OUR CLIENTS
தொற்றுநோய்களை பரப்பும் இடமாக மாறிய வேலூர் நேதாஜி மார்க்கெட்! மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் எங்கே?
தொற்றுநோய்களை பரப்பும் இடமாக மாறிய வேலூர் நேதாஜி மார்க்கெட்! மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் எங்கே? Posted on 09-Jul-2018 தொற்றுநோய்களை பரப்பும் இடமாக மாறிய வேலூர் நேதாஜி மார்க்கெட்! மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் எங்கே?

வேலூர், ஜூலை 9-

தொற்றுநோய் பரப்பும் இடமாக மாறியுள்ளது வேலூர் நேதாஜி காய்கனி மார்க்கெட். பொதுமக்கள் இந்த மார்க்கெட்டுக்குள் சென்று பொருட்களை வாங்கி வர பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

வேலூர் நேதாஜி காய்கனி மார்க்கெட்டில் கிடைக்காத பொருட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டாகும். ஆனால் சுத்தம், சுகாதாரம் இல்லாத நிலை பல ஆண்டுகளாக தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து நாளிதழ்கள் சுட்டிக் காட்டி செய்திகள் வெளியிடும்போது மட்டும் பெயரளவுக்கு சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. பின்னர் நாள் கணக்கில் குப்பைகள், அழுகிய பழங்கள், காய்கள் அப்படியே துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு, அழுகிய சேரும், சகதியுமாக உள்ள இடத்தை கடந்து சென்று பொருட்கள் வாங்கிச் செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இல்லத்தரசிகள்தான் அதிகம் இந்த மார்க்கெட்டுக்கு வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பூ மார்க்கெட், காய்கனி, மளிகை போன்ற பொருட்களை இங்குதான் வாங்கிச் செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மார்க்கெட்டுக்கு வருகை தருகின்றனர். ஆனால் சுத்தம் இல்லாமல் தொற்றுநோய் பரவும் இடமாகவே தொடர்ந்து வைத்துள்ளது மாநகராட்சி நிர்வாகம். மாநகராட்சி ஆணையர் இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகம் மாநகர மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், நகர் நல அலுவலர்கள் இந்த காய்கனி மார்க்கெட்டில் எப்போதாவது பார்வையிட்டு ஆய்வு செய்தது உண்டா? என்றால் இல்லை என்பதுதான் பதிலாக கிடைக்கிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் ஒரு பொது இடத்தில் இப்படி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை சுத்தப்படுத்தி பிளீச்சிங் பவுடர் தெளித்து தூய்மையான வைத்துக் கொள்ள எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லைபலர் இருசக்கர வாகனங்களில் இந்த காய்கனி மார்க்கெட்டுக்கு வந்து செல்ல முடியாமல் திகைக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் செயலிழந்து காணப்படுகிறது. குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை வந்து செல்லும் இடமாக இருப்பதால் எதிர்ப்பு சக்தி குறைந்த இவர்களை தொற்றுநோய் எளிதில் தொற்றிக் கொள்ளும் என்பது படித்து அரசு பணியில் உள்ளவர்களுக்கு (மாநகராட்சி அலுவலர்களுக்கு) தெரியாதா?. நேதாஜி காய்கனி மார்க்கெட்டை தொற்று நோய் பரப்பும் இடமாக மாற்றி வைத்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். சுத்தமாக வைத்திருக்க வேண்டிய இடத்தை திரும்பிக் கூட பார்க்காமல் எப்படி இவர்களால் பணியாற்ற முடிகிறது என்பதே பொதுமக்கள் கேட்கும் ஒரே கேள்வியாக உள்ளது. கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற ரீதியில் மாநகராட்சியின் செயல்பாடு இருந்து கொண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். வரி வசூல் செய்யும் மாநகராட்சிக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாமல் உள்ளது கையாலாகாத நிலையின் உச்சகட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். மாநகராட்சி ஆணையர் பொறுப்பின்றி என்னை அமைச்சர் சென்னைக்கு அழைத்துள்ளார் என்று கூறி காலம் கடத்தி வருகிறார்.

இதற்கு பின்னணியில் உள்ளது நான் என்ன பொறுப்பு ஆணையர்தான் என்ற பதிலை பொறுப்பில்லாமல் கூறி வருகிறார் ஆணையர் விஜயகுமார். தலையே சரியில்லாதபோது வால் எப்படி சரியாக இருக்கும். அதாவது முன் ஏர் எப்படியோ அப்படித்தான் பின் ஏர் இருக்கும் என்று பழமொழி கூறுவதுண்டு. அப்படித்தான் மாநகராட்சியின் செயல்பாடுகளும் இருந்து வருகிறது. நேதாஜி மார்க்கெட்டை இனி ஒரு நாளிதழும் குறை உள்ளது என்று சுட்டிக் காட்டி செய்தி வெளியிடாத வண்ணம் அதை முறையாக சுத்தமாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். பல நகராட்சிகளில் காய்கனி மார்க்கெட்டுகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன. மாநகராட்சி முன் உதாரணமாக இல்லாமல் இப்படி பாடாய் படுத்தி மக்களை வஞ்சிக்கும் நிர்வாகம் நடத்தி வருகிறது என்பதை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் வேதனையைத்தான் தருகிறது. இந்த நிலை மாற வேண்டும். சுத்தம், சுகாதாரம் பேணி காக்கப்பட வேண்டும் என்பதுதான் மாநகர மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாகும். இனி மாநகராட்சியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label