OUR CLIENTS
வேலூரில் தெருக்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அவலம்!
வேலூரில் தெருக்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அவலம்! Posted on 02-Aug-2018 வேலூரில் தெருக்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அவலம்!

வேலூர், ஆக. 2-

வேலூரில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்க தெருக்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் இதுபோன்ற குறுகலான தெருக்களுக்குள் குழாய் அமைத்து அவசர காலங்களில் தீயை அணைக்க முன்னேற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்  மாவட்டம், வேலூர் கோட்டையின் பின்புறம் வேலூர் டவுன் ரயில் நிலையம் உள்ளது. இதற்கு அருகில் உள்ள சம்பத் நகரில் ஒருவீட்டில் நேற்று எதிர்பாராத வகையில் திடீரென்று மின்கசிவு ஏற்பட்டது. இதில் ஒரு குடிசை தீப்பற்றி எரிந்துள்ளது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென அருகிலுள்ள வீடுகளுக்கு பரவியதால் அப்பகுதி மக்கள் தங்களது உடைமைகளை காப்பாற்ற போராடினர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போனது. தீ வேகமாக பரவியதால் குடிசைகளுக்குள் இருந்த பொருட்களை மீட்க முடியாமல் தங்கள் உயிரைக்காத்துக் கொள்ள அங்கிருந்து தப்பியோட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த வேலூர் தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். அதற்குள் தீ  14 வீடுகளுக்கும் பரவியதால் அதிகமான பொருட்சேதம் ஏற்பட்டிருக்கும் என தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்தனர். மின்கசிவால் தீ ஏற்பட்டாலும் தீ அதிகமாக பரவ காரணம் அங்குள்ள குடிசைகளிலிருந்த ஒரு காஸ் சிலிண்டர் வெடித்துள்ளது என்று தெரியவந்துள்ளது. அதாவது அனைத்து இடங்களிலும்  இருந்த இன்னும் பல சிலிண்டர்கள் வெடிக்கும் முன்னரே தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து மேலும் தீ பரவுவதை விரைந்து தடுத்துள்ளனர்.

  மேலும் அவசர உதவி, பேரிடர் ஏற்பட்டால் மீட்புப்பணிகள் சிக்கலாகும் நிலையில் வேலூர் மாநகரின் பல பகுதிகள் இன்றளவும் உள்ளது. இதனால் பொருட்சேதம் மட்டுமல்லாது உயிர்சேதமும் ஏற்படும் நிலையில் வேலூரின் பல பகுதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் வெயில் காலம் வந்தாலே தீ விபத்து குறித்த பயமும் வேலூர் மாநகர மக்கள் மிரள்வதும் வாடிக்கையான விஷயமாகிப் போயுள்ளது. குறிப்பாக வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி, சைதாப்பேட்டை, ஓல்டு டவுன் உள்ளிட்ட பல பகுதிகள் தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலையிலேயே இன்றளவும் உள்ளது. இதுபோன்ற குறுகலான சந்துகளில் பெரும் விபத்துகள் ஏற்பட்டால் பொருட்சேதம் மட்டுமல்லாமல், உயிர்ச்சேதமும் ஏற்படும் பேரபாயம் தொடர்கிறது. 

குறுகலான சந்துகளில் செல்ல சிறிய தீயணைப்பு வாகனம் மற்றும் இருசக்கர தீ தடுப்பு வாகனங்கள் இருந்தாலும் பெரும் விபத்துகள் ஏற்பட்டால் எதிர்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனம். பெருகி வரும் மக்கள் தொகை, குறுகி வரும் பாதுகாப்பு அம்சங்கள் என நிலைமை மோசமாகி வருகிறது. 

வேலூரைப் பொறுத்தவரை மாநகர நிர்வாகம் இதுகுறித்து அலசி, விபத்துகள் வரும்முன் காக்கப்படவேண்டும் என்பதே நம் ஆவல். தீயணைப்பு வீரர்கள் தங்கள் இன்னுயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றவும், அவர்களது உடமைகளை மீட்கவும் போராடுகின்றனர். குறுகலான தெருக்களில் தண்ணீர் குழாய்களை பொறுத்தி வைத்து கொண்டு அதன் உதவியுடன் அவசர காலத்தில் ஏற்படும் தீ விபத்துகளை எதிர்கொள்ளவும், தீயை அணைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தருவது காலத்தின் கட்டாயமாகிறது. பொதுமக்கள் நலன் கருதியும், விலை மதிப்பில்லாத மனித உயிர்களை காப்பாற்றவும் முன்னேற்பாடுகள் மற்றும் உதவிகளை செய்து தர வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். மாநகராட்சி நிர்வாகம் மக்கள் நலனில் அக்கரை கொண்டு இந்த முன்னேற்பாடுகளை குறுகலான வீதிகளுக்கு செய்து தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label