ஹீரோவானார் ‘பிக் பாஸ்’ ஆரவ் Posted on 31-Jul-2018
சென்னை, ஜூலை 31-
கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகத் தேர்வானவர் ஆரவ். ‘ஓ காதல் கண்மணி’, ‘சைத்தான்’ ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ள ஆரவ், தற்போது ‘மீண்டும் வா அருகில் வா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், முதன்முதலாக ஹீரோவாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஆரவ். ‘தாதா 87’ என்ற படத்தை இயக்கிவரும் விஜய்ஸ்ரீ, இந்தப் படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தின் தலைப்பு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 10&ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.
‘தாதா 87’ படத்தில், சாருஹாசன் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தப் படத்தில் ஜனகராஜ் நடித்துள்ளார். படத்தின் தலைப்பில் உள்ள 87 என்பது சாருஹாசனின் வயதைக் குறிக்கிறது.