OUR CLIENTS
ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த ரஜினி தமிழக அரசியலில் கால் பதித்ததின் பின்னணி!
ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த ரஜினி தமிழக அரசியலில் கால் பதித்ததின் பின்னணி! Posted on 06-Jul-2018 ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த ரஜினி தமிழக அரசியலில் கால் பதித்ததின் பின்னணி!

வேலூர், ஜூலை 4-

திரைப்படத்துறையில் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் ஆரம்ப காலத்தில் திரைப்படத் துறையில் படிப்படியாக முன்னுக்கு வந்தாலும் பல வெற்றிப்படங்களை தந்ததால் ரஜினியை நாடி வந்த ரசிகர்கள் நற்பணி மன்றத்தை அரசியல் அமைப்புபோல் கொண்டு வந்தனர்.

முன்பு எம்ஜிஆர், சிவாஜிக்கு பட்டிதொட்டியெல்லாம் நற்பணி மன்றம் இருப்பதுபோல் ரஜினிக்கும் வேகமாக நற்பணி மன்றம் வளர்ந்தது. நற்பணி மன்ற நிர்வாகிகள் அத்தனை பேரும் சொந்த பணத்தை செலவு செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.

முன்பு திரைப்பட ஸ்டைலில் சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பது ஒரு வகை. அடுத்து நான் ஒருமுறை சொன்னால் நூறு முறை சொன்னது போல் என்ற பஞ்ச் வசனத்தை பேசாதவர்கள் யாரும் இல்லை. சீவிடுவேன் வசனம் ஏவிஎம்மின் முரட்டுக்காளை படத்தில் இடம் பெற்றது. சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரையில் தன் தலைமுடியை கையால் தடவிக் கொண்டு நான் யார் தெரியுமா? ரஜினி என்று சொல்லி கொள்வார்கள். இதனால் ரஜினியின் வளர்ச்சி அதிவேகமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ் என்ற அமைப்புக்கு பின்னால் ரஜினி அரசியலுக்கு வந்தால் பெரியதொரு வெற்றியை பெற இருக்கிறார் என்ற செய்தி வேகமாக பரவியதால், அத்தனை ரசிகர் மன்ற நிர்வாகிகளும் அரசியல் அமைப்பை போல் வட்டம், பகுதி, ஒன்றியம் மாவட்டம் என்று நிர்வாகிகளை நியமனம் செய்தார்கள். இதை ரஜினி தலைமை மன்றத்தில் அத்தனை பேர்களும் பதிவு செய்தார்கள். ஒரு அரசியல் கட்சிபோல் நிர்வாகம் இருந்தது. இந்த நிர்வாகத்தை ரஜினியின் அண்ணனே முழுமையாக கவனித்து வந்தார். அதனால் ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் மற்றவர்களுக்கு சற்று நடுக்கத்தை தந்தது.

அந்த காலகட்டத்தில்தான் நான் அரசியலுக்கு வருவேன். வரவேண்டிய நேரத்தில் வருவேன் என்று ரஜினியே சொன்னதால் தேர்தல் வரும் நேரங்களில் ரஜினி அரசியலுக்கு வந்து விடுவாரா என்ற ஏக்கத்தில் அவர் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த காலகட்டத்தில் 1996ம் ஆண்டு பொதுத்தேர்தல் வந்தது. அந்த காலகட்டத்தில் அதிமுக மீதும், ஜெயலலிதா மீதும் பல குற்றச்சாட்டுகளை வரிசையாக சொல்லி வந்தார்கள். தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் வரும் என்று சொன்ன நேரத்தில் வைகோ திமுகவில் இருந்து பிரிந்து சென்று மதிமுக என்று தனிக் கட்சி தொடங்கினார். அதேநேரம் ஜி.கே.மூப்பனார் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து, தமிழ்மாநில காங்கிரஸ் என்று ஒரு கட்சியை தொடங்கினார். இந்த காலகட்டத்தில்தான் ரஜினி மூப்பனாரையும், திமுகவையும் ஆதரித்த வண்ணம் பேசினார். மீண்டும் அதிமுக ஆட்சி வந்தால் தமிழ்நாட்டு மக்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ஒரு பஞ்ச் டயலாக்கை பேசி, நான் கருணாநிதியை அவர் முதல்வரான பின் கோட்டையில் போய்தான் சந்திப்பேன் என்று சொன்னார். அது நடக்கும் ஆன்மிகவாதிகள் பேசிக்கொண்டார்கள். ரஜினியும் முழுநேர ஆன்மிகவாதியாக இருந்ததால் அவர் சொல்வாக்கும் பலிக்கும் என்று பேசினார்கள்.

