OUR CLIENTS
புரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவியாய் தவிக்கும் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி!
புரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவியாய் தவிக்கும் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி! Posted on 11-Jul-2018 புரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவியாய் தவிக்கும் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி!

வேலூர், ஜூலை 11-

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சோதனைச் சாவடியில் புரோக்கர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுவது போல வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் வட்டார போக்குவரத்து அலுவலகம் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வருகிறது. மாவட்டம் தோறும் அந்த துறையின் கீழ் தேவைப்படும் இடங்களில் சோதனைச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் அவர்களது முக்கியப்பணியாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களின்  உரிமங்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கை என சரிபார்த்து விதிமீறல் இருந்தால் அதற்கான அபராதம் வசூலித்து அதற்கான ரசீது வழங்கவேண்டும்.

ஆனால் இவர்கள் முறை கேடாக வசூல் செய்வதையே முழு நேரப் பணியாகச் செய்கின்றனர். குறிப்பாக ஆந்திர மாநிலம் வழியாக தென்னிந்தியாவில் இருந்து தரைவழியாக தமிழகத்துக்குள் வரும் பெரும்பாலான சரக்கு, கனரக வாகனங்கள் வேலூர் காட்பாடியை அடுத்துள்ள கிறிஸ்டியான்பேட்டையில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சோதனைச்சாவடியின் வாயிலாகத்தான் தமிழகத்துக்குள் வந்து செல்கின்றன. இந்த மாநில எல்லைச் சோதனைச்சாவடிகள் 24 மணிநேரமும் இயங்குகின்றன. அங்கு சுழற்சி முறையில் ஆய்வாளர் (பிரேக் இன்ஸ்பெக்டர்) ஒருவர், உதவியாளர்  பணியில் இருப்பார்கள். எப்போதும் வாகன நெரிசலில் சிக்கித்தவிக்கும் இந்த சோதனைச்சாவடியில் அரசால் நியமனம் செய்யப்பட்டவர்கள் தவிர ஐந்துக்கும் மேற்பட்ட தனி நபர்கள் அங்கு வரும் வாகனங்களை நிறுத்துகின்றனர்.

பெரும்பாலும் அவர்கள் பணம் வசூல் செய்து அதை பாதுகாக்கவே அங்கு பணி செய்கின்றனர். இதுகுறித்து அங்கிருந்த ஆய்வாளர் வசந்தி கூறுகையில், இந்த சோதனைச்சாவடி வழியாக வந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் முறையாக சோதனை செய்கிறோம். விதிமீறும் வாகனங்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கிறோம் என கூறினார்.

 அரசு நியமனம் செய்தவர்கள் தவிர வெளியாட்களை இங்கு வேலைக்கு வைத்திருப்பது ஏன்? என கேட்டதற்கு அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என கூறி மழுப்பலாக பதில் கூறிவிட்டு அவரது தகவல்களை நிறுத்திக்கொண்டார். அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்து அங்கு பணியிலிருந்த முத்து என்பவரிடம் நீங்கள் அரசு ஊழியரா? என வினவியதில், நான் அரசு ஊழியரல்ல கூடுதலாக பணியில் உள்ளேன் என்றார். தன்னுடன் இன்னும் நால்வர் உள்ளதாகவும் முத்து தெரிவித்தார். மேலும் இங்கு ஆட்கள் பற்றாக்குறையால் பணிச்சுமை அதிகமாக உள்ளது. அதற்காகத்தான் நாங்கள் உதவியாளர்களாக உள்ளோம் என்று கூறினார். ஆந்திர மாநிலத்தில் உள்ள வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடிகளில், முறையாக ஆவணங்கள் இல்லாமல் வந்து செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது என அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் அதிகாரிகள் அங்கு அதிகம் உள்ளனர். ஆனால் தமிழகத்திலோ  தனிப்பட்ட முறையில் பணம் வாங்க ஆட்களை நியமித்து வசூல் செய்து தங்கள் பைகளை நிரப்பிக் கொள்கின்றனர். இந்த பணியில்தான் குறியாகவே உள்ளனர். 

இதுகுறித்து வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், நாங்கள் அரசால் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களையே பணியில் அமர்த்தியுள்ளோம். வெளியாட்கள் ஒருவர் கூட சோதனைச் சாவடிகளில் பணியில் இல்லை என்றும், சிபாரிசுகளில் வரும் நபர்களை கூட பணியில் வைப்பது இல்லை என்று நேர்மையாக பணியாற்றுவது போல மார்தட்டினார். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. காட்பாடியில் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் புரோக்கர்களாக செயல்படுகின்றனர். காட்பாடியில் பணியாற்றுபவர்கள் யார்? இவர்களை நியமித்தது யார்? என்ற விடை தெரியாத கேள்விகள் எழுந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனைக்கு வந்தால் வசூலான பணத்தை பதுக்கி வைத்து கொள்ளவும் இதுபோன்ற புரோக்கர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இரவு பகல் பாராமல் இந்த புரோக்கர்கள்தான் பணியாற்றுகின்றனர்.

இங்கு பணிக்கு வரும் ஆய்வாளர் வசந்தி மற்றும் ஆண் ஆய்வாளர்கள் பணி நேரத்தில் உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 8 மணி நேர சுழற்சி அடிப்படையில் பணியாற்றும் இவர்கள் புரோக்கர்களை நம்பியே பணிக்கு வருகின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது. இதுபோன்று சோதனைச் சாவடிகளில் நடைபெறும் வசூல் வேட்டை மற்றும் அரசு நியமிக்காத புரோக்கர்களை 3 ஷிஃப்ட்டுக்கும் பணியாற்ற உத்தரவு வழங்கியது அமைச்சரா? எம்எல்ஏக்களா? வட்டார போக்குவரத்து அலுவலரா? வட்டார போக்குவரத்து ஆய்வாளர்களா? என்ற கேள்வி வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அரசுக்கு வருவாயை ஈட்டித்தராமல் தங்களது பாக்கெட்டை நிரப்பிக் கொண்டு செல்வதில் மட்டும் இங்கு பணியாற்றும் அனைவரும் குறியாக உள்ளனர். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் இவர்கள் திருந்துவார்களா? அல்லது திருத்தப்படுவார்களா? போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகள்தான் கவனிக்க வேண்டும்.

Label