OUR CLIENTS
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வீராணம் ஏரியில் தண்ணீர் வீணடிப்பு!
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வீராணம் ஏரியில் தண்ணீர் வீணடிப்பு! Posted on 13-Jul-2018 முறையான திட்டமிடுதல் இல்லாததால் வீராணம் ஏரியில் தண்ணீர் வீணடிப்பு!

கடலூர், ஜூலை 13-

கடலூர் மாவட்டத்தில் முறையான திட்டமிடுதல் இல்லாததால் ஆண்டுதோறும் வீராணம் ஏரியில் இருந்து 2 டிஎம்சி தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. இத்தகவலை நீர்வள மேலாண்மை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில், கடலூர் மாவட்டம் மட்டும் அல்லாமல் சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த ஏரி கி.பி. 7ம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழனால் விவசாயத்துக்காக வெட்டப்பட்டது. 18 கிலோமீட்டர்கள் நீளமும் 5.6 கிலோமீட்டர்கள் அகலமும் என பரந்து விரிந்து காணப்படுகிறது. இதற்கு தஞ்சை மாவட்டம் கீழணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூலை 3ம் தேதிக்குள் தண்ணீர் திறப்பது வழக்கம். இதில் ஆண்டுக்கு 10 மாதங்கள் வரை தண்ணீர் இருக்கும் மே மற்றும் ஜூன் மாத கோடையில் தண்ணீர் வற்றிவிடும். ஆக வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே ஏரி வறண்டு காணப்படும்.

கடந்த 2004ம் ஆண்டு சென்னையின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் கொண்டு செல்லப்பட துவங்கியதில் இருந்து வீராணம் ஏரியில் ஆண்டுக்கு வெறும் 3 அல்லது 4 மாதங்கள் மட்டுமே நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் ஏரிபாசனத்தையே பிரதானமாக கொண்ட 44,856 ஏக்கர் விவசாய பாசனம் பாதிக்கப்பட்டதுடன் நிலத்தடி நீரும் வரலாறு காணாத அளவுக்கு 20 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. மேலும் காவிரி நீர் தமிழகத்துக்கு முறையாக கிடைக்காத காரணத்தால் மேட்டூரில் இருந்து கல்லணைக்கு தண்ணீர் திறப்பதும் கல்லணையிலிருந்து கீழணைக்கும் திறப்படும் தண்ணீருக்கும் காலதாமதம் மிக அதிகமாக இருப்பதால் ஏரிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. அப்படி வருகின்ற தண்ணீரும் விவசாயத்துக்கு அளிக்க வேண்டிய காலத்தில் திறக்காமல் சென்னை குடிநீருக்கும், கடலுக்கும் நேரடியாக திறந்து விடப்படுகின்றன. மேலும் மழை காலங்களில் வீராணம் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர் அதிக மழை பெய்யும் வருடங்களில் 2 டிஎம்சியும், இயல்பு நிலையில் பெய்யும் வருடங்களில் சுமார் 1.50 டிஎம்சியும் சேமிக்க முடியாமல் அதையும் கடலுக்கே திறந்து விடுகிறது பொதுப்பணித்துறை நிர்வாகம்.

இதுகுறித்து விவசாயிகள் கேட்கும்போது, ஏரியின் கரையின் பாதுகாப்புக்காக கடலுக்கு திறந்து விடுகிறோம் என அதிகாரிகள் தரப்பில் பதில் அளிக்கப்படுகிறது. விதைக்கின்ற காலத்தில் தண்ணீர் கிடைக்காததால் பருவம் மாறிப்போகிறது. இதனால் மகசூல் பாதிப்படைகிறது. மேலும் உளுந்து பயிர்களும் விதைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து  நீர்வள பொறியாளர் ஆஷிக் அலியிடம் கேட்ட போது: முறையான திட்டமிடுதல் இருந்தாலே போதும் காவிரிநீர் தேவையில்லை. வீராணம் ஏரியை 3 அடிக்கு முறையாக தூர்வார வேண்டும். வீராணம் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீரை சேமிக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள குளம் குட்டைகள் அனைத்தையும் தூர்வார வேண்டும். மேலும் கடலுக்கு செல்லும் வடிகால்களில் ஆங்காங்கே தடுப்பணைகள் அமைப்பதன் மூலம் கடலுக்கு செல்லும் தண்ணீரை குறைப்பதோடு, நீலத்தடி நீரை கடந்த ஆண்டுகளில் இருந்தவாறே மீண்டும் உயர்த்த முடியும். 

குறிப்பாக மறைந்த முதல்வர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த ஆதனூர்&குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவதன் மூலம் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் தாராளமாக பாசன வசதி பெறும். மேலும் குறிப்பிட்ட இடைவெளியில் ஆங்காங்கே ஆற்றின் குறுக்கே சிறிய தடுப்புகளை ஏற்படுத்தினால் கூடுதலாக உயரும் நிலத்தடிநீர் மூலம் கடல்நீர் உட்புகுவதை முற்றிலுமாக தடுக்கமுடியும். ஏரியில் மழைநீரை சேமித்து வைத்திருக்கும் போது கீழணையிலிருந்து கூடுதல் தண்ணீரை திறக்கும் பட்சத்தில், வருகின்ற தண்ணீரை நிலை நிறுத்தி தேவைக்கேற்ப வடிகால் வாய்க்காலுக்கு திறந்தால் போதும். ஏரியின் கரையையும் பாதுகாக்க முடியும். இதுபோன்ற திட்டங்கள் இல்லாத காரணத்தாலேயே ஆண்டுதோறும் 2 டிஎம்சி மழைநீரை வீணடித்து வருகின்றோம் என்றார்.

Label