OUR CLIENTS
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட்-1 முதல் எம்.பி.பி.எஸ். வகுப்புகள் தொடக்கம்!
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட்-1 முதல் எம்.பி.பி.எஸ். வகுப்புகள் தொடக்கம்! Posted on 30-Jul-2018 தமிழகம் முழுவதும் ஆகஸ்ட்-1 முதல் எம்.பி.பி.எஸ். வகுப்புகள் தொடக்கம்!

சென்னை, ஜுலை 30-

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு தமிழகத்தில் ஜூலை 1&ஆம் தேதி முதல் 7&ஆம் தேதி வரை நடைபெற்றது. 

அதில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 3501 மற்றும் 1198 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வில், தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, 196 கருணை மதிப்பெண் வழங்கவும், அதன் அடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு கலந்தாய்வை நடத்தவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 

அதனால், அகில இந்திய கலந்தாய்வு, தமிழகக் கலந்தாய்வு என அனைத்து நடைமுறைகளும் நிறுத்தப்பட்டன. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. 

ஆனால் அகில இந்திய கலந்தாய்வுக்கு மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை மீண்டும் தடைவிதித்துள்ளது. இதன் காரணமாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 30, 31-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, ஆகஸ்ட் 1&ஆம் தேதி (புதன்கிழமை) வகுப்புகள் தொடங்க உள்ளன.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ கூறியதாவது: தமிழகத்தைப் பொருத்தவரை அரசு ஒதுக்கீட்டுக்கான அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. இடங்களைப் பெற்ற பெரும்பாலான மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி ஆகஸ்ட் 1&ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன.

நீதிமன்ற தடை உத்தரவால் இரண்டாம் கட்ட அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு வெளியிடப் படவில்லை. அந்த முடிவுகள் வெளியிடப்பட்டு, மீதமுள்ள மாநில ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கும் இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள் ஆகியவற்றுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்றார் அவர்.

Label