OUR CLIENTS
காட்பாடியில் வீட்டுக்கு வீடு ஏலச்சீட்டு நடக்குது குறட்டை விடும் போலீசார் விழிப்பது எப்போது?
காட்பாடியில் வீட்டுக்கு வீடு ஏலச்சீட்டு நடக்குது குறட்டை விடும் போலீசார் விழிப்பது எப்போது? Posted on 17-Jul-2018 காட்பாடியில் வீட்டுக்கு வீடு ஏலச்சீட்டு நடக்குது குறட்டை விடும் போலீசார் விழிப்பது எப்போது?

வேலூர், ஜூலை 17-

வேலூர் மாவட்டம், காட்பாடியில் வீட்டுக்கு வீடு ஏலச்சீட்டு நடத்துகின்றனர். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் குறட்டை விடும் நிலையில் இருக்கின்றனர். இவர்கள் தூக்கம் கலைப்பது எப்போது?விழிப்பது எப்போது? என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

காட்பாடி மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகும். காட்பாடியில் ரயில் சந்திப்பு நிலையம், விஐடி பல்கலைக்கழகம், அரசு சட்டக் கல்லூரி, அரசு பி.எட்., கல்லூரி, பிரபல மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. வேலூரை காட்டிலும் அடிப்படை வசதிகள் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் காட்பாடி மாவட்டத்தின் எல்லையோர பகுதியாகவும் உள்ளது. அடுத்த 5 கி.மீ., தொலைவில் ஆந்திர மாநில எல்லை ஆரம்பமாகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காட்பாடியில் செங்குட்டை, வி.ஜி.ராவ் நகர், இளங்கோ தெரு, சோலை நகர், பழைய காட்பாடி பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீட்டுக்கு வீடு பெண்கள் மற்றும் ஆண்கள் ஏலச்சீட்டு நடத்தி வருகின்றனர்.

இதை நம்பி பலர் ரூ.1 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.50 ஆயிரம் என பல வகையான சீட்டுகளில் சேர்ந்து பணம் கட்டுகின்றனர். இது அரசு அனுமதியின்றி நடக்கும் ஏலச்சீட்டுகள் ஆகும். இதற்கிடையே சீட்டு பிடிக்கும் பெண்கள் பலர் இரவோடு இரவாக கம்பி நீட்டி விடுகின்றனர். பலர் ஏமாற்றமடைந்தாலும், திருடனை தேள் கொட்டியது போன்று சத்தம் போடாமல் விட்டுவிடுகின்ற பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதனால் அவர்கள் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பெருந்தொகையையும் இழக்க வேண்டியுள்ளது. இதே சில இடங்களில் பணம் கட்டாமல் சீட்டை எடுத்து கொண்டு சீட்டு கட்டும் நபர்களும் கம்பி நீட்டி விடுவதும் உண்டு. இப்படி தில்லுமுல்லுகள் தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன. இதில் சீட்டு பிடிக்கும் நபர்கள் (பெண்கள்) பின்புலத்தோடு இயங்குகின்றனர்.

சிலர் காவல் துறையில் பணியாற்றும் ஏதாவது ஒரு நபரை துணைக்கு வைத்து கொண்டு தைரியமாகச் செயல்படுகின்றனர். இதுபோன்றவர்கள் சீட்டு எடுத்தவர்களுக்கு பணத்தை வசூல் செய்து தராமல் அவர்களை மிரட்டி விரட்டி விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்களும் குண்டர்கள் போல நடந்து கொள்கின்றனர். இவர்கள் பெண்களே அல்ல என்றுதான் சொல்ல வேண்டும். வாய்ச்சொல்லில் கவர்ச்சிகரமான வார்த்தைகளை அள்ளி வீசி பல இல்லத்தரசிகளை தங்களது வலையில் விழ வைத்து விடுகின்றனர் இதுபோன்ற ஏலச்சீட்டு நடத்தும் பலே பெண்கள். இவர்களை நம்பி பலர் இன்று மனஉளைச்சலில் வாழ்க்கையை கடத்தி வருகின்றனர்.

அதாவது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இந்த ஏலச்சீட்டு நடத்தும் கும்பலை பிடிக்காமல் காவல் துறையில் இதற்கென தனியாக பிரிக்கப்பட்ட சமூக நீதித்துறை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகவே வைத்து கொள்ளலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்களும், ஏலச்சீட்டால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும். இதனால் காட்பாடியில் முகாமிட்டு மாதத்தின் முதல் வாரம் முதல் 10ம் தேதி வரையில் இதுபோன்ற ஏலச்சீட்டுகள் நடத்துவதை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறை முன்வர வேண்டும்.

மாநகரின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் கண்களில் படுமாறு கந்துவட்டி வாங்குவதும் குற்றம், கந்துவட்டி விடுவதும் குற்றம், ஏலச்சீட்டு நடத்த அரசிடம் முறைப்படி உரிமம் பெற வேண்டியுள்ளது. அந்த உரிமம் பெறாமல் ஏலச்சீட்டு நடத்தும் நபர்களை அடையாளம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. வேலூர் சரக காவல் துறை துணைத்தலைவர் வனிதா, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் ஆகியோர் இந்த பிரச்னையை உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே ஏலச்சீட்டு மற்றும் கந்து வட்டி கொடுமையால் கடும் பாதிப்புக்குள்ளான பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. காவல் துறை நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து வந்த ஏலச்சீட்டு நடத்துவோர் மற்றும் கந்து வட்டி கும்பலை அடியோடு ஒழித்து கட்டப்போகிறதா அல்லது வழக்கம்போல் இதுபோன்ற சமூக விரோத கும்பலுக்கு வெண்சாமரம் வீசப்போகிறதா காவல் துறை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label