OUR CLIENTS
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் அவலம் தொடருது!
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் அவலம் தொடருது! Posted on 11-Jul-2018 வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் அவலம் தொடருது!

வேலூர், ஜூலை 11-

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் எங்கு திரும்பினாலும் துர்நாற்றம் வீசும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் மாநகராட்சி நிர்வாகம் செயலிழந்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

வேலூர் மாநகராட்சி நிர்வாகம் செயலிழந்து, பொலிவிழந்து காணப்படுகிறது. ஏதோ பெயரளவுக்கு செயல்பட்டு வருகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அடியெடுத்து வைக்க முடியாத அவல நிலை தொடர்ந்து காணப்படுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் எங்கு திரும்பினாலும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் சிறுநீரை எங்கு பார்த்தாலும் பயணிகள் கழிப்பதால் மூக்கைப் பொத்திக் கொண்டு நடையை கட்ட வேண்டிய கட்டாயத்துக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் முகம் சுளிக்க தொடங்கியுள்ளனர். வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் கட்டண கழிவறைகள் அடாவடி வசூலில் ஈடுபடுகின்றன. அதாவது சிறுநீர் கழிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுதான் பல பயணிகள்  திறந்தவெளியில் சிறுநீர் கழித்து விட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல சென்று விடுகின்றனர். இதை மாநகராட்சி நிர்வாகம் கண்டுபிடித்து கட்டண கழிவறைகளில் கட்டணம் வசூலிப்பதை குத்தகை எடுத்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். மாநகராட்சி பொறியாளர் சுரேஷ் திறமையான அலுவலர் என்று பெயர் வாங்கியவர். அவராவது இதுபோன்ற மக்கள் விரோதப் போக்கை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுப்பாரா? என்று பயணிகள் மற்றும் மாநகர பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

வேலூர் பேருந்து நிலையத்தில் கழிவறைகள் பிரச்னை மட்டுமல்ல, சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்துவதாக கூறிக் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் கழிவுகளை அப்படியே வெளியில் போட்டு விட்டு அப்புறப்படுத்தாமல் அமைதி காத்து வருகிறது. இதனால் திருப்பதி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் பயணிகள் சிறிது நேரம் காத்திருந்து பேருந்து ஏறிச் செல்ல முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது வாரக்கணக்கில் தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

துர்நாற்றம் வீசாமல் இருக்க பிளீச்சிங் பவுடரையாவது பேருந்து நிலையத்தில் தினமும் தெளிக்க மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் முன்வர வேண்டும். அதாவது வேலூர் மாநகராட்சியை பொறுத்தமட்டில் சுத்தம், சுகாதாரம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் பணியாற்று கின்றனர். இதனால் தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பேருந்து நிலையம் என்பது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பொது இடமாகும். இப்படி பொது இடங்களை சுத்தமாக பராமரிக்காமல் விட்டு விட்டு நமக்கென்ன என்று மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பை தட்டிக் கழிப்பது எந்த வகையில் நியாயம்?. இந்த நிலை தொடர்ந்தால் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் புழுக்கள் படையெடுக்க ஆரம்பித்து விடும். அதற்குள்ளாவது பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேலூர் மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே பயணிகள் மற்றும் வேலூர் மாநகர மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. அருகில் உள்ள ஆந்திர மாநிலம் திருப்பதி பேருந்து நிலையம், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், கர்நாடக மாநிலம் பெங்களூரு பேருந்து நிலையம் எப்படி பராமரிக்கப்படுகிறது என்பதை பார்த்தாவது அதிலிருந்து 3ல் 1 பங்காவது பராமரிக்க வேலூர் மாநகராட்சி நிர்வாகம் கற்றுக் கொள்ளக் கூடாதா என்ற ஆதங்கம் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம்   வேலூர் பேருந்து நிலையத்தில் சிறப்பாக பின்பற்றப்படுகிறது. வேலூர் மாநகராட்சியின் சுத்தம் எந்த வகையில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label