OUR CLIENTS
ஒரத்தூர், நீலமங்கலம் மேம்பாலங்கள் பயன்பாட்டுக்கு வருவதுதான் எப்போது?
ஒரத்தூர், நீலமங்கலம் மேம்பாலங்கள் பயன்பாட்டுக்கு வருவதுதான் எப்போது? Posted on 18-Jul-2018 ஒரத்தூர், நீலமங்கலம் மேம்பாலங்கள் பயன்பாட்டுக்கு வருவதுதான் எப்போது?

காஞ்சிபுரம், ஜூலை 18-

ஒரத்தூர் மற்றும் நீலமங்கலம் ஆகிய பகுதிகளில் ரூ. 1.26 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் அவற்றைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இச்சாலையில் செல்லும் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

ஒரத்தூர்-படப்பை இணைப்புச்சாலையில் உள்ள தரைப்பாலம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமலும், புதுப்பிக்கப்படாமலும் இருந்தது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்த கனமழையின் காரணாக தரைப்பாலத்தின் மேல் சுமார் 10 அடி ஆழத்திற்கு மழைநீர் சென்றது. அதன் காரணமாக, படப்பை - ஒரத்தூர் இணைப்புச்சாலையில் சுமார் 10 நாள்களுக்கும் மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் இச்சாலையைப் பயன்படுத்தும் ஒரத்தூர், காவனூர், நாட்டரசன்பட்டு, சிறுவஞ்சூர், வளையங்கரனை உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் படப்பை பகுதிக்கு வந்து செல்ல மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து, ஒரத்தூர்-படப்பை இணைப்புச் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, இச்சாலையில் உள்ள தரைப்பாலத்தை நபார்டு திட்டத்தின் மூலம் மேம்பாலமாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ. 79.52லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதே போல் ஒரத்தூர்-நீலமங்கலம் இணைப்புச்சாலையில் உள்ள தரைப்பாலத்தையும் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.47.6லட்சத்தில் மேம்பாலமாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜைகள் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் ஒரத்தூர் மற்றும் நீலமங்கலம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வந்த மேம்பாலப் பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், மேம்பாலங்கள் தற்போது வரை திறந்துவைக்கப்படாததால் பயன்படுத்தும் பொதுமக்கள் மாற்றுப் பாதையிலேயே சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து இச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், மேம்பால கட்டுமானப் பணிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், மேம்பாலங்களைத் திறக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இன்று வரை மாற்றுப் பாதையிலேயே சிரமத்துடன் சென்று வருகிறோம். எனவே கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label