OUR CLIENTS
சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை!
சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை! Posted on 17-Jul-2018 சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை!

சென்னை, ஜூலை 17-

பல்லாவரம், கொடுங்கையூரில் சட்டவிரோதமாக செயல்படும் மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாசகம் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை கடந்த சில ஆண்டுகளில் இருந்தே அலங்கரித்து வந்திருக்கிறது. ஆனால் ஆண்டுகள் கடந்தும் அந்த நிலையை நாம் எட்டியிருக்கிறோமா? என்று கேட்டால், இல்லை என்று தான் அனைவரிடத்தில் இருந்தும் பதில் வரும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் அருகே உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் அருகாமையில் இருந்த சில மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால் மாநில சாலைகள் பட்டியலில் இருந்த சாலைகள் திருத்தம் செய்யப்பட்டு, மாவட்ட சாலைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் அதே இடத்தில் சில இடங்களில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

பொதுமக்களின் போராட்டத்தின் எதிரொலியாக புதிய மதுக்கடை திறப்பு என்பது கானல் நீராகிவிட்டது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறத்தில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சென்னையை அடுத்த பல்லாவரத்தில் ரெயில் நிலைய சாலையில் 2 மதுக்கடைகள், ஆடுதொட்டி மற்றும் ஒரு தியேட்டர் அருகே தலா ஒன்று என மொத்தம் 4 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.

இந்த மதுக்கடைகள் சமீபத்தில் மூடப்பட்டன. இதையடுத்து ரெயில் நிலைய சாலையில் உள்ள சுரங்கப்பாதை பகுதியில் கடை ஒன்றில் சட்டவிரோதமாக மதுபானங்கள் ரகசியமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. கடையின் வெளியில் நின்று கொண்டு பணத்தை கொடுத்ததும், விரும்பிய கம்பெனிகளின் மதுவகைகளை வாங்கலாம். சட்டவிரோதமாக மது விற்பனை வெளிப்படையாகவே நடைபெறுகிறது.
மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் விலையை விடவும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதிக தூரத்துக்கு சென்று வாங்குவதற்கு சிரமப்பட்டு, குடிமகன்கள் சிலர் கூடுதல் பணத்தை கொடுத்து வேறு வழியின்றி மதுபானங்களை வாங்கி செல்கிறார்கள். 24 மணி நேரமும் செயல்படும் அந்த சட்டவிரோத கடையில் விரும்பும் மதுபான வகைகளை குடிமகன்கள் வாங்கி செல்கின்றார்கள்.

நேரத்துக்கு ஏற்ப மதுபானங்களின் கட்டணம் உயர்ந்துகொண்டே செல்லும். போலீஸ் நிலையம் அருகாமையில் இருந்தும், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் கடை மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சட்டவிரோதமாக செயல்படும் அந்த கடை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேபோல கொடுங்கையூர் காமராஜர் சாலையில் ஈ.சி.ஐ. தேவாலயம் அருகே மதுக்கடை மூடப்பட்ட இடத்தில் சட்டவிரோதமாக மதுபானங்கள் ரகசியமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த கடையின் வெளியே குடிமகன்கள் மதுபோதையில் தகாத வார்த்தைகளால் தங்களுக்குள் பேசிக்கொண்டே அரட்டை அடித்து வருகிறார்கள்.

இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு, வீட்டுக்கு புறப்படுபவர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. இதேபோல பல்வேறு இடங்களிலும் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டவிரோதமாக செயல்படும் மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மதுக்கடைகளை இரவு 10 மணிக்கு மூடவேண்டும் என்பது விதி. ஆனால் இந்த விதிமுறையை மீறி சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் மதுக்கடைகள் திறந்து வைக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் மதுபானங்களை வாங்கி குடித்துவிட்டு, போதையில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கு தூண்டுகோலாக இருக்கும் அதிக நேரம் செயல்படும், சட்டவிரோத மதுக்கடைகள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Label