OUR CLIENTS
புதிய மின் இணைப்புக்கான டெபாசிட் 5% உயரும் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தகவல்!
புதிய மின் இணைப்புக்கான டெபாசிட் 5% உயரும் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தகவல்! Posted on 09-Jul-2018 புதிய மின் இணைப்புக்கான டெபாசிட் 5% உயரும் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தகவல்!

நாமக்கல், ஜூலை 9-

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதிய வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் கட்டுமான பணிகளைத் தொடங்கி வைத்தார் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி.

புதிதாக மின் இணைப்புப் பெறுவதற்கு 5 சதவீதம் மட்டுமே வைப்புத் தொகை உயர்த்தப்படவுள்ளது. ஆனால், மின் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, நாமக்கல், சேந்தமங்கலம் உள்ளிட்ட இடங்களில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, திருச்செங்கோட்டில் 344 பெண்களுக்கு, அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தில் இரு சக்கர வாகனங்களை வழங்கினார். 
மேலும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து அமைச்சர் பி.தங்கமணி பேசியது: பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு, மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி சிறப்பாக கடன்களை அளித்து வருகிறது. அதேபோல, உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தில் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதி பொதுமக்களின் குடிநீர்த் தேவையை கூடுதலாக பூர்த்தி செய்யும் வகையில் ரூ.460 கோடி மதிப்பில், புதிய 2 குடிநீர்த் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். திட்டங்கள் ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். சர்வதேச தரத்திலான சாலைகள், காவிரி ஆற்றுப் பாலம் உள்ளிட்ட திட்டங்களால் இம் மாவட்ட மக்கள் பெரிதும் பயன் பெற்று வருகின்றனர் என்றார்.

பின்னர், நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சத்துணவுக்கு முட்டை விநியோகம் செய்துவரும் நாமக்கல் தனியார் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வருமான வரித் துறை எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை. ஆனால் சில ஊடகங்கள்தான் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, 135 இடங்களில் சோதனை செய்யப்பட்டு புகார்களில் சிக்கி இருக்கும் டி.டி.வி. தினகரன் போன்றோர், இந்த தனியார் நிறுவன சோதனை விவகாரத்தில் கருத்துக்கூறுவது முற்றிலும் பொருந்தாது.

மின் கட்டணம் மற்றும் வைப்புத்தொகை உயர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மாநிலத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கு 5 சதவீதம் மட்டுமே வைப்புத் தொகை உயர்த்தப்படும். அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஆனால், மின் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு இளநிலைப் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு 960 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதத்தில் இப் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்ட பிறகு, மின் வாரியத்துக்கு மின்மாற்றிகள் உற்பத்தி செய்வதற்கான தாமிரம் பற்றாக்குறை எதுவும் இல்லை. வேறு இடங்களில் இருந்து அவை கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே, தற்போது மின்மாற்றிகள் தேவையான அளவு உற்பத்தி செய்ய முடிகிறது என்றார்.

Label