OUR CLIENTS
வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் இருக்கும் போதும் போராட்டம் இறந்த பிறகும் போராட்டம்!
வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் இருக்கும் போதும் போராட்டம் இறந்த பிறகும் போராட்டம்! Posted on 02-Aug-2018 வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் இருக்கும் போதும் போராட்டம் இறந்த பிறகும் போராட்டம்!

காட்பாடி, ஆக. 2-

வேலூர் மாநகராட்சியாக மாறியும் கூட காட்பாடியில் 4வது வார்டில் உள்ள சுடுகாடு சுத்தப்படுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது மிகவும் வருத்தத்துக்குரியது என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாநகராட்சியில் காட்பாடி முதல் மண்டலமாக செயல்படுகிறது. இதில் காட்பாடி 4வது வார்டுக்குட்பட்ட வசந்தபுரம், வீடிகே நகர், போன் மில், அசோக் நகர் பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளடங்கியுள்ளன. இந்த பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் தலித்துகள் மட்டும் சுமார் 4000 பேர்களுக்கு மேல் சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரமாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் இவர்களுக்கு காமராஜர் நகர் பகுதியில் சுடுகாடு ஒதுக்கி தரப்பட்டுள்ளது. இது தற்போது பயன்பாட்டில்தான் உள்ளது. பெயர் அளவில் மட்டுமே சுடுகாடு  என்று சொல்லலாம் என்ற அளவுக்கு அங்கு நிலைமை உள்ளது. சுடுகாடு என்று சொல்வதற்கு முட்புதர் மிகுந்த அந்த சாலையில் சடலத்தை எடுத்துச் செல்ல ஒருவழிப்பாதை மட்டுமே காணப்படுகின்றது. இருபுறங்களிலும் முட்புதர்கள் வளர்ந்து காடு போல் காணப்படுகிறது. மாலை
6 மணிக்கு மேல் சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலை  நிலவுகிறது. 

இதற்கு அடிப்படை காரணம் வெளிச்சமின்மையால் காட்டு பகுதிபோல் காட்சியளிக்கும் இந்த இடத்தில் இறுதிச் சடங்குகள் நடத்த உகந்த இடமாக  இருப்பதில்லை. இரவுதான் இந்த நிலை என்று சொல்ல முடியாது.  பகலிலும் இதே நிலைமைதான் தொடருகிறது. குறிப்பாகச் சொன்னால்  பகலில் ஒரு இரவு என்றே சொல்லலாம். மின்விளக்கு    அமைக்க மின்சார கம்பம் இருந்தும் மின் விளக்கு கிடையாது. தண்ணீர் வசதிக்காக கைப்பம்பு  இருக்க வேண்டும்.

ஆனால் கைப்பம்பு என்பதே இந்த  சுற்றுப்பகுதியில் இல்லை. இதனால்  இறுதிச் சடங்கு செய்ய வரும் பொதுமக்கள்  சொல்லொனா துயரத்துக்கு உள்ளாகின்றனர். சுடுகாட்டைச் சுற்றி சுற்றுச்சுவர் இல்லை. திறந்த வெளியில் இருப்பது பாதுகாப்பு இல்லாத நிலையை   உருவாக்கியுள்ளது .சுடுகாடு அமைந்துள்ள இடமானது மழைகாலங்களில் பெரிய குளம் போன்று  தண்ணீர் தேங்கி நின்று கடல் போன்று எழில்மிகு தோற்றத்தை காண்பிக்கிறது.  இனிவரும் காலங்களில்  இங்கு தேங்கும் மழைநீரை தேங்காதவாறு மண் நிரப்பி  மழைநீர் முழுவதுமாக வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருக்கும்போதுதான் நிம்மதியின்றி மனிதன் வாடுகின்றான் என்றால் இறந்தாலும் அவரை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ நிம்மதியாக  இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது  பெரும்  சிரமத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆதலால் விரைவில் போர்க்கால அடிப்படையில் மண் நிரப்பி  சுடுகாட்டை  சமன் செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டால் பொதுமக்கள் வசிக்கும் வீட்டின் அருகே  உடல்களை புதைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது தான் உண்மை நிலையாகும்.  மண்ணின் மைந்தர் திமுக முதன்மை செயலாளர், காட்பாடி தொகுதி எம்எல்ஏ  துரைமுருகனின் தொகுதியில் இறந்தவர்கள்  உடலை அடக்கம் செய்வது. எரியூட்டுவதில் பிரச்னை எழுந்துள்ளது அவரது  மக்கள் சேவைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பது  குறிப்பிடத்தக்கது.  ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல சுடுகாட்டின் நிலைமையும் இதுநாள் வரை மாறவேயில்லை. 

சட்டமன்ற தொகுதி நிதியை பயன்படுத்தி அரிசன சுடுகாட்டை சீர் செய்து தர வேண்டும் துரைமுருகன் என்ற  கோரிக்கை இந்தப்பகுதிவாழ் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. பொதுமக்கள் எதிர்பார்க்கும்  சுடுகாட்டை சீரமைக்கும் பணியை துரைமுருகன் எப்போது தொடங்குவார் என்பதே பலரது எதிர்பார்ப்பாக  உள்ளது. இந்த  சுடுகாடு சீரமைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று  சமூக ஆர்வலர்களும், தொகுதி பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

Label