OUR CLIENTS
மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து கொண்டு கோடியில் புரளும் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன்!
மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து கொண்டு கோடியில் புரளும் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன்! Posted on 04-Jul-2018 மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து கொண்டு கோடியில் புரளும் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன்!

வேலூர், ஜூலை 4-

வேலூர் மாவட்டத்தில் தற்போது பாலாற்று மணலை இரவோடு இரவாக திருடி விற்பனை செய்து வரும் தொழில்தான் அமோகமாக நடந்து வருகிறது. என்னதான் சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருந்தாலும், அதை திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிறது. இதுதான் கே.வி.குப்பம் தொகுதியின் அன்றாட பணியாக படித்த இளைஞர்கள் முதல் படிக்காத பாமரர்கள் வரை செய்து வருகின்றனர். 

கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவாக உள்ள செஞ்சி லோகநாதன் இன்று கோடிகளில் புரளுகிறார். இதற்கு பின்னணி காரணம் லோகநாதனை பார்க்க வரும் இளைஞர்கள் சார் நான் டிப்ளமோ படித்துள்ளேன், பொறியியல் பட்டம் முடித்துள்ளேன், பட்டப்படிப்பு முடித்துள்ளேன் என்று கூறிக்கொண்டுதான் அதிகம் வந்து சந்திக்கின்றனர். அப்படி சந்திப்புக்கு அனுமதி கிடைத்ததும் முதலில் அறைக்குள் சென்றதும் அந்த இளைஞர்கள் லோகநாதன் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து விட வேண்டும். பின்னர் சால்வை போட்டு, கைகளில் ஆப்பிள் போன்ற விலை அதிகமாக பழங்களை கொடுத்து வணக்கம் செலுத்த வேண்டும். பின்னர்தான் பேசவே ஆரம்பிப்பார் அந்த எம்எல்ஏ மகராசன் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அமைச்சர் போன்று ராஜபோகமாக வாழ்ந்து வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. 

அந்த இளைஞர்கள் எம்எல்ஏவிடம் வேலைவாய்ப்பு பற்றி முதலில் சுற்றி வளைத்து பேசுகின்றனர். அதில் எந்த பிடியும் கிடைக்காததால் இறுதியாக சார் நாங்கள் டிப்பர் லாரி வாங்கி விட்டோம், நீங்கள் உத்தரவு கொடுத்துவிட்டால் போதும் நாங்கள் மணல் விற்பனை செய்து பிழைத்து கொள்வோம் என்று மன்றாடி கேட்கின்றனர். உடனே எம்எல்ஏ சொல்லும் பதில் இதுதான், தம்பி நீ எவ்வளவு மணல் வேண்டுமானாலும் எடுத்து விற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால் எனக்கு 20 சதவீத மாமூல் பணத்தை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் எனது நேர்முக உதவியாளரிடம் செலுத்தி விடு நான் பார்த்து கொள்கிறேன் என்று உறுதியளித்து அனுப்புகிறார். அத்துடன் எனது பெயரை கேட்டாலே காவல் துறை கிடுகிடுவென அஞ்சி நடுங்கும். அந்த நிலைக்கு நான் நிலைமையை உருவாக்கி வைத்துள்ளேன் என்று அந்த இளைஞர்களிடம் பீலா விட்டு வருகிறார் செஞ்சி லோகநாதன். 

எம்எல்ஏ செஞ்சி லோகநாதன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். தனது பணிக்காலம் முடிந்ததும் சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் பாதுகாவலராக பணியில் சேர்ந்தார். பின்னர் கே.வி.குப்பம் தொகுதியில் உள்ள செஞ்சி கிராமத்துக்கு வந்தார். அங்கு அதிமுகவில் இருந்த மூத்த நிர்வாகிகளை பிடித்து பிரதிநிதியாக கால் பதித்தார். பின்னர் படிப்படியாக முன்னேறி கே.வி.குப்பம் ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்தார். இதில் கணிசமாக வாரி சுருட்டினார். ஆனால் ஆசை இவரை விடவில்லை. கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் கே.வி.குப்பம் தொகுதியில் எம்எல்ஏவாக போட்டியிட வேண்டும் என்று அமைச்சர் வீரமணியை வலம் வந்தார். இதற்காக வீரமணிக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் மாவட்ட செயலாளர் ராமு உதவியுடன் கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ சீட் பெற்றார். இதற்கு செஞ்சி லோகநாதன் கொடுத்த வாக்குறுதி என்னவென்றால் அண்ணா நான் தங்களுக்கு சேர வேண்டியதை முறைப்படி கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன் என்ற நம்பகமான வார்த்தைதான் அது. இதை நம்பிய வீரமணி தேர்தலில் போட்டியிட செஞ்சி லோகநாதனுக்கு சீட் கொடுத்தார். இதனால் பல மூத்த நிர்வாகிகளின் வயிற்றெரிச்சலையும் மீறி சீட் பெற்று எம்எல்ஏ ஆகிவிட்டார். 

