OUR CLIENTS
ஒரு உறையில் ஒரு கத்தி ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு!
ஒரு உறையில் ஒரு கத்தி ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு! Posted on 18-Jul-2018 ஒரு உறையில் ஒரு கத்தி  ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு!

வேலூர், ஜூலை 18-

அதிமுகவுக்கு ஒரே பொதுச்செயலாளர், அவரே முதல்வர் என்ற நிலை வர வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்க்கின்றனர். இதை அதிமுக தலைமை மறுபரிசீலனை செய்யுமா? என்று கழக கண்மணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனால் தொடங்கப்பட்டதுதான் அஇஅதிமுக. அவரது மறைவுக்கு பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அதிமுகவை ராணுவத்தில் இருப்பது போன்று கட்டுக் கோப்பாக நடத்தினார். அவரது மறைவுக்கு பிறகு மீண்டும் இரு அணிகளாக பிரிந்தது. அதாவது ஈபிஎஸ், ஓபிஎஸ் என பிரிந்தன. பின்னர் கோஷ்டிகளும் உருவாயின. அதன் பின்னர் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. பிரிந்த சகோதரர்கள் இணைவது போன்று ஒன்றிணைந்தனர். அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னமும் ஓபிஎஸ், ஈபிஎஸ் வசம் ஒப்படைத்தது இந்திய தேர்தல் ஆணையம். இந்நிலையில் இரு அணிகளும் இணைந்த நிலையில் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் ஆட்சிக்கு ஈபிஎஸ் முதல்வராகவும், துணை முதல்வராக ஓபிஎஸ்ஸூம் பதவிகளை பிரித்து கொண்டனர். இதனால் மீண்டும் கோஷ்டி பிரச்னை இருந்து வருகிறது, தொடர்ந்து வருகிறது என்றே சொல்லலாம். பிரிந்தவர்கள் இணைந்தாலும் அந்த பிரிவினை சம்பவம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தாமரை இலை மேல் ஒட்டாமல் உள்ள தண்ணீர் மீது இரு அணிகளும் பெயரளவில் செயல்பட்டு வருகிறது. இதனால் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் ஒரு மன இறுக்கம் இருந்து கொண்டே இருப்பதும் உண்மை என்றுதான் சொல்ல வேண்டும்.

ரத்தத்தின் ரத்தங்கள் ஓபிஎஸ்ஸை பார்ப்பதா, ஈபிஎஸ்ஸை பார்ப்பதா என்ற குழப்பத்தில் தொடர்ந்து ஆழ்ந்து வருகின்றனர். இந்த குழப்ப நிலை நீங்காமல் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க அதிமுக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்க்கின்றனர். அதாவது அதிமுகவுக்கு பொதுச்செயலாளரும், தமிழக முதல்ராகவும் ஒருவரே இருக்க வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் தமிழக முதல்வராகவும் பொறுப்பு வகித்தனர், அதிமுகவுக்கு பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்தனர். அதேபோன்று இந்த இரண்டும் ஒரே நபரிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அப்போதுதான் கழக கண்மணிகள் பொதுச்செயலாளரை பார்த்து அஞ்சி நடுங்குவர். சொல்வதை கேட்டு நடப்பார்கள் என்று ஒரு சாரர் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொண்டர்களின் எண்ணத்திலும், சிந்தனையிலும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஆதலால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் கூடி கலந்து பேசி இந்த நிலையை மீண்டும் அதிமுகவில் கொண்டு வர வேண்டும் என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதையே அரசியல் நோக்கர்களும், அரசியல் விமர்சகர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இப்படி அதிமுகவுக்கு ஒரே தலைமை ஏற்பட்டு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்திச் சென்றால் அது சிறப்பாக இருக்கும் என்று ரத்தத்தின் ரத்தங்கள், மூத்த நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு எப்போது நிரந்தர தீர்வு காணப்படும் என்பதே பலரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது. அதிமுக தலைமை என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலை தற்போது நிலவுகிறது. கட்சியின் ஸ்திரத்தன்மையும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதாவது ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க வேண்டும்.

ஒரு கட்சிக்கு ஒரே தலைவர்தான் இருக்க வேண்டும். இதுபோன்ற விதியை பின்பற்றி நடக்க அதிமுக தலைமையும் முன்வர வேண்டும். தொண்டர்களின் ஏகோபித்த ஆசையை நிறைவேற்றுவதுதான் தலைமைக்கு அழகாகும். ஏனெனில் விரைவில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடைபெற ஆயத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால் இந்த நிலையில் அதிமுகவுக்கு ஒரே தலைமை தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்ற ரத்தத்தின் ரத்தங்களின் ஒட்டுமொத்த கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. சிலர் இதை வலியுறுத்த தொடங்கி விட்டனர். இதுபோன்று இப்போது இருப்பது மாதிரி இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள் இருப்பதால்தான் அமைச்சர்களில் சிலர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் தங்கள் விருப்பம் போல கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரே பொதுச்செயலர் தேர்வானால் கட்டுக்குள் அனைவரும் வந்து விடுவார்கள். ராணுவ கட்டுப்பாட்டுக்குள் அதிமுக வந்துவிடும். இதற்கு வழிவகை செய்யுமா அதிமுக தலைமை?. இந்த கருத்தை அதிமுக மறுபரிசீலனை செய்து நடைமுறைக்கு கொண்டு வருமா? பொதுச்செயலாளரும், முதல்வரும் ஒரே நபராக கொண்டு வரப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label