OUR CLIENTS
வேலூர் மீன் மார்க்கெட்டில் செருப்பு காலால் மீன்களை டிரேயில் அடுக்கி வைத்து விற்பனை செய்யும் அவலம்!
வேலூர் மீன் மார்க்கெட்டில் செருப்பு காலால் மீன்களை டிரேயில் அடுக்கி வைத்து விற்பனை செய்யும் அவலம்! Posted on 10-Jul-2018 வேலூர் மீன் மார்க்கெட்டில் செருப்பு காலால் மீன்களை டிரேயில் அடுக்கி வைத்து விற்பனை செய்யும் அவலம்!

வேலூர், ஜூலை 10-

வேலூர் மீன் மார்க்கெட்டில் செருப்பு காலால் மீன்களை டிரேயில் அடுக்கி வைத்து விற்பனை செய்யும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கண்டும் காணாமல் இருப்பதால் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.

வேலூர் மக்கான் பகுதியில் மாநகராட்சி மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட் தினமும் இரவு 2 மணி முதல் செயல்படத் தொடங்குகிறது. இந்த மார்க்கெட்டுக்கு அதிகளவில் கேரளா, விசாகப்பட்டினம், புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அங்கிருந்து வேலூர் மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் மீன்கள் ஐஸ் வைத்து கொண்டு வரப்படுகிறது. அந்த மீன்கள் கெடாமல் இருப்பதற்காக ஃபார்மலின் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இதனால் மீன்கள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்படி எடுத்து வரப்படும் மீன்கள் மீன்மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. அந்த மீன்களின் மீது ஈக்கள் உட்கார்ந்து விடுகின்றன. இதனால் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது. ஃபார்மலின் வேதிப்பொருள் கலக்கப்படுவதால் வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படுகின்றன.

ஈக்களால் வாந்தி, பேதி பரவவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதுதான் இப்படி என்றால் பிளாஸ்டிக் டிரேக்களில் கொண்டு வரப்படும் மீன்களை வேலூர் மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் செருப்பு கால்களால் மிதித்து இடநெருக்கடி இல்லாமல் செய்து மேலும் மீன்களை அந்த டிரேயில் கொட்டி விடுகின்றனர். இதுபோன்ற செயல்கள் கண்களுக்கு தெரியாமல் இங்கு அரங்கேறுகின்றன. இதுதெரியாமல் நுகர்வோர் மற்றும் சிறு மீன் வியாபாரிகள், தலையில் கூடைகளை சுமந்து கொண்டு மீன்களை விற்பனை செய்வோர், தெருவோரங்களில் மீன் கடை அமைத்து விற்பனை செய்வோர் வாங்கிச் செல்கின்றனர். மீன் மார்க்கெட்டும் சுத்தமான, சுகாதாரமான முறையில் பராமரிப்பதும் இல்லை. மாறாக துர்நாற்றம் அதாவது அழுகிய மீன் நாற்றம் மூக்கை துளைத்து விடுகிறது. மீன் மார்க்கெட்டில் விற்பனை முடிந்ததும் கழுவி சுத்தமாக பராமரிப்பதே இல்லை. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வேலூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கண்டுகொள்வதே இல்லை. நகர் நல அலுவலரும் கண்டும் காணாமல் இருந்து கொள்கிறார். துப்புரவு ஆய்வாளர்கள் இந்த பக்கம் தலை வைத்து கூட படுப்பது இல்லை. மாநகராட்சி ஆணையர் விஜயகுமாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான் என்ன முழுநேர மாநகராட்சி ஆணையர் இல்லை. நான் பொறுப்பு ஆணையர்தான் என்று கூறி காலத்தை கடத்துவதும், எந்த பணியையும் கவனிக்காமல் அமைச்சர் வீரமணி என்னை சென்னைக்கு அழைத்துள்ளார் என்று பழியை அவர் மீது போட்டு விட்டு வேலூரிலேயே இல்லாமல் விஜயகுமார் அவுட் ஆஃப் ஸ்டேஷன் என்று தப்பித்து கொண்டிருக்கிறார். வேலூர் மாநகராட்சிக்கு இதுபோன்ற கழுவுற மீனில் நழுவுற மீன் போல பல காரணங்களை கூறி தாங்கள் தப்பித்து கொள்வதில் மட்டும் குறியாக உள்ளார். வேலூர் மீன் மார்க்கெட்டை பொறுத்தவரையில் சுத்தம் கிலோ என்ன விலை என்று கேட்கும் வியாபாரிகளும், விற்பனையாளர்களும், மாநகராட்சி அலுவலர்களும்தான் இங்கு அதிகம் உள்ளனர் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி பொறுப்பற்ற பதிலை சொல்லி காலம் கடத்தி வருகின்றனர் மாநகராட்சி அலுவலர்கள். துப்புரவு பணியாளர்கள் இந்தப்பக்கம் தாங்கள் விரும்பும்போது மட்டும் சென்று வருகிறார்களாம்.

மீன் கழிவுகள் ஆங்காங்கே மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதையும் அடிக்கடி அப்புறப்படுத்தி சுத்தமாக மார்க்கெட் சுற்றுப்புறத்தை பராமரிப்பதும் இல்லை. தங்களது பணியை கடமையை செய்யவே முடியாத மாநகராட்சி அதிகாரிகள் இருந்தென்ன, இல்லாமல் போனால் என்னவென்று மாநகர சமூக ஆர்வலர்களும், பல பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதான் இப்படி என்றால் மக்கான் மீன் மார்க்கெட்டில் ரௌடிகள் தொல்லை அதிகம் இருக்கிறது. இருசக்கர வாகனங்களை திருடிச் செல்வது, கத்தியை காண்பித்து மாமூல் கேட்டு பொதுமக்களை அச்சுறுத்துவது தொடர்ந்து வருகிறது. 

இந்த தொல்லைகளில் இருந்து பொதுமக்கள் விடுபடவும், நிம்மதியாக மார்க்கெட்டுக்கு வந்து செல்லவும் வேலூர் வடக்கு போலீசார் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாமூல் மட்டும்தான் இவர்களுக்கு வசூலிக்க தெரியுமாம். இதுபோன்ற மக்கள் சேவை செய்ய வடக்கு போலீசாருக்கு பாவம் தெரியாதாம். இது எப்படியிருக்கு என்று பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி வேலூர் மாநகர பொதுமக்கள் அரசு அலுவலர்களின் கையாலாகாத தனத்தால் செத்து சுண்ணாம்பு ஆகி வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதுதான் அவர்களது வேதனையின் வெளிப்பாடு ஆகும். இனியாவது இந்த அலுவலர்கள் மனம் திருந்துவார்களா? மக்கள் பணியாற்ற களம் இறங்குவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label