இவரைப் போன்று யாரும் நடிக்க முடியாது என்றே சொல்லலாம். அப்படி ஒரு உலக மகா நடிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். தனது தொகுதி வளர்ச்சி பணிகளை துரை கன்ஸ்ட்ரக்ஷன் காண்ட்ராக்டரான லத்தேரி கோபிக்குதான் வழங்கி வருகிறாராம். கோபியை கவனிக்காவிட்டால் அமைச்சர் வீரமணியின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதை சூசகமாக அறிந்து கொண்ட செஞ்சி லோகநாதன் சாமர்த்தியமாக அரசியலில் காய் நகர்த்த ஆரம்பித்து விட்டார். இவரே தனது பினாமி பெயரில் 20க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை வாங்கி பாலாற்றில் மணல் அள்ளி அமோகமாக வாழ்ந்து வருகிறார். வேலூர் காட்பாடி காந்தி நகரில் ரூ.2 கோடி மதிப்பிலான 2 வீடுகள், வி.ஜி.ராவ் நகரில் வீட்டுமனைகள் வாங்கி குவித்துள்ளார். அத்துடன் சாமான்ய மனிதர்கள் வாழ்வது போன்ற வீட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகாவில் மாந்தோப்பு, கிரானைட் பாலிஷ் போடும் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் ரத்தத்தின் ரத்தங்கள் தரப்பில் கதை கதையாக கூறப்படுகிறது. குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி கண்டுள்ளார் இந்த மாமனிதர். தொகுதியில் இருந்து வரும் கட்சிக்காரர்களை மதிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு அவர் எம்எல்ஏ சீட் பெற்றதில் இருந்தே தொடர்ந்து இருந்து வருகிறது. நடிப்பு காண்பித்து பலரையும் ஏமாற்றி விட்டார் என்ற குற்றச்சாட்டு தொகுதியில் இவர் மீது கூறப்படுகிறது. தொகுதி வளர்ச்சிப் பணிகள் எதையும் இவர் செய்து தரவில்லை. இதை யாராவது தட்டிக் கேட்டால் நான் அமைச்சர் வீரமணியின் ஆதரவாளர் என்று சொல்லிக் கொள்கிறார். அத்துடன் தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

ஏனெனில் எனது தயவு முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கே தேவைப்படும் போது என்னை யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று மார்தட்டுகிறார் முன்னாள் ராணுவ வீரர் செஞ்சி லோகநாதன்.
இவரது தில்லுமுல்லுகள், தில்லாலங்கடி வேலைகள் பற்றியும், எந்தெந்த அரசு துறைகளுக்கு புகார் அனுப்ப வேண்டுமோ அத்தனை துறைகளுக்கும் புகார் மனுக்களை தொகுதி மக்களும், ரத்தத்தின் ரத்தங்களும் அனுப்பியும் இதுநாள் வரை நோ ரெஸ்பான்ஸ் என்பது போன்ற நிலைதான் தொடர்ந்து நிலவுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் லோகநாதன் காட்டில் அடைமழைதான் பெய்கிறது. சில லட்சங்களை ஒன்றிய பெருந்தலைவராக இருந்தபோது பார்த்து வந்த மனிதர் இப்போது கோடிகளில் புரளுகிறார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இப்படி தவறான நபர்களை அரசியல் என்ற பொதுப்பணி செய்ய மக்கள் தேர்வு செய்தால் அவர்கள் வாரி சுருட்டும் பணியை கனகச்சிதமாக செய்து வருகின்றார் இந்த பெரியமனிதர்.

கார் என்ன, பங்களா என்ன, பகட்டான வாழ்க்கை என்ன மனிதருக்கு எம்எல்ஏ பதவி என்ற பெயரில் சுக்கிர திசை அடித்து விட்டது போங்கள். இந்த நிலை நீடிப்பதால் தொகுதி மக்கள் பலர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதை ஓட்டு போடும் முன் சிந்தித்து இருக்க வேண்டும். இப்போது காலம் கடந்து விட்டது. ஆட்சியும் ஸ்திரத்தன்மை இன்றி இருப்பதால் அவரவர் விருப்பம் போல எம்எல்ஏக்களும் ஆடத் தொடங்கி விட்டனர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக விரைவில் ஒரு முடிவு வரும் என்கின்றனர் சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும். அதுநாள்வவரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label