OUR CLIENTS
தினகரனை முதல்வராக்க குதிரை பேரம் ஆரம்பம்!
தினகரனை முதல்வராக்க குதிரை பேரம் ஆரம்பம்! Posted on 10-Jul-2018 தினகரனை முதல்வராக்க குதிரை பேரம் ஆரம்பம்!

வேலூர், ஜூலை 10-

அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை முதல்வராக்க குதிரை பேரம் ஆரம்பமாகி விட்டது. இதற்கு பின்னணியில் திமுகவும் கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் சென்ற இடங்களில் எல்லாம் திமுக செயல்வீரர்கள் மத்தியில் பேசுகையில், விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். உற்சாகமாக உடன்பிறப்புகள் பணியாற்றுங்கள் என்று கூறி வந்தார்.

மு.க.ஸ்டாலின் இப்படி பேசிய அடுத்த நாள் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், காட்பாடி தொகுதி எம்எல்ஏவுமான துரைமுருகன் இன்னமும் 21 நாட்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று தெம்பாக அறிவிப்பு செய்தார். இதற்கு பிறகு வரும் டிசம்பர் மாதம் சட்டசபை மற்றும் நாடாளுமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் வர இருப்பதாகவும் அவர் அடித்து சொல்லி மேடைகள் தோறும் முழங்கினார்.

இது தமிழக ஆட்சியை கைப்பற்ற திமுக தரப்பில் ஏதோ சதி வேலைகள் நடக்கிறது என்று வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.டி.வி.தினகரன் இப்போது ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர். இந்த 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பை இருவேறு விதங்களாக கொடுத்துள்ளது. 3வதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நீதிபதி, டி.டி.வி.தினகரனுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தால் டி.டி.வி.தினகரனை முதல்வராக ஏற்று திமுக ஆதரவு தர வேண்டும். இதுதொடர்பாக எழும் செலவுகளை தினகரன் ஏற்றுக் கொள்வார் என்று தினகரன் தரப்பிலிருந்து ஸ்டாலின் தரப்புக்கு தூது வந்தவர் கூறியுள்ளார். ஸ்டாலின் தரப்பில் நீ அரிசி கொண்டு வா, நான் உமிகொண்டு வருகிறேன். இருவரும் ஊதி ஊதி சாப்பிடலாம் என்ற கணக்காக இந்த சம்பவம் உள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனிஅரசு, கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகிய மூவரும் நம்மோடுதான் கமுக்கமாக இருக்கிறார்கள். எனவே தினகரன் தரப்பினர் 1+18+3=22 எம்எல்ஏக்களும் திமுகவை ஆதரிக்கட்டும். இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையு விரட்டிவிட்டு ஸ்டாலினை முதல்வராக்கட்டும் என்று சொல்லப்பட்டது.

தினகரன் தரப்பிலிருந்து தூது வந்தவர்கள் ஸ்டாலின் தரப்பு வைத்த வாதத்தை மறுக்க முடியாமல் ஓட்டம் பிடித்தனர். முதல்வர் ஆகிவிட்டது போல ஸ்டாலின் கருதுகிறார். தாம் முதல்வர் ஆவது உறுதி என்று கமுக்கமாக பேரம் நடத்துகிறார் டி.டி.வி.தினகரன். பேரம் நடந்தபடியே இருக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டுத் தலைமையில் ஆட்சி வழக்கம்போல தொடரத்தான் செய்கிறது. இந்த திட்டம் என்றைக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதுதான் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் நோக்கர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.

Label