OUR CLIENTS
தஞ்சை- விழுப்புரம் இடையே இரட்டை ரயில்பாதை விரைவில் அமைக்கப்படுமா?
தஞ்சை- விழுப்புரம் இடையே இரட்டை ரயில்பாதை விரைவில் அமைக்கப்படுமா? Posted on 20-Jul-2018 தஞ்சை- விழுப்புரம் இடையே இரட்டை ரயில்பாதை விரைவில் அமைக்கப்படுமா?

தஞ்சாவூர், ஜூலை 20-

ஆண்டுக்கு ரூ.70 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டப்படும் பகுதியான தஞ்சை& விழுப்புரம் இடையே இரட்டை ரயில்பாதையை விரைவில் அமைக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் முக்கியச் சுற்றுலா தலங்களுள் தஞ்சை மாவட்டமும் ஒன்று. முன்பு இந்த தஞ்சை வழி தான் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்குச் செல்வதற்கும் முக்கிய வழித்தடமாக இருந்தது. பின்னர் விழுப்புரம்-திருச்சி இடையே அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் அந்த வழியாக இயங்கத்தொடங்கின. அதன்பின்னர் அந்த வழியாகவே தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் காவிரி டெல்டா பகுதியான தஞ்சையில் இருந்து திருச்சி இடையே 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை ரயில்பாதை அமைக்கப்பட்டு அது செயல்பாட்டுக்கு வந்து விட்டது. இதனால் தஞ்சை-திருச்சி இடையேயான பயண நேரம் 1 மணி நேரத்தில் இருந்து 20 நிமிடம் குறைந்துள்ளது. அதேபோல தஞ்சையில் இருந்து விழுப்புரம் வரையிலும் இரட்டை ரயில்பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் அகல ரயில்பாதை பல புராதன மிக்க தலங்களை கொண்டுள்ளது. இந்த மார்க்கத்தில் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, பாபநாசம், ஆடுதுறை, திட்டை, பண்டாரவாடை, சுந்தர பெருமாள்கோவில், குத்தாலம், சிதம்பரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.

இதில் தஞ்சை& விழுப்புரம் இடையே மட்டும் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை ரயில் நிலையங்கள் ஏ கிரேடு ஆகும். இந்த ரயில் நிலையங்களில் அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில் நிலையங்களில் தஞ்சை முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து கும்பகோணம், மயிலாடுதுறை ரயில் நிலையங்களும், அதற்கடுத்தபடியாக பாபநாசம், ஆடுதுறை ரயில் நிலையங்களும் உள்ளன. இந்த வழியாக சோழன் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், மன்னார்குடி எக்ஸ்பிரஸ், ஜனசதாப்தி, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மார்க்கத்தில் தினமும் 33 ரயில்கள் ‘கிராசிங்’ மேற்கொள்ள வேண்டி உள்ளது.

இதை தவிர சரக்கு ரயில் போக்குவரத்தும் வெகுவாக உள்ளது. இதனால் ரயில்களின் வேகம் குறைவதுடன், காலதாமதம் ஏற்படுகிறது. இந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகளின் பயன்பாடு என்பது கூடுதலாகவே உள்ளது.

இந்த வழியாக தினமும் 16 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 10 பயணிகள் ரயில்களும், 6 வாராந்திர விரைவு ரயில்களும், வாரம் இரு முறை இயக்கப்படும் 4 ரயில் களும், வாரம் மும்முறை இயக்கப்படும் 2 ரயில்களும் செல்கின்றன.
தஞ்சை வழித்தடம் மெயின் லைனாக இருந்த காலகட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டன. அதன் பின்னர் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் பலதரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Label