OUR CLIENTS
லோக் ஆயுக்தா சட்டம் 2 மாதங்களில் நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு!
லோக் ஆயுக்தா சட்டம் 2 மாதங்களில் நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு! Posted on 11-Jul-2018 லோக் ஆயுக்தா சட்டம் 2 மாதங்களில் நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு!

புதுடெல்லி, ஜுலை 11-

லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு இயற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில், ஒவ்வொரு மாநிலமும் நிச்சயம் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், லோக் ஆயுக்தா சட்டமானது கடந்த 2013–ம்ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 4 ஆண்டுகளைக் கடந்து விட்ட பின்னரும், லோக் ஆயுக்தா பல்வேறு மாநிலங்களில் உருவாக்கப் படவில்லை.

ஆதலால் லோக் ஆயுக்தா இல்லாத மாநிலங்களில் அதை ஏற்படுத்தும்படி உத்தரவிட வேண்டும். அதேபோல், பல மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் இருக்கும் லோக் ஆயுக்தாவுக்கு போதிய நிதியையும், உள் கட்டமைப்பு வசதியையும் ஏற்படுத்தி தருவதில்லை. ஆதலால், லோக் ஆயுக்தாவை ஏற்படுத்த போதிய நிதியை பட்ஜெட்டில் மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர்.பானுமதி ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஒடிஸா மாநிலத்தில் லோக் ஆயுக்தா இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆதலால், ஒடிஸா மாநில தலைமைச் செயலாளர், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திடம் விளக்க மளிக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, புதுச்சேரி, தமிழகம், தெலங்கானா, திரிபுரா, அருணாசலப் பிரதேசம், டில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏன் ஏற்படுத்தப் படவில்லை என்பதற்கான காரணங்களை அந்த மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. அதற்காக உச்ச நீதிமன்றம் விதித்திருந்த கெடு செவ்வாய் கிழமையுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில்  'லோக் ஆயுக்தா' மசோதா தமிழக சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் திங்களன்று நிறைவேற்றப் பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பாத்திரம் ஒன்றை நேற்று காலை தாக்கல் செய்தது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது, ஒப்புதல வந்ததும் சட்டத்தை அமல் செய்யும் தேதி அரசிதழில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து தமிழக லோக் ஆயுக்தா சட்டம் அமலுக்கு வரும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டிருந்தது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Label