OUR CLIENTS
ரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நேரில் ஆய்வு!
ரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நேரில் ஆய்வு! Posted on 05-Jul-2018 ரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நேரில் ஆய்வு!

சென்னை, ஜூலை 5-

ரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இடத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நேரில் ஆய்வு செய்தார். அவருடன் உதவி கமிஷனர் சுதர்சன் ஆகியோர் உடனிருந்தனர். உறவினர்களிடமும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி  விசாரணை நடத்தினார்.

சென்னை பி.எம்.தர்கா பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். 2ம் தேதி பி.எம்.தர்காவில் ரவுடிகள் அட்டூழியம் செய்வதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற காவலர் ராஜவேலுவை 10 பேர் கும்பல் சூழ்ந்து வெட்டியது. இதில் 16 இடங்களில் வெட்டுப்பட்ட ராஜவேலு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மோதலில் காவலர் ராஜவேலுவிடம் வாக்கி டாக்கி பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று காலை முக்கியக் குற்றவாளியான அரவிந்தன் என்பவர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆனந்தன் உள்ளிட்ட மேலும் சிலர் தலைமறைவானார்கள். இதில் போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் முக்கிய குற்றவாளி ஆனந்தன் சிக்கினார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜவேலுவிடம் பறிக்கப்பட்ட வாக்கி டாக்கி தன்னிடம் உள்ளதாகவும் அதை மத்திய கைலாஷ் ஐடிஐ வளாகத்தின் பின்புறம் ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளதாகவும் கூறியதை அடுத்து போலீஸார் அங்கு அவரை அழைத்துச் சென்றனர்.
தனியான இடத்துக்கு விழுந்து கிடந்த மரம் ஒன்றின் அருகே அவரை போலீஸார் அழைத்துச் சென்றபோது அவர் வாக்கி டாக்கியை எடுப்பதுபோல் உள்ளே மறைத்துவைத்திருந்த ஆயுதத்தை எடுத்து அருகில் நின்றிருந்த உதவி ஆய்வாளர் இளையராஜாவை வெட்ட முயன்றுள்ளார்.

இதில் இளையராஜாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமாவதை புரிந்துகொண்ட கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் ஆயுதத்தை கீழே போடும்படி எச்சரித்துள்ளார். ஆனால் ஆனந்தன் உதவி ஆய்வாளர் இளையராஜாவை தாக்க முன்னேறியுள்ளார். இதனால் எச்சரிக்கை அடைந்த உதவி ஆணையர் சுதர்சன் வேறு வழியின்றி ஆனந்தனை சுட்டுள்ளார். இதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காயமடைந்த இளையராஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் கிடந்த ஆயுதம் கைப்பற்றப்பட்டது. ஆனந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரிவு 176-ன் கீழ் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் போலீஸார் கொலைமுயற்சி வழக்காகப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து சைதாப்பேட்டை விரைவு நீதிமன்ற நடுவர் சாண்டில்யன் சமபவ இடத்தில் ஆய்வு நடத்தினார். அவருடன் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினர். துப்பாக்கிச் சூடு நடந்தது எப்படி, எந்த இடத்தில் குற்றவாளி நின்றிருந்தார், என்ன ஆயுதத்தால் எஸ்.ஐ இளையராஜாவை தாக்கினார், தற்காப்புக்காக தான் என்னென்ன நடவடிக்கை எடுத்தேன் என்பதை நீதிபதி விசாரணையில் சம்பவ இடத்தில் கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் கூறினார்.

பின்னர் நீதிபதி சாண்டில்யன் சம்பவ இடத்திலிருந்து ஆனந்தன் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஆனந்தனின் மனைவி, தாயார் உள்ளிட்ட உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் காயமடைந்த உதவி ஆய்வாளர் இளையராஜாவிடமும் விசாரணை நடத்துவார். உயிரிழந்த ஆனந்தனின் உடற்கூறு ஆய்வு வீடியோ பதிவுடன் நீதிபதி முன்னிலையில் நடக்கும். அதன் அறிக்கை மற்றும் நீதிபதி அறிக்கை, தடயவியல் அறிக்கையுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

Label