களை பிடித்த சுரநோய் நீங்க ஜுரஹரேஸ்வரரை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார்கள் என செய்தி உண்டு. இங்கு 63 நாயன்மார்களின் உருவங்கள் உள்ளன.

தென் திரிவேணி சங்கமம்
வட இந்தியாவில் உள்ள அலகாபாத்தில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்’ எனப்படுகிறது. அங்கு சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம் ‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படுகிறது. பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியம். அதனால், பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பதாகவும் ஐதீகம்.

தல விருட்சம்
இக்கோவிலின் தல விருட்சம் இலந்தை மரம். வேதமே மரத்தின் வடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சக்தி வாய்ந்தவர் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக, இங்குள்ள உள்ள அமுதலிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும். 

Label