தேர்தல் வந்தது. திமுகவும் தமிழ்மாநில காங்கிரசும் கூட்டணி அமைத்து இடங்களை பங்கிட்டு கொண்டார்கள். ஆனால் ரஜினி எதையும் எதிர்பார்க்கவில்லை. அன்று அவர் அரசியல் கட்சி தொடங்கி இருந்தால் அவர் ரசிகர்கள் பலர் எம்எல்ஏக்கள், எம்பிக்களாக மாறி இருப்பார்கள். ரஜினி எடுத்த முடிவுக்கு அவர் ரசிகர்கள் கட்டுகோப்புடன் இருந்தார்கள். தலைவர் சொல்லிவிட்டார். திமுக கூட்டணியை வெற்றிபெற வைப்போம் என்று பிரசாரத்திலும் கடுமையாக ஈடுபட்டார்கள். ஆன்மிகவாதி ரஜினி சொன்னது நடந்தது. கருணாநிதி முதல்வரான பின் அவரை கோட்டையில் போய்தான் சந்தித்தார் ரஜினிகாந்த். ஆன்மிகவாதிகளின் சொல்லில் நியாயம் இருக்கும். அதற்கு பின்னால் அரசியலுக்கு வருவார் என்று அவர் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

1998ம் ஆண்டு மக்களவை தேர்தல், 1999ம் ஆண்டு மீண்டும் மக்களவை தேர்தல், 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2004ம் ஆண்டு மக்களவை தேர்தல், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல், 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளன. இத்தனை தேர்தல்களிலும் ரஜினி தனிக்கட்சி தொடங்குவார். தேர்தலை சந்திப்பார் என்று அவர் ரசிகர்கள் பெரியளவு எதிர்பார்ப்பபோடு இன்றுவரை காத்திருக்கிறார்கள்.

தற்போது கடந்த 7ம் தேதி ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள காலா திரைப்படம் அரசியல் வசனம் பேசி வருகிறது. ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை சிறிதளவு கூட குறையாமல் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதற்கிடையே தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குடும்பத்துக்கு பண உதவியும் ஆறுதல் சொல்லவும் காயம் அடைந்தவர்களுக்கு பண உதவியும் நேரடியாக ஆறுதல் சொல்லவும் தூத்துக்குடி சென்றிருந்தார். அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி நேரடியாக விசாரித்து வந்தார் ரஜினி. இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோது தூத்துக்குடி சம்பவத்துக்கு யார் பொறுப்பு என்பதற்கு விளக்கம் அளித்தார். சமூக விரோதிகள் யார் என்று எனக்கு தெரியும் என்றார். இதற்கு ரஜினி சொன்ன கருத்துக்கு பெரிய குற்றச்சாட்டுபோன்று அரசியல் கட்சி தலைவர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை பதிவு செய்தனர்.

கடந்த 1996ல் ரஜினி எந்த எதிர்பார்ப்பும் இல்லாது திமுக மற்றும் தமிழ்மாநில காங்கிரசை ஆதரித்தது போல் ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கும் திமுக கூட்டணியை ஆதரிப்பார் என்று கனவோடு இருந்தவர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் ரஜினியின் பேச்சு இருந்ததால் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார் ரஜினி. இதில் பத்திரிகையாளர்களை பார்த்து அவர் அழைத்தது ஏய் ஏய் என்று திரைப்பட வசனம் பேசியதுதான் அங்கு ஹைலைட்டாகும். திமுக கூட்டணியில் 9 கட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இவர்கள் அனைவரும் ஒரே அணியில் நின்றாலும் ரஜினியின் அரசியல் வரவால் பெரிய மாற்றங்கள் வரும் என்று அரசியல் ஆய்வார்கள் சொல்வதால் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்று சிலர் வேதனைப்படுகிறார்கள். ஒரு மனிதன் ஒருமுறை ஏமாறலாம்.

எப்போதும் ஏமாறுவார் என்று எதிர்பார்க்க முடியாது. இன்று ஆட்சியாளர்களுக்கு எதிராக ரஜினி இருக்கிறாரா இல்லை ஆதரவாக இருக்கிறாரா என்பதை கூட யாராலும் ஆய்வு செய்ய முடியாது. அதேநேரம் திமுக கூட்டணியை ஆதரிப்பார் என்பதையும் யாராலும் கணக்கிட்டு சொல்ல முடியாது. தமிழ்நாட்டின் அரசியலில் மாற்றம் வர இருக்கிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் எப்படிப்பட்ட மாற்றம் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. அதேநேரம் ரஜினி மன்ற நிர்வாகிகள் அன்று எம்ஜிஆர் ரசிகர்களாக இருந்தவர்களை அணுகி ஆதரவு கேட்டு வருகிறார்கள். நாளைக்கு ரஜினி அரசியல் களத்தில் முழுமையாக இறங்கினால் வெற்றி அவர் பக்கம் என்று மக்கள் சொல்கிறார்கள். தமிழகத்தில் எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா போட்ட திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

எம்ஜிஆர் பாணியில் ரஜினி வந்தால் வெற்றியை குவிப்பார் என்று ரஜினியின் ஆதரவாளர்கள் பேசிவருகிறார்கள். அடுத்து ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்பதை அவர் ரசிகர்களைவிட எதிர்கட்சிக்காரர்களுக்குதான் அவ் வரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் வரும் என்பதையும், இதை தடுக்க யாராலும் முடியாது என்பதும்தான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் உண்மையாகும். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல யாரது திறமையையும் மூடி மறைக்க இயலாது.

Label