OUR CLIENTS
காட்பாடியில் கலப்பட பால் விற்பனை அமோகம்!
காட்பாடியில் கலப்பட பால் விற்பனை அமோகம்! Posted on 18-Jul-2018 காட்பாடியில் கலப்பட பால் விற்பனை அமோகம்!

காட்பாடி, ஜூலை 18-

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தில் கலப்பட பால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய சுகாதார ஆய்வாளர்கள், உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் கண்டும் காணாமல் குறட்டை விட்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தில் பால் விற்பனை செய்யும் தொழில் அமோகமாக நடந்து வருகிறது. இந்த ஊரில் வீட்டுக்கு வீடு பசு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இதில் சில நாட்டு மாடுகளும் அடக்கம். இந்த மாடுகள் வாயிலாக இரண்டு வேளை பால் கறந்து அதை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து பலர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இப்படி மாடுகள் வாயிலாக கிடைக்கும்பாலை காலை, மாலை வேளைகளில் பால் கறக்கும் நபரிடமோ அல்லது பால் வாங்கும் பால்காரர்களிடமோ மாடுகளை வளர்ப்போர் விற்பனை செய்து விட்டு 1ம் தேதி மொத்தமாக பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

இப்படி மாடு வளர்ப்போரிடம் வாங்கும் பாலை பால்காரர்கள் கேன்களில் சேகரித்து கொண்டு செல்கின்றனர். அதற்கு பின்னர் அந்த பாலில் ஏதோ திரவம் ஒன்றையும், பவுடர் கலப்படம் செய்து தெருத்தெருவாக கேன்களில் வைத்து கொண்டு நுகர்வோர்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனர். இவர்கள் 1ம் தேதி முதல் பணம் கொடுத்து விடுகின்றனர். இவர்கள் கலப்பட பால் என்று தெரியாமல் பிறந்த கைக்குழந்தைகள் முதல் வயதான முதியோர் வரை அனைவரும் பால் அருந்துகின்றனர். இதனால் வயிறு தொடர்பான உபாதைகள், புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்கள் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது. இப்படி கலப்பட பால் விற்பனை செய்வோரை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதார ஆய்வாளர்கள், உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் குறட்டை விடும் நிலையில் உள்ளனர். குறிப்பாக பள்ளிக்குப்பம் வேலூர் மாநகராட்சியின் 2&வது வார்டுக்குள் வருவதையறிந்தும் மீண்டும் கிராமப்பகுதி போல கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். கலப்பட பால் விற்பனையை பள்ளிக்குப்பம் பகுதியில் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. 

இந்த பகுதியில் காலை மாலை வேளைகளில் கேன்களில் கொண்டு செல்லப்படும் பாலை சோதனை செய்து பார்த்தால் உண்மை வெளிவரும். இதுபோன்ற பால்காரர்கள் சிலர் பள்ளிக்குப்பம் பகுதியில் சேகரிக்கும் பாலை கேன்களில் அடைத்து ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள திருமலா, ஹெரிடேஜ், சுருதி போன்ற பால் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் 1ம் தேதி கணக்கு பார்த்து மொத்தமாக பணம் கொடுத்து விடுகின்றனர். பல நேரங்களில் பால் கெட்டுவிட்டது என்று அந்த பால் கேன்கள் ஆந்திர மாநிலங்களில் இருந்து மீண்டும் காட்பாடி பள்ளிக்குப்பத்துக்கு அதே வேன்களில் திருப்பி அனுப்பப்பட்டு விடுகிறது. இதுவும் அன்றாடம் நடந்து வருகிறது. இதற்கு பால் நிறுவனம் கூறும் காரணம் பால் முறிந்து கெட்டு விட்டது என்பதுதான். ஆனால் அதே புளித்து போன பாலை தெருத்தெருவாக காட்பாடி, பள்ளிக்குப்பம் பகுதிகளில் விற்பனை செய்து அதாவது லிட்டர் ஒன்று தலா ரூ.35, ரூ.32 என்று விலைகளில் விற்பனை செய்து பணமாக்கிவிடுகின்றனர் பலே பால்காரர்கள். பால் காய்ச்சும்போது பால் பாத்திரத்திலேயே அடிபிடித்து கருக தொடங்குகிறது. சில நிமிடங்களில் பால் திரிந்து விடுவது, துர்நாற்றம் வீசுவது போன்ற பலதரப்பட்ட புகார்களை இல்லத்தரசிகள் கதை கதையாக கூறுகின்றனர்.

இதெல்லாம் கலப்படம் செய்யும் பால்காரர்களிடம் கேட்டால் எங்களுக்கு புகார் ஏதும் வரவில்லை என்று கூலாக கூறிவிட்டு நடையை கட்டி விடுகின்றனர். பால் வியாபாரம் செய்வோர் விரைவில் பணக்காரர்கள் ஆகிவிடுகின்றதை கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆதலால் இந்த பள்ளிக்குப்பம் பகுதியில் உணவு கட்டுப்பாட்டு அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி கலப்பட பால் விற்பனைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும் என்பதே இந்தப்பகுதிவாழ் நுகர்வோர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். இதுபோன்ற நூதன மோசடி விற்பனையில் ஈடுபடும் பால்காரர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக நல ஆர்வலர்கள் மற்றும் நுகர்வோரின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த பகுதியில் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற ரீதியில் இந்த கலப்பட பால் விற்பனையாளர்களை பிடிப்பது எப்படி என்று நுகர்வோர் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.

புகார் கொடுத்தாலும் அதிகாரிகள் அலட்சியம் காண்பிக்கின்றனர். திருடனுக்கு துணை போகும் பணியில் சில அரசு அலுவலர்கள் ஈடுபடுவதுதான் இதுபோன்ற தொழிலுக்கு பக்க பலமாக அமைந்து விடுகிறது. ஆதலால் விரைவில் கலப்பட பால் விற்பனையாளர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்தால்தான் மற்றவர்கள் அஞ்சி நடுங்கி ஒழுங்காக கறந்த பாலை விற்பனை செய்ய முன்வருவார்கள். இல்லையெனில் தொடர்ந்து கலப்பட பாலை அருந்தி விட்டு சொல்லொனா துயரத்துக்கு நுகர்வோர் ஆளாக நேரிடும் என்பதே நிதர்சன உண்மையாகும். ஆதலால் விரைவில் கலப்பட பால் விற்பனையாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க தொடர்புடைய துறை அலுவலர்கள் முன்வர வேண்டும். இதற்கு பிறகும் கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பார்களா? அல்லது அதிரடி நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவப் போகிறார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label