OUR CLIENTS
மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்சம் நிதி முறைகேடு!& ஆட்சியர் நேரடி ஆய்வு தணிக்கை அலுவலர் மோகன் பணியிடை நீக்கம்!
மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்சம் நிதி முறைகேடு!& ஆட்சியர் நேரடி ஆய்வு தணிக்கை அலுவலர் மோகன் பணியிடை நீக்கம்! Posted on 02-Aug-2018 மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்சம்  நிதி முறைகேடு!& ஆட்சியர் நேரடி ஆய்வு தணிக்கை அலுவலர் மோகன் பணியிடை நீக்கம்!

வேலூர், ஆக. 2-

மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்ச ரூபாய் நிதி முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக ஆட்சியர் எஸ்.ஏ. ராமன்  நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார். இதில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக உதவி இயக்குநர் அலுவலகத்தில் தணிக்கை அலுவலராக பணிபுரிந்த மோகன் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம், மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கும், ஊரக வளர்ச்சித்  துறை உயர் அதிகாரிகளுக்கும் பலமுறை புகார்கள் சென்றன. கடந்த 2014& ஆம் ஆண்டு முதல் நடப்பு நிதியாண்டு வரை பல்வேறு திட்டங்களில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக  அப்புகார்களில் தெரிவிக் கப்பட்டது. இதுதொடர்பாக காலச்சக்கரம் நாளிதழ் கடந்த 2ம் தேதி விரிவாக செய்தி வெளியிட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு நடத்தினார்.

பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு, தனிநபர் கழிப்பறை ஆகிய திட்டங்களில் பல லட்சம் ரூபாய் நிதி முறைகேடுகள் நடந்துள்ளன. அதேபோல அரசுத் திட்டங்களுக்காக வாங்கி, மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகள், அலுவலக வளாகத்தில் வளர்ந்திருந்த தேக்கு மரங்கள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. செயல்படுத்தாத அரசுத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டது போல கோப்புகள் தயாரித்து, அதற்குரிய பணத்தை முறைகேடாக எடுத்துக் கொண்டது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு சென்றுள்ளன.  

ஏற்கெனவே மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்த ஒருவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக அவர் உள்ளிட்ட சில அதிகாரிகளுக்கு 17 பி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பல்வேறு புகார்கள் சென்றதின் அடிப்படையில், ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று ஆய்வு நடத்தினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோரை நேரடியாக அழைத்து விசாரணை நடத்தினார். மேலும், அலுவலகக் கோப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி,  ஊராட்சிகளின் உதவி இயக்குநர் (தணிக்கை) லட்சுமணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜான் மில்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ் சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நடைபெறாத அரசுப் பணிகள் நடைபெற்றது போல போலியாக ஆவனங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றுக்கான பணத்தை அரசுக் கணக்கில் இருந்து எடுத்தது உள்ளிட்ட பல்வேறு நிதி முறைகேடுகள் காரணமாக அரசு திட்டப் பணியை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்துள்ள பல்வேறு ஒப்பந்ததாரர்களுக்கு, அளிக்கப்பட வேண்டிய பணம் தரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மாதனூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைக்கூட மேற்கொள்ள முடியாமல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  

அரசியல் தலையீடு காரணமாக இந்த ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை சுதந்திரமாக பணி செய்யவிடாமல் அடிக்கடி பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.  நேர்மையாக பணி செய்யும் அதிகாரிகள் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். உயரதிகாரிகள் கேட்கும் ஆவனங்களைக் காணவில்லையென அலுவலர்கள் கூறுகின்றனர்.

ஒப்பந்தப் பணிகள் சரிவர செய்து முடிக்காதபோதிலும், திட்டப் பணியே மேற்கொள்ளாதபோதிலும் அதற்கான பணத்தை உடனடியாக வழங்குமாறு கூறி அரசியல் தலையீடு காரணமாக முறைகேடாக பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.

 அதனால் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றுள்ள நிதி முறைகேடுகள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்; மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் பணியாளர்கள், ஊழியர்கள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

இந்நிலையில் நேற்றுமுன்தினம் பணி ஓய்வு பெற இருந்த உதவி இயக்குநர் அலுவலகத்தில் தணிக்கை அலுவலராக பணிபுரிந்து வந்த மோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு மோகனிடம் நேற்று வழங்கப்பட்டது. மோகன் வேலூர் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர். வருவாய்த்துறை (ஊரக வளர்ச்சி துறை) என்று பெயர் வைத்துள்ளது போன்று வருவாயை மட்டுமே பார்க்கின்றனர். கடமையை செய்ய இதில் யாரும் முன்வரவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும். காலச்சக்கரம் செய்தி எதிரொலியால் இந்த பணியிடை நீக்கம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று ஊரக வளர்ச்சித்துறையில் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.

Label