OUR CLIENTS
திமுக கூட்டணியை உடைக்கும் கமல்ஹாசன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி!
திமுக கூட்டணியை உடைக்கும் கமல்ஹாசன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி! Posted on 20-Jul-2018 திமுக கூட்டணியை உடைக்கும் கமல்ஹாசன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி!

வேலூர், ஜூலை 20-

தமிழகத்தில் திமுக கூட்டணியை உடைக்கும் முயற்சியில் நடிகர் கமல்ஹாசன் களம் இறங்கியுள்ளார். இதனால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தமிழகத்தில் புதியதாக தோன்றிய கட்சி மக்கள் நீதி மய்யம். இந்த கட்சியை தொடங்கியதும் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். இந்திய அரசியலை குறி வைக்கும் விதமாக பிற மாநில முதல்வர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் என்று பாஜவுக்கு எதிரான மாநில முதல்வர்களை தனது பக்கம் திரும்ப வைத்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு ஏழு கட்சி கூட்டணியோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் திமுகவின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின். அதில் ஓரளவு வாக்கு வங்கி உள்ள கட்சிகள் என்றால் அது காங்கிரசும், விடுதலை சிறுத்தைகளும்தான். இப்படி ஏழு கட்சி கூட்டணியில் இருந்தாலும் கூட தள்ளாடிக் கொண்டிருக்கும் அதிமுக அரசை அசைக்க முடியாமல் விரைவில் சட்டசபைக்கு தேர்தல் வரும் என்ற நம்பிக்கையில் உலா வந்து கொண்டிருப்பவருக்கு தன் பங்குக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

இந்நிலையில் இதன் உச்சகட்டமாக காங்கிரஸ் தலைவி சோனியா, ராகுல் காந்தி இருவரையும் நேரில் சந்தித்து பேசிவிட்டு திரும்பியுள்ளார் கமல்ஹாசன். அப்போது முதலே தமிழகத்தில் இனி வரவிருக்கும் தேர்தல்களில் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் என்றும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமைக்கும் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாயின.
இதனால் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவது உறுதியாகி விட்டது.

இதேபோன்று திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் ஸ்டாலினை புறக்கணித்து கமல்ஹாசனுடன் நட்பு பாராட்ட தொடங்கி விட்டாராம். அவர் விரும்பும் கூட்டணி ஆட்சியை கமல்ஹாசன் மட்டுமே செயல்படுத்த முடியும் என்று நினைக்கிறார். மேலும் கேரள மாநில கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் ரூட்டில் தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகளையும் வளைத்து போட்டு தனது தலைமையில் புது கூட்டணியை உருவாக்கும் விதமாக கமலின் செயல்பாடுகள் உள்ளன. 

அதிமுக ஆட்சியை கலைத்து பலமான கூட்டணியோடு தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிக்கலாம் என்று ஸ்டாலின் கனவை கமல்ஹாசன் இன்னும் சில மாதங்களில் கலைத்து விடுவார் என்றே சொல்கின்றனர். மேலும் கமல்ஹாசன் இப்போது நேரில் சந்தித்து வரும் பிற மாநில முதல்வர்களை வைத்துதான் மாநில சுயாட்சிக்கு ஆதரவான பாராட்டை நடத்த ஸ்டாலின் முடிவு செய்து இருந்தார். 

அதற்கும் சேர்த்தே கமல்ஹாசன் இப்போது ஆப்பு வைத்து விட்டதால் கூட்டணி கட்சி தலைவர்களை வேறு பக்கம் தாவவிடக் கூடாது என்று அதிக மரியாதை கொடுத்து வருகிறாராம் ஸ்டாலின். திருமாவளவன் அம்பேத்கருக்கு நிகரானவர் என்று ஸ்டாலின் ஐஸ் வைத்ததற்கும் இதுதான் காரணமாம். இதுதான் இப்படி என்றால் கமல்ஹாசன் தனது அரசியல் கருத்துக்களையும், கட்சி வளர்க்கவும் விஜய் தொலைக்காட்சியில் வாரம் இருமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்தி கொள்கிறார். 

அத்துடன் எனக்கு பிடிக்காத நூல் பூனூல் என்றும் கூறியிருந்தார். இப்படி பல தகவல்கள் கமல்ஹாசனை வலம் வந்தாலும் அவர் யாரைப் பற்றியும் கவலைப்படுவதாக தெரியவில்லை. தேர்தலில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் எப்படி மண்ணைக் கவ்வினார் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். அனைவரும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது என்பதை இன்றைய தலைமைமுறையினர் கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் எப்படி மக்களை கவர்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான்
பார்க்க வேண்டும்.

Label