OUR CLIENTS
பிக் பாஸ்-டாஸ்க் என்கிற பெயரில் மோசமாக நடந்து கொண்ட ஐஸ்வர்யா கமல் சாட்டையைச் சுழற்றுவாரா?
பிக் பாஸ்-டாஸ்க் என்கிற பெயரில் மோசமாக நடந்து கொண்ட ஐஸ்வர்யா கமல் சாட்டையைச் சுழற்றுவாரா? Posted on 02-Aug-2018 பிக் பாஸ்-டாஸ்க் என்கிற பெயரில் மோசமாக நடந்து கொண்ட ஐஸ்வர்யா கமல் சாட்டையைச் சுழற்றுவாரா?

சென்னை, ஆக. 2-

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்று அடிக்கடி கமல் கூறுவார்.
நேற்றையமுன்தினம் நடந்த நிகழ்ச்சி அப்படிப்பட்டதா என்று அவர்தான் விளக்கவேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது வினோதமாக நடந்துகொள்ளும் ஐஸ்வர்யா தத்தா, நேற்று முன்தினம் படுகேவலமான காரியம் ஒன்றை நிகழ்த்தினார். டாஸ்க் ஒன்றில் சர்வாதிகாரி வேடம் ஐஸ்வர்யாவுக்கு வழங்கப்பட்டது. இதை அவர் வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டினால் அடுத்த வார எலிமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்று தனியாக தகவல் சொன்னார் பிக் பாஸ். (ஆனால் இந்தச் சலுகை ஐஸ்வர்யாவின் பாதுகாவலர் டேனியலுக்கோ ஆலோசகர் ஐஸ்வர்யாவுக்கோ வழங்கப்படவில்லை. மேலும் பொதுமக்களுக்கும் இதுபோன்ற ஒரு சலுகை வழங்கப்படவில்லை. ஐஸ்வர்யாவுக்கு மட்டுமே பிரத்யேகமாக இந்தச் சலுகை வழங்கப்பட்டது.)
மேலும் ஐஸ்வர்யா பற்றி மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதும் அவருக்குத் தனி அறையில் டிவி வழியாகக் காண்பிக்கப்பட்டது. இதன்மூலம் ஐஸ்வர்யா போட்டியாளர்களை டாஸ்க் என்கிற பெயரில் பழிவாங்க நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்தார் பிக் பாஸ் (வாழ்க்கைப் பாடம்!). கடந்த வாரமே மிக மோசமாக மற்ற போட்டியாளர்களிடம் நடந்துகொண்ட ஐஸ்வர்யா தத்தா, இந்த வாரம் கூடுதல் சலுகையும் பிக் பாஸின் ஆதரவும் கிடைத்தவுடன் கேவலத்தின் உச்சிக்கே சென்று அருவருப்பை ஏற்படுத்தினார்.

தன் பேச்சைக் கேட்காத பாலாஜி மீது குப்பையைக் கொட்டும்படிக் கட்டளையிட்டார். அதைச் செய்ய மறுத்தபோது தானே குப்பையை பாலாஜி மீது கொட்டவும் செய்தார். இதைக் கண்டு மும்தாஜ் கதறியழுதார். மற்ற போட்டியாளர்களும் முடிந்தவரை ஐஸ்வர்யாவைத் தடுத்தார்கள். ஆனால் ஐஸ்வர்யாவின் நோக்கம், டாஸ்க்கைப் பயன்படுத்தி தன்னை அதுவரை மட்டம் தட்டிய அனைவரையும் பழிவாங்குவதாகவே இருந்தது. ரம்யா போல போட்டியை விட்டு வெளியேறினால் மட்டுமே தண்டனை கிடைக்கும், மற்றபடிப் போட்டியைப் பயன்படுத்தி என்ன அழிச்சாட்டியம் செய்தாலும், பழிவாங்கினாலும் பிரச்னை வராது, அதை பிக் பாஸ் நிர்வாகமும் டிஆர்பிக்காக வரவேற்கும் என்பதை அவர் நன்குப் புரிந்துகொண்டதுபோலத் தெரிந்தது. எனவே, தன்னிஷ்டத்துக்கு நடந்துகொண்டார்.

உண்மையிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி, வாழ்க்கைப் பாடமாக இருந்தால் பிக் பாஸ் நிர்வாகம், ஐஸ்வர்யாவை அழைத்து டாஸ்க்கைப் பழிவாங்கப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் இதுபோன்ற கேவலமான காட்சிகள் மக்களிடையே பரபரப்பை உண்டாக்கும் என்பதால் ஐஸ்வர்யாவின் செயலைத் தடுக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. அவருடைய செயல்களுக்கு நியாயமாக ஒரு மனநல மருத்துவரை அழைத்துப் பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால் சக போட்டியாளர்கள் மட்டுமே ஐஸ்வர்யாவின் அக்கிரமத்தைக் கண்டு டாஸ்க்கையும் தாண்டிக் கவலைப்பட்டார்கள். அறிவுரை கூறினார்கள். மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டார்கள்.

இன்றைய நிகழ்ச்சியிலும் ஐஸ்வர்யாவுக்கும் சென்றாயனுக்கும் இடையே சண்டை நிகழ்வதாகக் காண்பிக்கப்படுகிறது. இதனால் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் நீதி என்ன? இந்த டாஸ்க்கின் முடிவில் வெற்றிகரமாக டாஸ்க்கை முடித்துவிட்டதாக அடுத்த வார எலிமினேஷனிலிருந்து ஐஸ்வர்யா தப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டால் அது என்ன மாதிரியான பாடத்தைக் கற்பிக்கும்? இப்படியே எல்லாப் போட்டியாளர்களும் டாஸ்க்குகளைப் பழிவாங்கப் பயன்படுத்திக்கொண்டால் அது எங்குப் போய் முடியும்? 

ஓவியா, ஜூலி போன்றோரால் கடந்த வருட நிகழ்ச்சியைக் குழந்தைகளும் பார்த்தார்கள். ஆனால் இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியின் தடமும் தரமும் மாறிவிட்டன. பெண்கள் கவர்ச்சியாக உடை அணிந்து வருவது சகஜமாகி விட்டது. தினமும் ஏராளமான கெட்ட வார்த்தைகள் பேசப்படுகின்றன. பீப் சவுண்ட் இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு. வாக்கெடுப்பிலும் வெளியேற்றம் தொடர்பான முடிவுகளிலும் பார்வையாளர்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் ஏற்படுகின்றன. சிலருக்கு மட்டுமே பிக் பாஸ் நிர்வாகம் சாதகமாக நடந்துகொள்கிறதோ என்கிற சந்தேகங்களையும் ரசிகர்கள் மனத்தில் உருவாக்கி விட்டார்கள். 

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் நடத்தையை கமல் கடுமையாகக் கண்டிக்க வேண்டும், தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று ஏராளமான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சமூகவலைத்தளங்களில் ஐஸ்வர்யாவுக்கு ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்தவர்கள் அப்படியே மாறி நேற்றைய செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பார்வையாளர்களின் உணர்வுகளுக்கு பிக் பாஸில் மதிப்பளிக்கப்படுமா? சாட்டையைச் சுழற்றுவாரா கமல்?

Label