OUR CLIENTS
ரூ.55 கோடி மதிப்பீட்டில் மதுரை-காளவாசல் மேம்பாலத்திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா!
ரூ.55 கோடி மதிப்பீட்டில் மதுரை-காளவாசல் மேம்பாலத்திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா! Posted on 16-Jul-2018 ரூ.55 கோடி மதிப்பீட்டில் மதுரை-காளவாசல் மேம்பாலத்திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா!

மதுரை, ஜுலை 16-

மதுரை -காளவாசல் மேம்பாலம் பணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.

மதுரை மாவட்டம் காளவாசல் பகுதி மேம்பாலம் அமைப்பதற்கான திட்டப் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. ரூ. 55 கோடி மதிப்பில் காளவாசல்  உயர்மட்ட மேம்பாலத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அடிக்கல் நாட்டிய பின்பு, முதல்வர் எடப்பாடி  பழனிசாமி பேசியதாவது: மதுரை, காளவாசல் சந்திப்பில் முதன்முறையாக ரூபாய் 54.07 கோடி மதிப்பீட்டில் 4 வழித்தடத்துடன் கூடிய சாலை மேம்பாலம் அமைக்க இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைவதுடன், சந்திப்பில் வாகன காத்திருப்பு நேரம் குறையும். மேலும், அருகிலுள்ள அரசரடி சந்திப்பும், இப்பணியுடன் இணைந்து மேம்படுத்தப்பட உள்ளது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, மதுரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோரிப்பாளையம் சாலை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலப் பணிகளை விரைந்து துவக்கும்பொருட்டு, அதிக போக்குவரத்து செரிவுள்ள தடத்தை ஆய்வு செய்து, குறைந்த அளவு நில எடுப்புடன் செயல்படுத்த திட்டத்தினை மறுஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

செல்லூர் இரயில்வே மேம்பாலத்தின் கீழ் சூலமங்களம் சாலையை அடைய உரிய சேவைச் சாலை ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் அமைக்க விரைவில் பணி துவங்கப்படவுள்ளது. மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் முதல் கூடல்நகர் வானொலி நிலையம் வரை புதிய 4 வழி இணைப்புச் சாலை ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறை மற்றும் மதுரை மாநகராட்சிச் சாலைகளை ஒருங்கிணைந்து அமைக்க சட்டசபையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பாண்டிக்கோவில் அருகில் மதுரை தொண்டி சாலை, மதுரை சுற்றுச்சாலை சந்திப்பில் ரூபாய் 56 கோடியில் மேம்பாலம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும் என்பதை இந்த நேரத்திலே தெரிவிக்கிறேன்.

வைகையாற்றின் வடகரையில் குருவிக்காரன் சாலை முதல் அண்ணாநகர் பாலம் வரை சாலை அமைக்க  ரூபாய் 16.35 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, இந்தப் பணி விரைவில் துவங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகை ஆற்றிலே இன்றைக்கு நீர் செல்கின்றபொழுது இந்த மாநகரத்தினுடைய கழிவு நீரெல்லாம் அந்த ஆற்றிலே கலக்கக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. ஆகவே, நீர் மாசு படுகின்றது. அதைத் தடுப்பதற்காக ஆங்காங்கே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, வருகின்ற கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விடுவதற்குண்டான சூழ்நிலையை அம்மாவினுடைய அரசால் உருவாக்கித் தரப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்தத் தருணத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு இன்றைக்கு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. கல்வி, வேளாண்மை, சாலை வசதி, பொதுப்பணித் துறைப் பணிகள் என அனைத்துத் துறைகளுமே வளர்ச்சி காணுகின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை பெருமையோடு இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

குறுகிய காலத்திலே மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாவட்ட அமைச்சர்கள்  செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், அரசு அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த, உளமார்ந்த நன்றியை தெரிவித்து விடைபெறுகின்றேன்.

Label