OUR CLIENTS
சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளில் புதுச்சேரி மாணவர்கள் சேருவதில் சிக்கல்!
சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளில் புதுச்சேரி மாணவர்கள் சேருவதில் சிக்கல்! Posted on 10-Jul-2018 சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளில் புதுச்சேரி மாணவர்கள் சேருவதில் சிக்கல்!

புதுச்சேரி, ஜூலை 10-

சிறுபான்மை மருத்துவக் கல்லூரி காலியிடங்கள் அகில இந்திய அளவில் கொண்டு செல்லப்பட்டால் புதுச்சேரி மாணவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.

புதுச்சேரியில் உள்ள மூன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், 400 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில், கடந்தாண்டு அரசு ஒதுக்கீடாக ஒவ்வொரு கல்லூரியும் தலா 55 சீட்கள் வீதம் 165 இடங்களை அரசுக்கு வழங்கியுள்ளன. இந்தாண்டு 147 இடங்களை அரசு ஒதுக்கீடாக அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கடந்த காலங்களில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., இடங்களை அந்தந்த கல்லூரிகளே நிரப்பிக் கொள்ளும். தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சுயநிதி மருத்துவக் கல்லூரியின் 125 நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கும், நீட் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலம், கணினி கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

பிம்ஸ் கல்லூரி கிறிஸ்தவ சிறுபான்மை கல்லூரியாகும். இக்கல்லூரி யின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை புதுச்சேரியை சேர்ந்த கிறிஸ்தவர்களை மட்டும் சேர்க்க முடியும். இதேபோல்வெங்கடேஸ்வரா கல்லூரி தெலுங்கு பேசும் சிறுபான்மை பிரிவு கல்லூரியாகும். இதில் புதுச்சேரியை சேர்ந்த தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் மட்டுமே சேர முடியும். சிறுபான்மை கல்லூரியில் உள்ள அனைத்து இடங்களும் புதுச்சேரி மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. இதன்படிஇறுதி கட்ட மாப்ஆப் கலந்தாய்வில், புதுச்சேரியை சேர்ந்த சிறுபான்மை மாணவர்கள் சேராதபட்சத்தில், அந்த காலியிடங்களை புதுச்சேரி பொது பிரிவினர்களை கொண்டு நிரப்பலாம். அதன் பின்பும் சீட் காலியாக இருந்தால் அந்த இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு செல்லலாம் என விதிமுறை வகுக்கப்பட்டது.

இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவக் கல்லூரிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை வாங்கி யுள்ளன. எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை யில் எந்த ஒரு இட ஒதுக்கீட்டு சீட் காலி யானாலும், அவை அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு செல்ல வேண்டும். 

ஆனால், புதுச்சேரி அரசு சிறுபான்மையினர் என்ற இடஒதுக்கீட்டை புதுச்சேரி பொது பிரிவினருக்கு மாற்றி, பின்பு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்றியதாகவும், சிறுபான்மை பிரிவில் காலியான அனைத்து இடங்களையும், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மாற்ற வேண்டும் என, முறையிட்டு இடைக்கால தடை வாங்கியுள்ளன.
அண்மையில்முதுநிலை மருத்துவ படிப்புகளில், சிறுபான்மை கல்லூரிகளில் காலியிடங்கள் ஏற்பட்டபோது, புதுச்சேரி பொது பிரிவுக்கு மாற்றப்படாமல், நேரடியாக அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்டது. இந்த நடைமுறையை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு அமல்படுத்தினால் புதுச்சேரி மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படும். புதுச்சேரி மாநிலத்தில் 3 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மூன்று சுயநிதிமருத்துவக் கல்லூரிகள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டு இடங்களை அளித்து வருகின்றன.

மீதமுள்ள நான்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையில், அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தாலும், அகில இந்திய அளவில் புதுச்சேரி மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு, இக்கல்லூரிகளில் சேர முடியும்.

தற்போது சிறுப்பான்மை கல்லூரியில் நிரம்பாத இடங்களும், நேரடியாக அகில இந்திய அளவில் கொண்டு செல்லப்பட்டால், புதுச்சேரி மாணவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். சுயநிதி கல்லூரிகளின் நிர்வாக இடங்களுக்கு கூட அகில இந்திய அள வில் புதுச்சேரி மாணவர்கள் போட்டிபோட்டிக் கொண்டு சேர வேண்டிய கூட சூழல் ஏற்படும். சிறுபான்மையினர் இடங்கள் சம்பந்தமாக சுயநிதி மருத்துவக் கல்லூரி இடைக்கால தடை வாங்கியுள்ள சூழ்நிலையில், அது விலக்கப்படவில்லை. எனவே, புதுச்சேரி சிறுபான்மையினர் காலியிடங்கள், இந்தாண்டு புதுச்சேரி பொது பிரிவினருக்கு மாற்றப்பட்டு, அதன் பிறகு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு கொண்டு செல்லப்படுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இந்தாண்டு 147 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெற்றாலும், சுயநிதி மருத்துவக் கல்லூரி ஒன்றிற்கு சீட் வழங்கியதில் உடன்பாடு இல்லை. அக்கல்லூரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இதில் இடைக்கால தடை பெற்றால், மாணவர் சேர்க்கையில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும். இடங்களும் குறையும்.

அகில இந்திய அளவில் போட்டி போட்டுக்கொண்டு நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேர முடியாத புதுச்சேரி மாணவர்கள், புதுச்சேரி சிறுப்பான்மை கல்லூரியில் நிரம்பாத இடங்களை எதிர்பார்த்து பணத்தை திரட்டி வருகின்றனர். சிறுபான்மை கல்லூரி காலியிடங்கள் புதுச்சேரி பொது பிரிவிற்கு எப்போது மாற்றப்படும் என டாக்டர் கனவுகளுடன் உள்ளனர். ஆனால், முதுநிலை படிப்புகளில் இடைக்கால தடை விலக்காததால் அவர்களின் கனவும் தகர்ந்துள்ளது.

Label